No menu items!

உதயநிதி கண்டிப்பு அண்ணாமலை கடுப்பு! – மிஸ் ரகசியா!

உதயநிதி கண்டிப்பு அண்ணாமலை கடுப்பு! – மிஸ் ரகசியா!

“அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை திமுக தலைமை சந்தேகமா பார்த்துட்டு இருக்காம்” என்றவாறு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

 “பழனிவேல் தியாகராஜன் மேல என்ன சந்தேகம்?”

 “மகாராஷ்டிராவுல தேசியவாத காங்கிரஸ் கட்சி ரெண்டா உடைஞ்சுடுச்சு. இதுக்கு பின்னாடி பாஜக இருக்கறது ஊரறிஞ்ச விஷயம்.  இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருக்கு ஆறுதலையும், தன்னோட ஆதரவையும் சொல்ல போன் போட்டிருக்காரு முதல்வர் ஸ்டாலின். அப்ப அவர்கிட்ட பேசின சரத் பவார், ‘எங்க கட்சியை உடைச்ச  பிறகு நிதிஷ் குமாரோட கட்சியை உடைக்க பாஜக திட்டமிடுது. அதை உடைச்ச பிறகு உங்க மேல பாஜக பாயலாம். உங்க கட்சியை உடைக்க முயற்சிக்கலாம். அதனால எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருங்க’ன்னு எச்சரிச்சு இருக்கார்.  திமுகல இப்போதைக்கு கொஞ்சம் அதிருப்தியோட  இருக்கறவர் பழனிவேல் தியாகராஜன்தான் அதனால அவரை சந்தேகமா பார்த்துட்டு இருக்காம் திமுக தலைமை.”

 “அவர்தான் கட்சி நிகழ்ச்சிகள்ல கலந்துக்கறாரே?”

“அவர் கலந்துக்கிட்டாலும் மத்த அமைச்சர்கள் அவரைக் கண்டுக்கறது இல்லை. போன வாரம் அழகர் கோயில்ல  நடந்த ஒரு அரசு நிகழ்ச்சிக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை கூப்பிட்டு இருந்தாங்க. இதே நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் சேகர்பாபுவையும், மூர்த்தியையும் கூப்டிருந்தாங்க. நாலரை மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும்னு அறிவிச்சு இருந்ததால   பழனிவேல் தியாகராஜன் 4 மணிக்கெல்லாம் போயிருக்கார். ஆனா மத்த ரெண்டு பேரும் வரலை. ஐந்தரை மணி வரைக்கும் காத்திருந்து பழனிவேல் தியாகராஜன் கிளம்பிப் போன பிறகுதான் அவங்க ரெண்டு பேரும் வந்தாங்களாம். ‘பிடிஆர் இதுவரைக்கும் காத்திருந்து இப்பதான் போனார்’னு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்ல, அவங்க ரெண்டு பேரும் எந்த ரியாக்‌ஷனையும் காட்டலையாம்.”

“திமுக இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு இருக்காங்களே?”

 “இதில அமைச்சர்கள்,  மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களோட  சிபாரிசுகளை  பெரிய அளவில கண்டுக்கலையாம். உதயநிதி ஸ்டாலின் இதுக்குன்னு ஒரு குழு அமைச்சு தகுதியானவங்களை நேர்காணல் செய்து நியமிச்சு இருக்கார்.  அதே நேரத்துல  வாழ்த்து பெறுவதற்கு யாரும் வர வேணாம்னும்  கண்டிப்பா உத்தரவு போட்டு இருக்கார். அப்பத்தான் பட்டியலை  மாற்றச் சொல்லி கேட்டு யாரும் வர மாட்டாங்கன்னு அவர் நினைக்கறாராம். அடுத்ததா பாராளுமன்றத் தேர்தல்ல இளைஞர் அணிக்கு 10 சதவீதம் ஒதுக்கச் சொல்லி கட்சித் தலைமையைக் கேட்கப் போறாராம் உதயநிதி.”

“அண்ணாமலை மேல தமிழிசை சவுந்தரராஜன் கோபமா இருக்கறதா சொன்னாங்களே?”

 “ஆளுநர் அரசியல் பேசக் கூடாதுன்னு சமீபத்துல அண்ணாமலை சொன்னது ஞாபகம் இருக்கா?… அது தமிழக ஆளுநரை மனசுல வச்சு சொன்னதில்லையாம். தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசையை நினைச்சு சொன்னதாம்.   தமிழிசை அடிக்கடி தமிழக எல்லைக்குள்ள வந்து அரசியல் கருத்துகளை சொல்லிட்டு இருக்கார். அடிக்கடி செய்தியாளர்களை சந்திக்கறார். அவர் தன்னோட ஏரியாவுக்கு வந்து கருத்து சொல்றது அண்ணாமலைக்கு பிடிக்கலை அதனாலதான் அப்படி சொல்லி இருக்கார். இது தமிழிசைக்கு தெரியவர, அவர் அண்ணாமலை மேல செம கடுப்புல இருக்காராம்.”

 “காவிரி நீர் பிரச்சினையும், மேகேதாட்டு அணைப் பிரச்சினையும் திரும்ப தீவிரமாக ஆரம்பிச்சிருக்கே. இது திமுக – காங்கிரஸ் கூட்டணியை பாதிக்குமா?”

“தமிழக காங்கிரஸ் தலைமைக்கு அந்த பயம் இருக்குது. இது தொடர்பா தமிழக பொறுப்பாளரும் கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சருமான தினேஷ் குண்டுராவை சந்திச்சு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசி ஒருக்கார்.  ‘பாராளுமன்றத் தேர்தல் வரைக்கும்  மேகேதாட்டு அணை விவகாரத்தை மூட்டை கட்டி வைங்க. இல்லைன்னா  பாராளுமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும்’னு சொல்லி இருக்கார். தினேஷ் குண்டு ராவும் இதுபத்தி  கர்நாடக முதல்வரிடம் இது பற்றி பேசியிருக்காராம். அதனால இந்த விஷயம் இனி கொஞ்சம் தணியும்னு பேசிக்கறாங்க.”

 “அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பத்தி ஏதாவது நியூஸ் இருக்கா?”

 “இந்த கூட்டத்துல பேசின எடப்பாடி, கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். மாவட்ட செயலாளர்கள் 40 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து பாராளுமன்றத் தேர்தல் வேலையை தொடங்குங்கள். உறுப்பினர் சேர்க்கையையும் கவனியுங்கள்னு சொல்லி இருக்கார். கூடவே பாஜகவோட கூட்டணி பத்தி டெல்லி தலைவர்கள் கிட்டதான் பேசுவேன். அண்ணாமலைகிட்ட எல்லாம் பேச முடியாதுன்னும் விளக்கியிருக்கார். அவரைப் பொறுத்தவரைக்கும் பாஜகவுக்கு வலியப் போய் ஆதரவு தர்றதா இல்லை. அவங்களே தேடி வரட்டும்னு காத்திருக்க முடிவு செஞ்சிருக்கார். அதனாலதான் இப்ப பொது சிவில் சட்டத்துக்கு எதிராக்கூட கருத்து தெரிவிச்சிருக்கார். தேவைப்பட்டா தனியாக்கூட நிக்கலாம்கிற மனநிலையிலதான் அவர் இருக்கார்.”

“இன்னைக்கு ரொம்ப வேகமா நியூஸ் சொல்லிட்ட”

“ஆமாம். இப்ப உள்ள ஜெனரேஷனுக்கு வேகமா நியூஸ் சொன்னாதான் பிடிக்குது” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...