கொரோனா வைரஸ் திடீரென ஒரு நாள் நம் அன்றாட வாழ்க்கையை முழுமையாக புரட்டிப் போட்டுவிட்டு போனதை மறந்திருக்க மாட்டோம். இப்போது கொரோனாவை விட 20 மடங்கு கொடிய புதிய வைரஸ் வருவதாக எச்சரித்துள்ளது, உலக சுகாதார மையம்.
என்ன வைரஸ் அது? இது என்ன செய்யும்?
உலக சுகாதார அமைப்பு (WHO), Disease – x என்கிற புதிய வைரஸ் இருப்பதைக் கண்டறிந்து, அது ஏற்கனவே உலகில் பரவியிருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
Disease X பற்றி, “இந்த புதிய வைரஸ், கோவிட் -19ஐ விட பலமடங்கு ஆபத்தானதாக இருக்கலாம். கோவிட்-19 கிட்டத்தட்ட ஏழு மில்லியன் உயிர்களைக் கொன்றது. இந்த புதிய வைரஸ் அதை விட பன்மடங்கு பரவ வாய்ப்புள்ளது” என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், ‘ஸ்பைன் புளு காய்ச்சலைப் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்’ என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2020ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவராக இருந்த சுகாதார நிபுணர் டேம் கேட் பிங்காம் இது பற்றி கூறும்போது, “கோவிட்-19 உடன் ஒப்பிடும்போது DiseaseX – 20 மடங்கு அதிக இறப்புகளை ஏற்படுத்தும். சுமார் 50 மில்லியன் இறப்புகளை விளைவிக்கும் திறனைக் கொண்டிருக்கலாம்” என்று கூறுகிறார்.
மேலும், “எபோலாவின் இறப்பு விகிதத்துடன் ஒப்பிடும்போது 67 சதவீதம் அதிகமாக இருக்கும். Disease X என்பது தட்டம்மை போன்ற தொற்றுநோயாக இருப்பதற்கும் வாய்ப்புண்டு. ஆயிரக்கணக்கான வைரஸ்களை உள்ளடக்கிய 25 வைரஸ் குடும்பங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இன்னும் மில்லியன் கணக்கான வைரஸ்கள் கண்டுபிடிக்கப்படவில்லை” என்றும் பிங்காம் தெரிவித்துள்ளார்.
தற்போது வரையில் ‘Disease X’க்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.