இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு டி20 தொடருக்கும் ஒவ்வொரு அணி தேர்ந்தெடுக்கப்பட்டது. பல தொடர்களில் மூத்த வீரர்களை ஒதுக்கி, இளம் வீரர்களுக்கு அணியில் இடம் வழங்கப்பட அதனாலேயே சிலவற்றில் இந்தியா தோல்வியும் அடைந்தது. இப்படி தோல்வியடைந்த தொடர்களில் ஆசிய கோப்பையும் ஒன்று.
ஆனால் இந்த தோல்விகளைப் பற்றியெல்லாம் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு கவலைப்படவில்லை. உலகக் கோப்பைக்கான அணியை தேர்ந்தெடுக்கவே பலருக்கும் வாய்ப்பளித்தோம் அதன் அடிப்படையில் வலிமையான அணி உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்படும்’ என்று அறிவித்துள்ளது. இதன்படி அக்டோபரில் நடக்கும் உலகக் கோப்பைக்கான அணியை வரும் 16-ம் தேதிக்குள் தேர்வுக் குழு அறிவிக்க வேண்டியுள்ளது. இதுவரை ஆடியுள்ள ஆட்டங்களைப் பொறுத்து இந்த அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள முதல் 15 வீரர்கள் யாரென்று பார்ப்போம்…
தொடக்க ஜோடி:
கடந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா தோற்றதற்கு முதல் காரணம் பவர் ப்ளேவில் அதிக ரன்களைக் குவிக்காதது. தான் கேப்டனான பிறகு இந்த நிலையை மாற்ற அதிரடியாக ஆடிவருகிறார் ரோஹித் சர்மா. இந்த உலகக் கோப்பையை பொறுத்தவரை தன்னுடன் ஆடும் மற்ரொரு வீரராக அவர் கே.எல்.ராகுலைத்தான் தேர்ந்தெடுப்பார் என்பது உறுதியாக தெரிகிறது. அவருக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே இஷான் கிஷன் அல்லது சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
மிடில் ஆர்டர்:
இந்திய மிடில் ஆர்டருக்கு சில காலமாக தலைவலியாக இருந்த விஷயம் விராட் கோலியின் ஃபார்ம். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பந்து அவரது பேட்டில் அதிகம் படாமல் இருந்துவந்தது. இரண்டரை ஆண்டுகளாக சதம் அடிக்காததால், மனதளவில் பாதிக்கப்பட்ட கோலி அதிரடி காட்டாமல் இருந்துவந்தார். ஆனால் ஆசிய கோப்பையில் சதம் அடித்ததுடன் இந்த தலைவலிக்கு மருந்து கிடைத்துள்ளது. கோலி ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் புதிய உற்சாகத்துடன் நிற்கிறது இந்திய மிடில் ஆர்டர்.
அவருக்கு துணையாக சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருக்கக்கூடும்
இதில் சர்வதேச கிரிக்கெட்டில் 360 டிகிரியிலும் ஆடக் கூடியவரான சூர்யகுமார் யாதவை (முன்பு தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் இந்த ஆற்றலைப் பெற்றிருந்தார்) மிகப்பெரிய பலமாக இந்தியா கருதுகிறது. குறிப்பாக இடுப்புக்கு மேல் பந்து எகிறிவரும் ஆஸ்திரேலிய மைதானங்களில் சூர்யகுமார் அதிக ரன்களைக் குவிக்க வாய்ப்பு உள்ளது. இவர்கள் வலுவான அடித்தளத்தை அமைக்கும் சூழலில் சிறப்பான பினிஷிங் கொடுக்க தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த் ஆகிய இருவரில் யாராவது ஒருவரைப் பயன்படுத்தலாம். இவர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் ஹூடாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்
ஆல்ரவுண்டர்கள்:
உலகக் கோப்பைக்கு முன்பே ரவீந்திர ஜடேஜா காயம் அடைந்திருப்பது இந்தியாவை கொஞ்சம் பலவீனமாக்கி உள்ளது. இந்த சூழலில் ஹர்த்திக் பாண்டியா மட்டுமே சர்வதேச அளவில் சிறப்பாக ஆடும் ஒரே ஆல்ரவுண்டராக உள்ளார். அவருக்கு துணையாக ஜடேஜாவின் இடத்தில் அக்சர் படேலையும், தீபக் சாஹரையும் இந்தியா பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.
பந்துவீச்சு:
ஆசிய கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு பலவீனமான பந்துவீச்சே முக்கிய காரணம். இதைக் கருத்தில்கொண்டே உலகக் கோப்பைக்கான அணி தேர்ந்தெடுக்கப்படும். இளம் வீரர்கள் பலர் இருந்தாலும் இந்தியாவின் பலம் பும்ரா, முகமது ஷமி, புவனேச்வர் குமார் ஆகிய 3 மூத்த பந்துவீச்சாளர்கள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டும் ஹர்ஷல் படேல் அல்லது தீபக் சாஹருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களே அதிகமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரை சாஹல் பிஷ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு அதிகம்.