No menu items!

தெலுங்கு சினிமாவில் சம்பள புரட்சி?

தெலுங்கு சினிமாவில் சம்பள புரட்சி?

இருபது வருடங்களுக்கு முன்பு வரை சினிமா மட்டுமே மக்களுக்கு ஒரே பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ்.

ஒட்டுமொத்த உலகமும் சோஷியல் மீடியா என்ற புதிய பரிமாணத்தில் மொபைல் போனுக்குள் அடங்கிவிட்டது.

சேட்டிலைட் தொலைக்காட்சிகள் மற்றும் ஓடிடி-யின் வருகைக்குப் பிறகு, மத்தியதர வர்க்கத்தினர் தங்களது வார இறுதி நாட்களை வீட்டில் இருந்தபடியே டிவியிலோ அல்லது மொபைல் ஃபோனிலோ தங்களை பொழுதை கழிக்க விரும்புகின்றனர்.

முன்பெல்லாம் தங்களது தாய்மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படங்களை ரசித்து வந்த ரசிகர்களுக்கு, உலகின் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்ட படங்களை நினைத்த நேரத்தில் தங்களுக்கு செளகரியமான இடத்தில் வைத்து பார்க்கும் வசதி வந்துவிட்டது.

அதனால் திரையரங்குகளுக்குப் போய் படம் பார்த்து உற்சாகமாக பொழுதை கழிக்க வேண்டுமென்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. அதையும் மீறி திரையரங்குக்கு போக வேண்டுமென்றால், புரட்டிப் போடும் அம்சம் ஏதாவது ஒன்று உள்ள திரைப்படம் தேவைப்படுகிறது.

அப்படி எதிர்பார்பை ஏற்படுத்தும் படங்கள் இல்லையென்றால் திரையரங்குகளில் ஒரு காட்சியை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச ரசிகர்களின் எண்ணிகையைக் கூட தொட முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது.

இதன் விளைவால் திரையரங்குகள் லாபத்தை ஈட்ட முடியாமல், கல்யாண மண்டபங்களாகவோ அல்லது வணிக வளாகங்களாகவோ மாற்றம் கண்டு வருகின்றன.

இதிலிருந்து தனது வீழ்ச்சியை சந்தித்து வருகிறது சினிமா. இது தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவாகியிருக்கும் வீழ்ச்சி. மறுபக்கம் சினிமா துறைக்குள்ளேயே இருக்கும் பஞ்சாயத்துகள்.

உதாரணத்திற்கு ஒரு தயாரிப்பாளர் பக்காவான கமர்ஷியல் படமொன்றை எடுக்க விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படத்தின் பட்ஜெட்டில் 70% வரை ஹீரோவின் சம்பளத்திற்கே போய்விடும். அடுத்து இயக்குநருக்கும், ஹீரோயினுக்கும் கொஞ்சம் அதிகம் போய்விடும்.

மீதியிருக்கும் பட்ஜெட்டில் படத்தை எடுத்து முடிக்க வேண்டும். டெக்னீஷியன்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். ப்ரமோஷன் செய்ய வேண்டும்.

அடுத்து படம் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாக வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது ஹவுஸ்ஃபுல்லாக ஓட வேண்டும்.
தயாரிப்பாளர்கள் கடன் வாங்கி, பிரம்மாண்டமாக மேற்கொள்ளும் இன்றைய விளம்பர வித்தைகளில் மயங்குவது விநியோகஸ்தர்களும் இல்லை. இதனால் பட வியாபாரம் முன்பு போல் உற்சாகமானதாக இல்லை.

ஆகமொத்தம் படம் ஓடுகிறதோ இல்லையோ, தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் கிடைக்கிறதோ இல்லையோ, கமர்ஷியல் ஹீரோ அக்கெளண்ட்டில் பல கோடிகள் க்ரெடிட் ஆகிக்கொண்டேதான் இருக்கின்றன.

இந்த கூட்டல் கழித்தல்களை பார்த்த பிறகுதான் தெலுங்கு சினிமாவிற்கு ரொம்ப தாமதமாக விழிப்பு தட்டியிருக்கிறது. அதே வேகத்தில் தெலுங்கு ஃப்லிம் சாம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் ஒரு முக்கிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிக்கைதான் டோலிவுட்டில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

அப்படியென்ன புதிய விதிகளை தெலுங்கு ஃப்லிம் சாம்பர் ஆஃப் காமர்ஸ் முன் வைத்திருக்கிறது என்பதை முதலில் பார்ப்போம்.

இதன்படி, நட்சத்திரங்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இனி தினசரி சம்பளம் கிடையாது.

இனி நட்சத்திரங்களின் சம்பளத்தில் அவர்களது ஊழியர்களின் சம்பளம், ஷூட்டிங்கிற்காக உள்ளூரில் மேற்கொள்ளும் போக்குவரத்து செலவு, உள்ளூரில் தங்கும் செலவு, ஷூட்டிங்கில் ஏதாவது உணவு சாப்பிட்டால் அதற்கான செலவு அனைத்தும் அடங்கும். இதனால் சம்பளத்தை தனது படத்தில் நடிக்கும் நட்சத்திரம் அல்லது கதாபாத்திரங்களின் அடிப்படையில் தயாரிப்பாளரே முடிவு செய்வார். நட்சத்திரங்கள் தொடர்பான சம்பளம் முடிவு செய்யப்பட்ட பிறகு வேறெந்த பணத்தையும் தயாரிப்பாளர் நேரடியாக கொடுக்க கூடாது.

இதே விதி முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பொருந்தும்.
படம் தொடர்பான ஒப்பந்தம் அனைத்து சம்பள விவரங்களுடன், ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே முடிவு செய்யப்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் அனைத்தும் சாம்பரினால் உறுதி செய்யப்பட வேண்டும்.

முடிவு செய்யப்பட்ட கால்ஷூட் / ஷூட்டிங் நேரம் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். அதேபோல் தினசரி ஷூட்டிங் குறித்த அறிவிக்கை பராமரிக்கப்பட வேண்டும்.

திரைப்படங்களில் ஒடிடி மற்றும் தொலைக்காட்சிகளின் பெயர்கள் இனி இடம்பெறாது. படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பின்பே இனி ஒடிடி-யில் வெளியிடலாம்.

இப்படி பல முக்கிய அம்சங்கள் தெலுங்கு சினிமாவில் முன் வைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் நடைபெற்ற வேலை நிறுத்தமான ’டோலிவுட் பந்த்’திற்கு பிறகு இம்முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

நல்ல விஷயத்தை தானே யோசித்திருக்கிறார்கள் என்று சாதாரண ரசிகனுக்கு தோன்றலாம். ஆனால் இதில் உள்குத்துகள் இருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்றுதான் இந்த விதிகளை முன்மொழிந்திருக்கிறது.

தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் ஆறு கமர்ஷியல் ஹீரோக்களுக்கு இந்த விதிகள் பாதிக்காது.. மகேஷ் பாபு, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர். ராம் சரண், பவன் கல்யாண், அல்லு அர்ஜூன் என இந்த ஆறு ஹீரோக்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இவர்களது சம்பளத்தில் யாரும் கை வைக்கவேண்டாம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

இவர்கள் எத்தனை கோடிகள் வேண்டுனாலும் வாங்கலாம், படத்திற்கு படம் சம்பளம் ஏற்றலாம். யாரும் கேட்க மாட்டார்கள்.

ஆனால் உச்ச நடிகர்களுக்கு அடுத்து இருக்கும் இரண்டாம் கட்ட கமர்ஷியல் ஹீரோக்கள் மத்தியில், இந்த தீர்மானங்கள் கடப்பாறையை வைத்து அஸ்திவாரத்தை தகர்ப்பது போல ஆட்டம் காண வைத்திருக்கின்றன.

மேலே கூறிய டாப் ஸ்டார்களுக்கு கடும் போட்டியாக, தங்களுக்கு சொந்த திறமையால் முன்னெறிக் கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா, ரவி தேஜா, நாநி, வருண் தேஜ், நாக சைதன்யா போன்ற நடிகர்களை குறி வைத்தே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெலுங்கு சினிமாவில் கூறுகிறார்கள்.

இரண்டாம் கட்ட கமர்ஷியல் ஹீரோக்களில் ரவி தேஜா 18 கோடி சம்பளம் வாங்குகிறார். நாநி 15 கோடி வாங்கி வருகிறார். விஜய் தேவரகொண்டா 25 கோடி கேட்க ஆரம்பித்திருக்கிறார்.

இந்த ஹீரோக்களை முதலில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நடிகர்களைப் போல் இயக்குநர்களில் சிலருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது.

இதில் ராஜமெளலி, த்ரிவிக்ரம், ’புஷ்பா’ புகழ் சுகுமார் போன்ற இயக்குநர்களின் சம்பள விஷயத்தில் எந்த கெடுபிடியையும் முன்வைக்கவில்லை.

நடிகர்கள் மற்றும் இயக்குநர்களில் ஒரு சிலருக்கு மட்டும் ஏன் சிறப்புச் சலுகைகள் என்றால் அங்கேயும் இருக்கிறது ஒரு உள்குத்து அரசியல்.

கில்ட்டில் உறுப்பினராக இருக்கும் தயாரிப்பாளர்களில் பலர் இந்த ஆறு உச்ச நட்சத்திரங்களை வைத்து படமெடுப்பவர்கள். இன்னும் சிலர் இந்த டாப் இயக்குநர்களை தங்களது படங்களுக்கு கமிட் செய்திருப்பவர்கள்.

இதனால்தான் இந்த டாப் லிஸ்ட் மேல் சேம்பருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ரொம்பவே கரிசனம்.

பொதுவாகவே தெலுங்கு சினிமா குடும்ப ஆதிக்கத்தின் கீழ்தான் இருந்து வருகிறது. என்.டி.ஆர். குடும்பம், கிருஷ்ணா குடும்பம், சிரஞ்சீவி – ’வாரிசு[’ பட தயாரிப்பாளர் தில் ராஜூ குடும்பங்கள், நாகேஸ்வரராவ் குடும்பம், ராமா நாயுடு குடும்பம் என தெலுங்கு சினிமாவில் ’பெரிய கட்டு’ சம்பிரதாயங்கள் இருந்து வருகின்றன.

டோலிவுட்டில் இந்த குடும்பங்களின் ’தல’, ’வாரிசு’களுக்கு எப்பொழுதும் ரெட் கார்பெட் மரியாதை, சலுகைகள் கொடுக்கப்படும்.

இந்த குடும்பங்களைச் சாராத ஒருவர் கமர்ஷியல் ஹீரோவாக தலை நிமிர்வது அவ்வளவு சுலபமானதும் அல்ல. இரண்டு ஹிட் கொடுத்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீங்கள் மேக்கப் போடுவதற்கு வாய்ப்பே இல்லாமல் கூட பண்ணி விடுவார்கள். ஒரு தயாரிப்பாளர் கமிட் பண்ணுவார். ஆனால் படமெடுக்க மாட்டார். ஆர்.ஏ.சி.யில் இருப்பது போல் அந்த ஹீரோ காத்திருக்க வேண்டியதுதான்.

இந்த மாதிரியான பின்னணி இருந்தாலும், பெரிய நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளம் நியாயமானதுதான். அவர்களுக்கு ஏற்ற வியாபாரம் இருக்கிறது. அதனால் கேட்கிறார்கள். விருப்பம் உள்ள தயாரிப்பாளர்கள் மட்டும்தானே அவர்களை கமிட் செய்கிறார்கள். இது நடிகர் – தயாரிப்பாளர் என இருதரப்பிலும் சேர்ந்து எடுக்கப்படும் முடிவு. அதனால் இதில் குறை சொல்ல என்ன இருக்கிறது என்று ஒரு வாதமும் முன் வைக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது கூட சிரஞ்சீவி அதிகம் எதிர்பார்த்த ‘ஆச்சார்யா’ படம் வாஷ் அவுட் ஆனது. உடனே தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் செட்டில் செய்திருக்கிறார் என்றும் ஒரு வாதத்தை முன் வைக்கிறது டோலிவுட்.

இரண்டாம் கட்ட ஹீரோக்களுக்கு பிஸினெஸ் என்பது இவ்வளவுதான் என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் முழு சம்பளத்தையும் வாங்கிவிட்டுதான் டப்பிங் பேசவே வருவார்கள். அந்தளவிற்கு கெடுபிடி செய்கிறார்கள். சில படங்கள் வெற்றி பெறலாம். அப்போது தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் சில படங்கள் தோல்வி அடைந்தால், போட்ட மொத்த முதலீடுக்கும் சிக்கல்தான்.

இதனால்தான் இந்த புதிய கட்டுப்பாடுகளை முன் வைத்திருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டு இருந்தாலும், இதை எந்தளவிற்கு செயல்படுத்த முடியுமென்பது இனிதான் தெரியவரும்.

ஆனால் தெலுங்கு சினிமாவில் உருவாகி இருக்கும் இந்த மாற்று சிந்தனை, தமிழ் சினிமாவிலும் கொஞ்சம் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

இங்கே குடும்ப ஆதிக்கம் இல்லை. விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜீவா என வாரிசு நட்சத்திரங்களுக்கு ஒரு பெரிய பட்டியல் இருந்தாலும், அவர்களது குடும்பம் ஆதிக்கம் ஒரு சில வரம்பிற்கு மேல் எடுப்பட்டது இல்லை. திறமை உள்ளவர்களை தமிழ் ரசிகர்கள் வாரியணைக்க தவறியதே இல்லை. உதாரணத்திற்கு அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என ஒரு லிஸ்ட் போடுமளவுக்கு பெயர்களை சொல்லலாம். ஒரு சில வாரிசுகளை தவிர்த்து புதியவர்கள் கமர்ஷியல் ஹீரோக்களாக முன் நிற்கிறார்கள்.

அதனால் இங்கு எதன் அடிப்படையில் சம்பள விஷயத்தை அணுகுவது என்ற தெளிவு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தில் நிலவுகிறதாம்.

கொஞ்சம் பொறுத்திருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...