No menu items!

ந்நா தான் கேஸ் கொடு – ஓடிடி பார்வை

ந்நா தான் கேஸ் கொடு – ஓடிடி பார்வை

குண்டும் குழியுமாக உள்ள சாலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர்தான் பொறுப்பு என்று கூறி, ஒரு சாதாரண திருடன் அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதுதான் ‘ந்நா தான் கேஸ் கொடு’ படத்தின் ஒன்லைன் கதை.

ராஜீவன் (குஞ்சாக்கோ போபன்) ஒரு முன்னாள் திருடன். காதலியுடன் சேர்ந்து வாழ்வதற்காக திருட்டை விடுகிறார். இந்த சூழலில் ஒரு நாள் இரவில் தன் மீது ஆட்டோ மோதாமல் இருப்பதற்காக, அருகில் உள்ள சுவரில் ஏறி ஒரு வீட்டுக்குள் குதிக்கிறார். அது ஒரு எம்எல்ஏவின் வீடு. அங்கிருக்கும் 2 நாய்கள் இவரது பின்பக்கத்தை கடித்துவிடுகின்றன. சிசிடிவி கேமரா மூலம் இதைப் பார்க்கும் எம்எல்ஏவும் அவரது எடுபிடிகளும் குஞ்சாக்கோ கோபனை திருடன் என்று முத்திரை குத்தி சிறைக்கு அனுப்புகிறார்கள். இதனால் அவருக்கு யாரும் வேலை கொடுக்க மறுக்கிறார்கள்.

 ‘குண்டும் குழியுமான சாலையால்தான் ஆட்டோ என் மீது மோத வந்தது. அதிலிருந்து தப்பிக்கும்போதுதான் என் மீது திருட்டுப் பட்டம் வந்தது. சாலைகளுக்குப் பொறுப்பான பொதுப்பணித்துறை அமைச்சர்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்’ என்று கூறி உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார் ராஜீவன்.  இந்த வழக்கும், இதைத்தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களும்தான் படத்தின் கதை.

படத்தின் நாயகன் குஞ்சாக்கோ கோபன். மலையாள திரையுலகில் சாக்லேட் பாயாக வலம்வந்த இவர், வழுக்கைத் தலை, கருமை படிந்த முகம்  என்று இமேஜைப் பற்றி கவலைப்படாமல் நடித்துள்ளார். அதிலும் திருவிழாவில் அவர் ஆடும் நடனம் சூப்பர். நடனம் ஆடத் தெரியாத ஒருவர் (நிஜத்தில் குஞ்சாக்கோ போபன் ஒரு நல்ல டான்சர்) ஆடுவதைப் போல் வித்தியாசமான மூவ்மெண்ட்களைக் காட்டுகிறார். ஹீரோயிசம் காட்டாமல், பஞ்ச் டயலாக் சொல்லாமல் முழு படத்தையும் தன் முதுகில் சுமந்து செல்கிறார்.

மலையாளத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தை இயக்கிய ரதீஷ் பாலகிருஷ்ணன்தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள் மீதான  கசப்பு விமர்சனங்களை நகைச்சுவை எனும் தேன் தடவி தந்ததற்காக அவரை பாராட்டலாம். பாதி படத்துக்கு மேல் நீதிமன்றத்துக்கு உள்ளேயே கதை நகர்ந்தாலும், கொஞ்சமும் போர் அடிக்காமல் படத்தை சுவாரஸ்யமாக கொண்டுபோகிறார்.

பரபரப்பான விவாதம் நடக்கும்போது அதைக் குறிப்பெடுக்காமல் புறாக்களை வேடிக்கை பார்க்கும் மாஜிஸ்திரேட்,  குற்றவாளியின் மாமனாருக்கு டையாபர் மாற்றும் கான்ஸ்டபிள், காவல்துறை அதிகாரியிடம் கைமாற்றாக பணம் வாங்கும் திருடன் என்று பல விஷயங்கள் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.

குஞ்சாக்கோவின் காதலியாக    காயத்ரி  நடித்துள்ளார். நாய் கடித்து குஞ்சாக்கோ  மருத்துவமனையில்  குப்புற படுத்துக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு ‘பாதி …. போச்சே மாமா’ என அப்பாவியாய் புலம்பும் இடத்திலும். நீதிமன்றத்தில் பொங்கி எழும் காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார்.

தவறு செய்யும் அரசியல்வாதிகளை ஆக்‌ஷன் ஹீரோக்கள் அடக்கும் படங்களுக்கு நடுவில், எந்த திறமையும் இல்லாத ஒரு அப்பாவி குடிமகன் அடக்குவதுபோல் காட்டியிருக்கும்  இயக்குநரைப் பாராட்டலாம் .  கூடவே தங்களை விமர்சிக்கும் இதுபோன்ற படங்களுக்கு தொல்லை கொடுக்காத கேரள அரசையும்..

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் மலையாளம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் இப்படத்தைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...