No menu items!

NFT – நோகாமல் லட்சங்களை அள்ளும் நட்சத்திரங்கள்!

NFT – நோகாமல் லட்சங்களை அள்ளும் நட்சத்திரங்கள்!

என்.எஃப்.டி, இந்த மூன்றெழுத்து இன்று சினிமாவின் வருமானத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருக்கின்றன.

இதனால் இப்பொழுது பாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் டூப்பர் ஸ்டார்களின் படங்கள் சுமாராக இருந்தாலும், குழந்தைதனமாக இருந்தாலும் கூட வசூலில் பல லட்சங்களை அள்ளிக்கொண்டே இருக்கின்றன.

இதற்கு காரணம் மேற்கூறிய அதே என்.எஃப்.டி-தான்.

அது என்ன என்.எஃப்.டி?

என்.எஃப்.டி என்பது நான் – ஃபன்ஜியபிள் டோக்கன் [NFTs (non-fungible tokens)] என்பதின் சுருக்கம்தான். பாலிவுட் நட்சத்திரங்களின் கையில் ஒரு ஸ்மார்ட்ஃபோன் அல்லது பேனா இருந்தால் போதுமானது. இந்த மூன்றெழுத்து சமாச்சாரம் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பல லட்சங்களை உட்கார்ந்த இடத்திலிருந்தே சம்பாதிக்க உதவுகின்றது. உங்கள் மீது சத்தியமாக அவர்களுக்கு லட்சங்கள் நிச்சயம்.

அது எப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்களா?

உங்களுடைய மனம்கவர்ந்த நடிகர் அல்லது நடிகை நடித்த படம் ஒன்று வெளியாகிறது என்று வைத்து கொள்வோம். அந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக அந்த ஹீரோவோ அல்லது ஹீரோயினோ பேட்டி கொடுப்பார்கள். கேமராவுக்கு போஸ் கொடுப்பார்கள். சில சமயங்களில் அந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையெழுத்தும் போட்டு கொடுப்பார்கள். இப்படி அவர்கள் கையெழுத்து போட்ட போஸ்டர்கள் மொத்தம் 10 இருக்கின்றன. அந்த நட்சத்திரத்தின் கையெழுத்து அவ்வளவு எளிதாக கிடைக்க கூடியது அல்ல என்பதால் அந்த 10 போஸ்டர்களுக்கும் மவுசு அதிகம் இருக்கத்தான் செய்யும்.

இதனால் அதைப் போட்டி போட்டுக்கொண்டு வாங்க பெரும் ரசிகர் பட்டாளமே தயாராக இருக்கும். இந்த சூழ்நிலையில் அந்த போஸ்டரை நீங்கள் வாங்குகிறீர்கள். இப்போது அந்த போஸ்டர் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. நீங்கள் விரும்பினால் உங்கள் வீட்டு வரவேற்பறையில் உங்களது செல்வாக்கை காட்டும் வகையில் ஃப்ரேம் போட்டு தொங்கவிடலாம். வீட்டு லாக்கருக்குள் பத்திரமாக வைக்கலாம். வேண்டாம் என்றால் அந்த நட்சத்திரம் கையெழுத்து போட்டு கொடுத்த அந்த போஸ்டரை உங்களைப் போலவே வெறித்தனமான ரசிகர் ஒருவருக்கோ அல்லது கெத்து காட்ட விரும்பும் ஒரு பணக்காரருக்கோ நீங்கள் விற்கலாம். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், அந்த போஸ்டர் ஒரிஜினல். அதற்கு வேறு எந்த போடோ காப்பியும் இல்லை. அதை வைத்து வேறெந்த டிஜிட்டல் காப்பியோ, அதே மாதிரியோ வேறெதுவுமோ இல்லை.

அந்த 10 போஸ்டர்களும் பிரத்தியேகமானவை. அந்த பத்து தவிர வேறெதுவும் இல்லை என்பதை குறிக்கும் வகையில் அவை ஒவ்வொன்றிலும் தனித்தனியாக சீரியல் நம்பர் இருக்கும். இந்த சீரியல் நம்பர் வெளியே தெரியாத வகையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதாவது உங்களது சீரியல் எண் என்.எஃப்.டி உரிமம் ப்ளாக்செயினில் பதிவாகி இருக்கும்.

அதே போஸ்டரை நீங்கள் இண்டர்நெட்டில் பதிவிறக்கம் செய்யலாம். ஆனால் அதில் ஹீரோவின் கையெழுத்து இருக்காது.

இதனால் அந்த 10 போஸ்டர்களில் நீங்கள் ஏதாவது ஒன்றை வாங்கினால், நீங்கள் வாங்கியது வெறும் போஸ்டர் அல்ல. போட்டோவும் அல்ல. உங்களுடைய ஃபேவரிட் ஸ்டார் கையெழுத்து போட்டு கொடுத்த பிரத்தியேகமான ஒன்று.

இங்குதான் என்.எஃப்.டி-யின் மகத்துவம் வருகிறது.

என்.எஃப்.டி என்பது இப்போது இளையதலைமுறையினரிடையே அதிகம் முணுமுணுக்கப்படும் க்ரிப்டோகரன்ஸியின் ஒரு வடிவம். தனித்துவமிக்க டிஜிட்டல் அடிப்படையிலான அடையாளக்காட்டி. அதனால் இதை முதலில் வாங்கியவர் யார், அவரிடமிருந்து இரண்டாவது வாங்கியவர் யார்,.அடுத்தடுத்து வாங்கியவர்கள் யார் என்பது வரை அனைத்து உரிமையாளர்களின் பெயரையும் தெரிந்து கொள்ளமுடியும். ப்ளாக்செயின் இதை வாங்கிய அனைவருடைய பெயர்களோடு, இதை உருவாக்கியவர் உங்களுடைய ஃபேவரிட் நடிகர் அல்லது நடிகை என்பதையும் குறிப்பிட்டு காட்டும்.

சினிமா போஸ்டர், போட்டோ மட்டுமில்லாமல், ஏதாவது கலைப்படைப்பையும், ஒவியத்தையும் கூட இப்படி என்.எஃப்.டி ப்ளாக்செயின் மூலம் கண்டறியலாம். இந்த ஓவியத்தை ஒரு சூப்பர் ஸ்டார் முன்பு வாங்கி இருந்தார். அப்புறம் நான் வாங்கிவிட்டேன் என்று பெருமையாக சொல்லிக்கொள்வதற்கு இந்த என்.எஃப்.டி ப்ளாக்செயின் தொழில்நுட்பம் உதவுகிறது.

இப்படி ஒரு படத்தின் விளம்பரத்திற்காக நடக்கும் நிகழ்ச்சியில், போகிறப்போக்கில் கையெழுத்து போட்டு கொடுத்த போஸ்டரை வைத்து கொண்டு ஒருத்தர் லட்சகக்ணக்கில் சம்பாதிப்பது நட்சத்திரங்களுக்கு தெரிந்தால் சும்மா இருப்பார்களா?

’கொண்டுவா போஸ்டரை. வாங்கிக்கோ கையெழுத்தை. வித்துடு என்.எஃப்.டியில’ என இதிலும் கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்கள் பாலிவுட் நட்சத்திரங்கள்.

இப்படி என்.எஃப்.டி-யில் காசு பார்க்கும் பாலிவுட் நட்சத்திரங்களின் பட்டியலில் அமிதாப் பச்சன், ஷாரூக்கான், சல்மான்கான், ஆமீர்கான், சன்னிலியோன், ஜானி லிவர், ப்ரியங்கா சோப்ரா, பரிநிதி சோப்ரா, அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், மனோஜ் வாய்பாய் என பெயர்கள் நீண்டுக்கொண்டே போகின்றன. இவர்களைத் தவிர்த்து தெலுங்கு சினிமாவின் பிரபாஸூம் இருக்கிறார். தமிழ் சினிமாவிலிருந்து கமல் ஹாஸனும், ஆர். மாதவனும் மட்டுமாவது இந்த என்.எஃப்.டி-யை புரிந்து வைத்திருக்கிறார்கள்.

இவர்களது என்.எஃப்.டி. இப்போது புழக்கத்தில் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அவர்களது புதிய படங்களின் ரிலீஸின் போது வெளியிடப்படுகின்றன, இந்த யுக்தி அந்த புதிய படத்தின் விளம்பரத்திற்கும் உதவுகிறது. உடனடியாக விலை போவதற்கான அம்சமாகவும் இருக்கிறது.

என்.எஃப்.டி-யை வாங்குவதில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளையதலைமுறையினர் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள் இவர்கள் சம்பந்தப்பட்ட படங்களைப் பார்க்காவிட்டாலும், என்.எஃப்.டி-யின் மதிப்பை நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்

இதைப் புரிந்து கொண்டிருப்பதால் என்.எஃப்.டி-யை வழங்கும் நிறுவனங்களான Fantico, Vistaverse, பழையப் படங்களின் போஸ்டர்களையும் இப்போது களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார்கள்.

முன்பு பட்டையைக் கிளப்பிய ‘ஷோலே’ படத்தின் போஸ்டர் இப்பொழுதும் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ‘ஷோலே’ படத்தில் நடித்த தேவ் ஆனந்த், கீதா பாலி, சுரையா, சுசித்ரா சென் மற்றும் மதுபாலா போன்றோர் என்.எஃப்.டி மூலம் இன்றைய தலைமுறையினர் மத்தியிலும் செல்வாக்குடன் இருக்கிறார்கள்.

அமிதாப் பச்சனின் ஒட்டுமொத்த என்.எஃப்.டி. கலெக்‌ஷனும் மூன்றே நாட்களில் விற்றுத்தீர்ந்திருக்கின்றன. இவற்றின் மதிப்பு சுமார் 8.2 கோடி என ஆச்சர்யமூட்டுகிறது.

சினிமா நட்சத்திரங்களின் கையெழுத்து உள்ள போஸ்டர்களை தவிர்த்து, படங்களில் அவர்கள் பயன்படுத்திய உடைகள் அல்லது பொருட்களையும் கூட என்.எஃப்.டி-களாக விற்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில் அமிதாப் பச்சன் ‘ஷாகென்ஷா’ படத்தில் பயன்படுத்திய ஜாக்கெட்டை சுமார் 13 லட்சம் என்.எஃப்.டி. மதிப்புடன் கொடுத்திருக்கிறார்கள்.

Bollycoin என்ற நிறுவனம் சல்மான்கானின் ‘தபாங்’ படத்தின் என்.எஃப்.டி கலெக்‌ஷனை உருவாக்கி இருக்கிறது. இந்த என்.எஃப்.டி 70 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன.

என்.எஃப்.டி எப்படி இந்தளவிற்கு வரவேற்பை பெறுகின்றன?

இந்தியாவில் சினிமா நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள், ரசிகைகளாக இருப்பதைவிட பக்தர்களாக இருப்பவர்கள்தான் அதிகம் என்கிறது என்.எஃப்.டி நிறுவன வட்டாரம். இதனால்தான் என்.எஃப்.டி. ஒரு உணர்வுப்பூர்வமான வியாபாரமாகி இருக்கிறது. பழைய நினைவுகளை நினைக்கூர்வதோடு, நட்சத்திரங்களுக்கு இருக்கும் மவுசை கொண்டாடும் ஒன்றாக இருப்பதால் என்.எஃப்.டி-களுக்கு வரவேற்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

என்.எஃப்.டி எதிர்காலம் எப்படியிருக்கும்?

Market Research Future (MRFR) அறிவிக்கையின்படி, 2022-ல் உலகளாவிய என்.எஃப்.டி மார்க்கெட்டின் அளவு சுமார் .38.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்தாண்டு இதன் மதிப்பு 48.74 பில்லியன் டாலர்களாக உயரும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது 2023-ல் என்.எஃப்.டி மார்கெட் மதிப்பு 342.54 பில்லியன்களாக அசுர வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமும் இப்போது நட்சத்திரங்கள் காசு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆசையும், ஆர்வமும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றபடி மாறிக்கொண்டேதான் வருகின்றன. இதை நம்மூரில் முதலிலேயே கணித்தவர் கமல்ஹாஸன்.

கோலிவுட்டில் இன்னும் என்.எஃப்.டி. சூடுப்பிடிக்க ஆரம்பிக்கவில்லை. அதனால் நம்மூர் டிஜிட்டல் தலைமுறை, இந்த என்.எஃப்.டி-யில் எந்தளவிற்கு லட்சங்களைக் கொட்டப் போகிறார்கள் என்பது இனிதான் தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...