No menu items!

லட்சத்தீவு Vs மாலத்தீவு! – சுற்றுலா சொர்க்கமாகுமா?

லட்சத்தீவு Vs மாலத்தீவு! – சுற்றுலா சொர்க்கமாகுமா?

‘லட்சத்தீவு…’ இதுநாள் வரை இந்த தீவுக்கூட்டம் எங்கே இருக்கிறது என்பதே பலருக்குத் தெரியாது.

லட்சத்தீவா? அது எங்கேயோ தூத்துக்குடி பக்கம் கோவில்பட்டி பக்கம் இருக்கிறது என்று பலர் நினைத்துக் கொண்டிருந்த நேரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்த தீவுகளுக்கு ஒரு என்ட்ரி கொடுத்தாலும் கொடுத்தார், லட்சத்தீவு எங்கே இருக்கிறது என்று உலக வரைபடத்தில் லட்சக்கணக்கானவர்கள் இப்போது தேடத் தொடங்கியிருக்கிறார்கள்.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 220 முதல் 440 கிலோ மீட்டர் மேற்கே, கடலில் கொட்டிக்கிடக்கும் ஒரு தீவுக்கூட்டம்தான் லட்சத்தீவு.

ஒரு காலத்தில் இந்த தீவுக்கூட்டத்தின் பெயர் முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம். லட்சத்தீவுகள், பன்னீராயிரம் என்று பெயர்கள் இருந்தாலும், இந்த தீவுக் கூட்டத்தில் இருப்பவை வெறும் 36 தீவுகள்தான்.

கவரட்டி, அகட்டி, அமினி, கடமத், கல்பேனி, செட்லெட், பங்காரம்.. இவை எல்லாம் கொஞ்சம் பெரிய தீவுகள். இங்கே பேசப்படும் மொழி மலையாளம். மினிகாய் தீவு மட்டும் இந்த தீவுக்கூட்டத்தை விட்டு கோபித்துக் கொண்டு 200 கிலோ மீட்டர் தூரம் தனியாக தெற்கே விலகி நிற்கிறது. இங்கே பேசப்படும் மொழி மாஹே.

இயற்கை எழில் கொட்டிக்கிடக்கும் லட்சத்தீவில் பத்து தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ்கிறார்கள். பல தீவுகள், மனித வாடையே இல்லாத தீவுகள்.

இன்றைக்கு கேரளமாக இருக்கிற அன்றைய சேர நாட்டின் தலைநகர் கொடுங்காளூரில் இருந்து மன்னர் சேரமான், புத்தர் பாணியில், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஒருநாள் மெக்காவுக்குப் புறப்பட்டு போய்விட, கப்பல்கள் மூலம் அவரைத் தேடிப்போனவர்கள்தான் லட்சத்தீவுகளில் முதன்முதலாகக் குடியேறியவர்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவின் தெற்கே இருக்கும் ஒரு குட்டி நாடு மாலத்தீவு. மாலத்தீவும், லட்சத்தீவுகளைப் போல ஒரு தீவுக்கூட்டம்தான். அந்த சின்ன நாடு, சுற்றுலாத்துறையில் சும்மா கொடிகட்டிப்பறக்கிறது. மாலத்தீவைப் போலவே லட்சத்தீவிலும் அழகழகான வெண்மணல் கடற்கரைகள் உண்டு. அப்புறம் என்ன? மாலத்தீவைப் போல லட்சத்தீவை ஏன் மாற்றக்கூடாது என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. இதற்குக் காரணம் பிரதமர் மோடியின் பயணம்தான்.

அடிப்படையில் மாலத்தீவுக்கும், லட்சத்தீவுக்கும் இடையில் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. மாலத்தீவு வெளிநாடுதான். ஆனால் அங்கே போக விசா தேவையில்லை. லட்சத்தீவு, இந்தியாவின் ஒரு யூனியன் பகுதி. ஆனால், உரிய அனுமதி இருந்தால் மட்டும்தான் லட்சத்தீவில் ஒருவர் கால்வைக்க முடியும்.

லட்சத்தீவில் கால்பதிப்பது அவ்வளவு எளிது இல்லை. சிந்துபாத், கன்னித்தீவில் போய் கால்வைப்பதைவிட சிரமமான வேலை இது.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து மட்டும்தான், லட்சத்தீவுக்கு ஒருவர் விமானம் மூலமோ கப்பல் மூலமோ போக முடியும். அதற்கு நுழைவு அனுமதி வேண்டும். அதற்காக கொச்சியில் 200 ரூபாய் வங்கி சலான் கட்டி, விண்ணப்பிக்க வேண்டும். காவல்துறை தடையற்ற சான்று தர வேண்டும். அந்த சான்றுக்காக ஓரிரு நாள்கள் தேவுடு காக்க வேண்டும். அதன்பின் நுழைவு அனுமதி கிடைத்தால் மட்டும்தான் லட்சத்தீவுக்குள் ஒருவர் நுழைய முடியும். லட்சத்தீவைச் சேர்ந்த ஒருவர் உங்களுக்காக பரிந்துரை செய்து விருந்தினராக அழைத்திருந்தார் என்றால் உத்தமம். உங்கள் பயணம் சற்று உறுதியாகும்.

விமானப்பயணம் என்றால் அல்லயன்ஸ் விமான சேவை மட்டும்தான். அதுவும் ‘இப்போதைக்கு டிக்கெட் இல்லை’ என்று கதவைச் சார்த்திவிடும். அகட்டி என்ற தீவில் மட்டும்தான் ஒரேயொரு விமான ஓடுதளம். இங்கே சிறிய ரகவிமானங்கள்தான் ஏறி இறங்க முடியும். ஆகவே, குறைந்த இருக்கைகள் கொண்ட சின்ன விமானங்கள் மட்டும்தான் லட்சத்தீவை நோக்கி சிறகை விரிக்க முடியும் என்ற நிலை.

இதுவரை இப்படித்தான் லட்சத்தீவின் நிலைமை இருந்தது. இதை எல்லாம் அடியோடு மாறினால்தான், லட்சத்தீவு, மாலத்தீவு போல பொலிவு பெறும் என்றநிலையில், லட்சத்தீவில் இப்போது புதுப்புது மாற்றங்கள் நடந்து வருகின்றன.

இப்போது, நுழைவு அனுமதிக்காக இ-விண்ணப்பம் பெறலாம். ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்.

அல்லயன்ஸ் விமான சேவைகள் லட்சத்தீவில் இனி அதிகப்படுத்தப்பட இருக்கின்றன. கூடவே ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் களம் இறங்கி, லட்சத்தீவுக்கு புதிய விமானங்களைப் பறக்க விட இருக்கிறது. அகட்டியில் உள்ள விமானதளம் ஏ320 விமானங்கள் வந்து இறங்க வசதியாக விரிவுபடுத்தப்பட இருக்கிறது. 189 பயணிகள் இனி ஒரேநேரத்தில் லட்சத்தீவில் கால்பதிக்க முடியும். மினிகாய் தீவில் புதிதாக ஒரு விமானதளம் கட்டப்பட இருக்கிறது.

மாலத்தீவு போலவே சுற்றுலாவுக்கான அனைத்து அம்சங்களும் லட்சத்தீவில் கொட்டிக் கிடக்கின்றன. மியாமி, மெரினாவுடன் போட்டிபோடும் அழகழகான அலைமோதும் கடற்கரைகள், தென்னைமர வரிசைகள், கடலோர தங்கும் குடில்கள், கடலுயிர் காட்சியகம் எல்லாம் லட்சத்தீவிலும் இருக்கின்றன.

லட்சத்தீவுகளில் சன்பாத் எனப்படும் சூரிய குளியல் எடுக்கலாம். ஸ்கூபா உடையணிந்து நீர்மூழ்கலாம். ஸ்னோர்க்கிலிங், பாய்மரப் படகுச் சவாரி, விண்ட்சர்ப், ஜெட் ஸ்கீயிங் செய்யலாம். கண்ணாடி அடிப்பாகம் கொண்ட படகில் போய் பவழப்பாறைகளைப் பார்த்து ரசிக்கலாம்.

லட்சத்தீவில் ஏற்கெனவே தங்கும் விடுதிகள், விருந்தினர் மாளிகைகள் உள்ளன. இந்தநிலையில் சுற்றுலாத்துறையை வளர்ப்பதற்காகவே லட்சத்தீவில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ஓய்வறைகள் சுறுசுறுப்பாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மனிதர்கள் வசிக்காத சுகெலி தீவில் கூட, 110 அறைகளுடன் தாஜ் ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது. 2026ஆம் ஆண்டு இந்த ஓட்டல் திறக்கப்பட இருக்கிறதாம்.

சரி. லட்சத்தீவு சுற்றுலா சொர்க்கமாக வளர்வதற்கு ஏதேனும் தடைகள் இருக்கின்றதா? சில தடைகள் இருக்கின்றன. அரபிக்கடலில் குறிப்பிட்ட காலத்தில் வீசும் தென்மேற்குப் பருவக்காற்று, லட்சத்தீவை நேரடியாகத் தாக்கக் கூடியது. காற்றை தடைசெய்யக்கூடிய பெரிய கட்டுமானங்கள், கட்டடங்கள் எதுவும் லட்சத்தீவில் இல்லை.

ஆகவே, கட்டடங்களை இங்கே மணலில் அஸ்திவாரமிட்டு கட்டுவதற்குப் பதிலாக, பவழப்பாறைகளின் மேல் அஸ்திவாரமிட்டு கட்டினால் மட்டும்தான் அவை நீடித்து நிற்கும். இதனால் பவழப்பாறைகள் அழிந்து சுற்றுச்சூழல் சீர்கேடு அடைய வாய்ப்பிருக்கிறது.

லட்சத்தீவில் ஒவ்வொரு தீவுக்கும் இடையே கடல் ஆழம் வேறுபடும். தட்பவெப்ப நிலை, வானிலையில் கூட வேற்றுமைகள் உண்டு. இது சுற்றுலாப்பயணிகளை கொஞ்சம் சிரமப்படுத்தும்.

லட்சத்தீவில் வாழும் மக்கள் சிலரிடம் 1800ஆம் ஆண்டளவில் உள்ள பிரிட்டிஷ் காலத்து நில ஆவணங்கள் இருக்கின்றன. இவர்களுக்கு உரிய இழப்பீடு தந்து அந்த நிலங்களைப் பெற்று அங்கே சுற்றுலா வசதிகளை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான வேலையில்லை. இருந்தும் அதற்கான வேலைகள் நடக்கின்றன.

லட்சத்தீவின் மொத்த பரப்பளவே 32 சதுர கிலோ மீட்டர்கள்தான். மொத்த மக்கள் தொகை 64 ஆயிரம். அவர்களில், 96 சதவிகிதம் பேர் முஸ்லீம்கள். அமைதியும் அழகும் கொஞ்சும் இந்த தீவுகளில் சுற்றுலா மேம்பட்டால் உள்ளூர்காரர்களின் நிலை கண்டிப்பாக உயர்வடையும். அதேநேரத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் அதிகரிக்க அதிகரிக்க தீவின் அமைதி பறிபோய்விடும். அழகு குறையும். கலாச்சார ரீதியான சில மனக்கசப்பு களும் கூட ஏற்படலாம்.

லட்சத்தீவு செல்ல நுழைவு அனுமதி கிடைத்தவுடன், கொச்சி விமானநிலையத்தில் 300 ரூபாய் கிரீன் டேக்ஸ் செலுத்தியபின் விமானம் ஏறினால், அடுத்த ஒன்றரை மணிநேரத்தில் லட்சத்தீவு. கப்பல் என்றால் 14 முதல் 18 மணிநேர பயணம்.

இதுநாள் வரை மீன்பிடிப்பையும், தென்னை மரங்களையும் மட்டுமே நம்பிவாழ்ந்த லட்சத்தீவில், சுற்றுலா இனி சூடுபிடிக்க போகிறது.

இந்த குட்டித்தீவுகளை முடிந்தால் நீங்கள்கூட எட்டிப்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...