No menu items!

செந்தில் பாலாஜியை சந்திப்பாரா ஜோதிமணி? – மிஸ். ரகசியா

செந்தில் பாலாஜியை சந்திப்பாரா ஜோதிமணி? – மிஸ். ரகசியா

“காங்கிரஸ் கட்சியில இருக்கிற குழப்பங்களால திமுக கூட்டணி கொஞ்சம் அப்செட்ல இருக்கு” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

 “காங்கிரஸ்னாலே குழப்பம் இருக்கறது சகஜம்தானே… இப்ப என்ன புதுக் குழப்பம்?”

 “பொதுவா எல்லா கட்சி வேட்பாளர்களும் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துட்டாங்க. ஆனா செவ்வாய்கிழமை காலை வரைக்கும் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவே இல்லை. மற்ற தொகுதிகள்ல வேட்பாளர்களை அறிவிச்சாலும் அந்த வேட்பாளர் மேல காங்கிரஸ் கட்சிக்காரங்களுக்கு திருப்தி இல்ல. அவங்களுக்கு பிடிச்சிருந்தா திமுககாரங்களுக்கு பிடிக்கல.”

 “இப்படி பொத்தம் பொதுவா சொன்னா எப்படி? யாருன்னு தெளிவா சொல்ல வேண்டாமா?”

 “கரூர் தொகுதியில திரும்பவும் ஜோதிமணியை வேட்பாளரா நிறுத்தினது திமுக உடன்பிறப்புகளுக்கு பிடிக்கலை. நிர்வாகிகள் கூட்டத்தையே திமுககாரங்க பலரும் புறக்கணிச்சு இருக்காங்க. ‘நீங்க ஜெயிக்கணும்னா புழல் சிறைக்குப் போய் அண்ணன் செந்தில் பாலாஜியை பார்த்துட்டு வாங்க. அப்பதான்  உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். நீங்களும் ஜெயிக்க முடியும். அதை விட்டுட்டு தளபதி சொன்னார்… அறிவாலயத்தில பேசிட்டேன்னு கதை விட்டா வேலைக்கு ஆகாது’ன்னு ஜோதிமணிகிட்டயே திமுக நிர்வாகிகள் சொல்லிட்டாங்களாம். அதனால வேற வழி இல்லாம செந்தில் பாலாஜியை பார்த்துட்டு வந்தா என்னங்கிற நினைப்புல ஜோதிமணி இருக்காங்களாம்.”

 “திருநெல்வேலி தொகுதியிலயும் பிரச்சினைன்னு கேள்விப்பட்டேனே?”

 “அங்க தனக்குதான் சீட் கிடைக்கும்னு பீட்டர் அல்போன்ஸ் நம்பிட்டு இருந்தார். உள்ளூர் காங்கிரஸ்காரர்களும் அவருக்காக வேலை செய்ய உற்சாகமா தயாராகிட்டு இருந்தாங்க. ஆனா கடைசி நேரத்துல கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் ப்ரூஸ்ங்கிறவரை காங்கிரஸ் வேட்பாளரா அறிவிச்சு இருக்காங்க. இதை காங்கிரஸ் கட்சிக்காரங்களே ரசிக்கலை. அதனால நாம கொஞ்சம் கஷ்டப்பட்டா ஜெயிச்சுடலாம்கிற நம்பிக்கை அங்க பாஜக வேட்பாளரா போட்டியிடற நயினார் நாகேந்திரனுக்கு வந்திருக்காம்.”

 “காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தேர்வுல ஏன் இவ்வளவு சிக்கல்?”

 “காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுல அந்த கட்சியோட தலைவர் கார்கேவோட வாரிசுக்கு முக்கிய பங்கு இருக்கறதா காங்கிரஸ் கட்சியில பேசிக்கறாங்க. குறிப்பா கிருஷ்ணகிரியை சேர்ந்த கோபிநாத்,  மல்லிகார்ஜுனன் கார்கே வாரிசைப் பார்த்து பேசி சீட் வாங்கினதா சொல்றாங்க. செல்வப் பெருந்தகைதான் அவருக்கு இந்த ரூட்டை போட்டுக் கொடுத்தாராம்.”

 “துரை வைகோ மேல அமைச்சர் நேரு கோபமா இருக்கிறதா கேள்விப்பட்டேனே?”

 “செயல்வீரர்கள் கூட்டத்துல, ’நான் சுயமரியாதைக்காரன். செத்தாலும் தனி  சின்னத்தில்தான் போட்டியிடுவேன்’ன்னு துரை வைகோ சொன்னதை நேரு ரசிக்கலை. அந்த கூட்டம் முடிஞ்சதும் முதல்வருக்கு போன் போட்டு அமைச்சர் நேரு சண்டை போட்டதா சொல்றாங்க. “தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தப்ப, அவங்க தனிச் சின்னத்துல போட்டியிட விரும்பறதா மதிமுகல சொன்னாங்க. நீங்களும் அதுக்கு சம்மதம் சொல்லிட்டீங்க. இப்ப அதை  அவர் பொதுவெளியில் சொல்லணும்?. அவர் சுயமரியாதைக்காரர்னா நமக்கெல்லாம்  சுயமரியாதை இல்லையா? இதெல்லாம் உங்களுக்கு ஒரு  பாடம். சட்டசபை தேர்தல்ல இவங்களை எல்லாம் தள்ளியே வைங்க’ன்னு அப்ப பொரிஞ்சு தள்ளிட்டாராம் நேரு.”

 “தேனி தொகுதியை ஓபிஎஸ் மகன்கிட்ட இருந்து டிடிவி தினகரன் பறிச்சுட்டாரே?”

 “அவர் தேனியில் போட்டியிட்டாலும் ஓபிஎஸ் கட்சியோட ஆட்களை பிரச்சாரத்துக்கு பயன்படுத்தறது இல்லையாம். அவங்களை எந்த அளவுக்கு நம்பறதுன்னு டிடிவி தினகரன் யோசிக்கறதுதான் இதுக்கு காரணம். ஓபிஎஸ்ஸை நம்பாத தினகரன், தொகுதியில இருக்கிற தன்னோட பழைய ஆட்களை தேடித் தேடி தனக்காக வேலை செய்ய சொல்லிட்டு வர்றார். எப்படியும் ஜெயிச்சுடலாம்கிற நம்பிக்கைல அவர் இருக்க, தினகரன் ஜெயிச்சா அவரை பாஜக அமைச்சரவையில சேர்த்துடுவாங்க. பிறகு நம்மளை சுத்தமா கழட்டி விட்டுடுவாங்கன்னு ஆதரவாளர்கள்கிட்ட ஓபிஎஸ் புலம்ப ஆரம்பிச்சுட்டாராம்.”

 ‘ராமநாதபுரத்துல ஓபிஎஸ்சோட வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கு?”

 “இரட்டை இலை இல்லாம சுயேச்சை சின்னத்துல போட்டி போடறதால  சொல்லிக்கற மாதிரி எதுவும் இல்லை. இந்த நேரத்துல புது சோதனையா அவரை மாதிரியே ஓ.பன்னீர்செல்வம்கிற பேர்ல இன்னொரு சுயேச்சை வேட்பாளரும் ராமநாதபுரத்துல களத்துல குதிச்சிருக்கார். இப்படி ஒரே நேரத்துல ரெண்டு ஓபிஎஸ் போட்டியிடறதால மக்களும் யாருக்கு என்ன சின்னம்னு தெரியாம குழம்பிடுவாங்களேங்கிற பயத்துல ஓபிஎஸ் இருக்கார். அவரை எப்படியும் டெபாசிட் வாங்க விடக் கூடாதுங்கிற முடிவுல அதிமுக வேகமா செயலபட்டு வருது.”

 “ஆளுநர் தனக்கு பெஸ்ட் ஆஃப் லக் சொன்னதா முதல்வர் சொல்லி இருக்காரே?”

 “ஆளுநர் மாளிகையில் பொன்முடி பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகிட்ட முதல்வர் ஸ்டாலின், ‘தேர்தல் பிரச்சாரத்தை உங்களிடம் இருந்து ஆரம்பிக்கிறேன்’ன்னு சிரிச்சுட்டே கைகுலுக்கி இருக்கார். ஆளுநரும் என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம ஆல் தி பெஸ்ட் சொல்லி இருக்கார்.  அதேசமயம் டெல்லி பாரதிய ஜனதா தலைவர்கள் மேல ஆளுநர் கடும் கோபத்தில் இருக்காராம் ஆளுநர்.  ‘என்னை பகடைக்காயா பயன்படுத்தி தேவையில்லாத சர்ச்சையில் என் பெயரைக் கெடுத்துட்டாங்க. இப்ப என்னை காப்பாத்த யோசிக்கிறாங்க’ன்னு புலம்பிட்டு இருக்கிறார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எலெக்‌ஷன் முடிஞ்சதும் உங்களுக்கு ஃபுல் சப்போர்ட் பண்றோம்னி டெல்லில சொல்லியிருக்காங்க”

“அப்போ எலக்‌ஷென் வரைக்கும் கவர்னர் சைலண்டாதான் இருப்பாரா?”

“எலக்‌ஷனுக்கு அப்புறமும் சைலண்டா இருப்பாரான்றது எலெக்‌ஷன் ரிசல்ட்டை பொருத்தது” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...