வெயில் அதிகரிக்க திராவிட கட்சிகள் காரணமா? – அண்ணாமலைக்கு கண்டனம்
கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ” கோவை ஒரு காலத்தில் மிகவும் குளுமையாக இருந்தது. தற்போது இரண்டு முதல் மூன்று டிகிரிகள் வரை வெயில் அதிகரித்து விட்டது. மாநகரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கவே முடியாத நிலை இருக்கிறது. மக்கள் முகக்கவசங்கள் இல்லாமல் வெளியே வர முடியாத அளவுக்கு தூசி படர்ந்து இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் திராவிட அரசுகள் தான்” என்றார்.
இது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒரு கட்சியோ, மாநில அரசோ நினைத்தால் ஒரு நகரின் வெப்பத்தை 2 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு அதிகரிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு கட்சியால் ஒரு நகரத்தின் வெப்பத்தை 2 டிகிரி அதிகரிக்க முடியுமா? இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா உங்களுக்கு? உங்களுக்கு கொஞ்சமாவது அறிவியல் அறிவு இருந்தால் @IPCC_CHயின் அறிக்கையை படித்துப்பாருங்கள், உலக சராசரி வெப்பநிலை 1.45டிகிரி அதிகரித்துவிட்டதாக “ஐபிசிசி அறிவித்துவிட்டது.
“அதுசரி, உங்களுக்கு எப்படி தெரியும், உங்க தலைவர்தான், “We have only changed, climate has not changed” என்று சொன்னவராச்சே. உங்களுக்கு எப்படி காலநிலை மாற்றம் பற்றியெல்லாம் தெரியும்? ஆத்மநிர்பர் பாரத் என்கிற பெயரில், மத்திய இந்தியாவில் உள்ள 1.75லட்சம் ஹெக்டர் காடுகளை பெரு நிறுவனங்களுக்கு தாரைவார்தவர்களுக்கு வெப்ப உயர்வை பற்றியெல்லாம் கவலை எதற்கு?” என்று குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதியின் தேர்தல் பிரச்சார யுக்தி
உதயநிதியின் தேர்தல் பிரச்சார யுக்தி பலரையும் கவர்ந்துள்ளது. எழுதிவைத்து பேசாமல் சாதாரண பாஷயில் எதிர்கட்சித் தலைவர்களை அவர் விமர்சிப்பது தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திமுகவினர் நம்புகிறார்கள்.
உதயநிதியின் இந்த பிரச்சார பாணிக்கு உதாரணமாக திருவண்ணாமலையில் அவர் பேசியது:
உதயநிதிக்கு வேலையே இல்லை, எப்போது பார்த்தாலும் ஒரு செங்கல்லை காண்பிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறுகிறார். ஆம், நான் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும்வரை செங்கலை காண்பிப்பேன். ஆனால், இவர் (இபிஎஸ்) பிரதமருடன் பல்லை காட்டுகிறார். பிரதமருடன் பல்லைக்காட்டி சிரித்து கூட்டு வைத்துக்கொண்டு மாநிலத்தின் மொழி உரிமை, நிதி உரிமையை தாரை வார்த்தவர்தான் இபிஎஸ்.
இவ்வாறு உதயநிதி பேசினார்.
தூங்கிக்கொண்டிருந்தேன்… எழுப்பி வேட்பாளர் ஆக்கினார்கள் – தங்கர் பச்சான்
நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் தொகுதி வேட்பாளராக தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். தான் வேட்பாளர் ஆனதற்கான காரணத்தைப் பற்றி தங்கப் பச்சான் கூறியது:
வேட்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டது முதலில் எனக்கே தெரியாது. நள்ளிரவில் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்னை அழைத்து, தேர்தலில் போட்டியிட முடியுமா என்று கட்சி தன் விருப்பத்தை வெளிப்படுத்தியது. சிந்திப்பதற்கு சிறிது நேரம் கேட்டேன். சிறிதுநேரத்தில் அவர்களிடம் பேசினேன்.
நான் கொடுத்து வரும் குரல்கள் கட்சிக்கு நன்றாகவே தெரிந்தது. எனவே, “இதுதான் சரியான நேரம். பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. செயலில் இறங்க வேண்டும்” என்று ராமதாஸ் வெளிப்படுத்தினார். அதன்பிறகே சம்மத்தித்தேன். இப்படித்தான் நான் வேட்பாளரானேன். எல்லாம் ஒருமணி நேரத்தில் எடுத்த முடிவு. ஒரு படப்பிடிப்புக்காக நான் லண்டன் சென்றிருந்தேன். அங்கு சென்றபோது இந்த அழைப்பு வந்தது. உடனடியாக கிளம்பி வந்துவிட்டேன்.
இவ்வாறு தங்கர் பச்சான் கூறினார்.
மீனவர் வீட்டுக்கு சென்ற முதல்வர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சூசை தப்பாசு என்ற மீனவர் வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.