த்ரீ ஆஃப் அஸ் – (Three of us – இந்தி) – நெட்பிளிக்ஸ்
ஞாபகமறதி நோயின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார் மனைவி. இன்னும் சில காலத்தில் எல்லாவற்றையும் மறந்துவிடப் போகிறோம் என்ற நிலையில், சிறுவயதில் தான் வசித்த ஊருக்கு போக விரும்புவதாக கணவரிடம் கூறுகிறார். அந்த ஊருக்கு போன பிறகுதான் மனைவி ஊரைவிட தன் பள்ளிக்கால காதலனை பார்க்க வந்திருப்பது கணவருக்கு தெரிகிறது. அவரும் காதலனைக் காண மனைவியை அழைத்துச் செல்கிறார். ஒரு பக்கம் பழைய காதலன், மறுபக்கம் கணவன் என்று இருவருடனும் சேர்ந்து ஊரைச் சுற்றும் நாயகி, கடைசியில் இனிமையான நினைவுகளுடன் ஊர் திரும்புகிறார்.
மென்மையான இந்த கதையை மிகச் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் அவினாஷ் அருண். ஒரு காட்சியில் முன்னாள் காதலனுடன் மகிழ்ச்சியாக மனைவி பேசிக்கொண்டிருப்பதை பார்க்கும் கணவன் பின்னர் அவரிடம் சென்று, ‘என்னுடன் நீ சந்தோஷமாகத்தான் வாழ்கிறாயா’ என்று ஏக்கத்துடன் கேட்கிறார். இன்னொரு காட்சியில் நாயகியைப் பற்றி அவளது முன்னாள் காதலன் கவிதை எழுத, அதைப்படிக்கும் அவனது மானைவி, ‘உன்னுடன் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தும் என்னைப்பற்றி நீ ஒரு கவிதைகூட எழுதவில்லையே என்று கேட்கிறார். இப்படி படம் முழுக்க உணர்ச்சி பிரவாகமாக இருக்கிறது.
கணவராக நடித்துள்ள சுவானந்த் கிர்கிரேவும், மனைவியாக நடித்துள்ள ஷெஃபாலி ஷாவும், காதலனாக நடித்துள்ள ஜெய்தீப் அகாவட்டும் அந்தந்த பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். பரபரப்பில்லாத கவிதைத்தனமாக படங்களை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம்.
தி ஃப்ரீலான்சர் (The Freelancer – இந்தி வெப் சீரிஸ்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண்ணை ஏமாற்றி, அவளது புகுந்த வீட்டு உறவுகள் சிரியாவுக்கு கொண்டுசெல்கிறார்கள். அவர்கள் குடும்பம் அங்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காக உள்நாட்டு போரில் ஈடுபடுவது அங்கு சென்ற பிறகுதான் அவளுக்கு தெரிகிறது. இந்த சூழலில் இருந்து அவளை மீட்க ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி முயற்சி செய்கிறார். அவரால் அவளை மீட்க முடிந்ததா என்பதுதான் இந்த வெப் சீரிஸின் கதை.
பரபரப்பான ஆக்ஷன் கதைகளை விரும்புபவர்களை இந்த வெப் சீரிஸ் நிச்சயம் ஏமாற்றாது.
தோல்வி எஃப்சி (Tholvi fc – மலையாளம்) – அமேசான் ப்ரைம்
அப்பா, அம்மா, மூத்த மகன், இளைய மகன் என்று ஒரு குடும்பத்தில் 4 பேர். இந்த 4 பேரும் வெற்றிகளை ருசிக்காமல் தோல்விகளை மட்டுமே தினமும் சந்திக்கிறார்கள்.
அப்பாவுக்கு பங்குச் சந்தையில் தோல்வி. எழுத்தாளராக அம்மாவுக்கு ஆசை. ஆனால் அவர் எழுதிய எல்லா கதைகளும் பிரசுரமாகாமல் திரும்பி வருகின்றன. பெரிய அளவில் தேநீர் பிசினஸ் செய்ய நினைக்கும் மூத்த மகனாலும் லாபம் ஈட்ட முடியவில்லை. இளைய மகன் பயிற்சியாளராக இருக்கும் கால்பந்து கிளப் எல்லா போட்டிகளிலும் மோசமாக தோற்கிறது.
இப்படி வரிசையாக தோல்விகளை சந்திக்கும் குடும்ப உறுப்பினர்கள் எப்படி வெற்றிப்பாதைக்கு திரும்புகிறார்கள் என்பதை ‘தோல்வி எஃப்சி நகைச்சுவையுடன் சொல்கிறது.
செவப்பி – தமிழ் – ஆஹா
கிராமத்தில் ஒரு சிறுவன் ஆசையாக கோழி வளர்க்கிறான். ஒரு நாள் கோழி அவனைவிட்டு பிரிகிறது. ஊரே அந்தக் கோழியை தேடுகிறது. ஒரு கட்டத்தில் இந்த சம்பவத்தால் ஒற்றுமையாக இருந்த கிராமம் இரண்டாகிறது. அந்தச் சிறுவனும் கோழியும் ஒன்று சேர்ந்தார்களா? கிராமத்தில் மீண்டும் ஒற்றுமை திரும்பியதா என்பதுதான் படத்தின் கதை.