No menu items!

ஷிவம் மவி – இந்தியாவின் புதிய நட்சத்திரம்

ஷிவம் மவி – இந்தியாவின் புதிய நட்சத்திரம்

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட்களை வீழ்த்தி  கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார் ஷிவம் மவி.  ‘யார்யா நீ… இத்தனை நாளா எங்கய்யா இருந்தே?’ என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இன்ஸ்விங்கர் மற்றும் அவுட்ஸ்விங்கர்களால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் இப்படி ஒரே நாளில் ஹீரோவான ஷிவம் மவி மீரட்டுக்கு அருகில் உள்ள சினா என்ற கிராமத்தில் பிறந்தார்.  அவரது அப்பா ஒரு பஸ் கண்டக்டர். மிகவும் எளிமையான குடும்பம் மவியுடையது.

 “சிறுவயதில் மற்ற குழந்தைகளெல்லாம்  கார்ட்டூன் சேனல்களைப் பார்க்க, மவி மட்டும் ஏதாவது கிரிக்கெட்ட் போட்டிகளைப் பார்ப்பான். அது புதிய போட்டியா, பழைய போட்டியின் மறு ஒளிபரப்பா என்றெல்லாம் யோசிக்கமாட்டான்.  எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொண்டு இருப்பான். சிறுவயதில் பேட்டிங்தான் மவிக்கு பிடித்தமானதாக இருந்தது. எங்கள் கிராமத்தில் கிரிக்கெட் பேட்டெல்லாம் கிடைக்காது. துணியை அடித்து துவைக்க பயன்படுத்தும் ‘தாப்பி’ என்ற மரக்கட்டையை பேட்டாக பயன்படுத்தி கிரிக்கெட் ஆடுவான்.

எந்நேரம் பிளாஸ்டிக் பந்தை வைத்து ‘டொக்.. டொக்..’ என்று தட்டிக்கொண்டு இருப்பதால் முதலில் எங்களுக்கு கோபம் கோபமாக வரும். ஆனால் அவனுக்கு கிரிக்கெட்டில்தான் ஆர்வம் என்பது தெரிந்ததால் பின்னர் அவன் போக்கிலேயே விட்டுவிட்டோம்” என்கிறார் மவியின் அம்மா கவிதா.

மவிக்கு 8 வயதாக இருந்தபோது அவரது குடும்பம் நோய்டாவுக்கு குடிபெயர்ந்துள்ளது.  நொய்டாவுக்கு வந்த சில நாட்களிலேயே மவிக்கு அந்த ஊர் ரொம்ப பிடித்துப் போய்விட்டது. அங்கே தன் வயதைக் கொண்ட பல சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிவந்ததுதான் இதற்கு காரணம். பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் வீட்டுக்கு பக்கத்தில் மற்ற சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் மவி.

மவியின் கிரிக்கெட் ஆர்வத்தைப் பார்த்த அப்பா, அருகில் இருந்த ஒரு பயிற்சி மையத்தில் அவரை சேர்த்துள்ளார். ஆரம்பத்தில் பேட்டிங்கில் மட்டும்தான் அவர் பயிற்சி செய்திருக்கிறார். ஒரு நாள் சும்மா பந்து வீசிப் பார் என்று பயிற்சியாளர் சொல்ல, மவியும் கேட்டிருக்கிறார். முதல் நாளிலேயே அவர் பந்து வீசிய விதம் அங்கிருந்த பயிற்சியாளரான பூல்சந்த் சர்மாவைக் கவர்ந்திருக்கிறது.

“பேட்டிங்கை விட்டு இனி பந்துவீச்சில் கவனம் செலுத்து” என்று மவியிடம் சொல்லியிருக்கிறார் பூல்சந்த் சர்மா. அதிலிருந்து அவரது வாழ்க்கை மாறிவிட்டது.  நாளாக நாளாக அணியின் முன்னணி பந்துவீச்சாளராக மாறிவிட்டார் மவி. இந்த காலகட்டத்தில் அவர் பயிற்சி பெற்ற கிளப்புக்கும், நேபாள நாட்டு அணிக்கும் இடையே ஒரு  போட்டி நடக்க, அதில் பல விக்கெட்களை அள்ளியிருக்கிறார். தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் வாய்ப்பு வந்தது.

2018-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைதான் சர்வதேச அளவில் மவிக்கு முதல் அறிமுகத்தை கொடுத்தது. அதில் பல விக்கெட்களை அவர் வீழ்த்த, ஐபிஎல்லில் கேகேஆர் அணி அவரை வாங்கியது. ஆனால் காயங்களால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து ஆடமுடியாமல் போக, அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

2018-ம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவில் சாதிக்க முடியாமல் இருந்த மவிக்கு, கடந்த ஐபிஎல் திருப்புமுனையாக இருந்தது. இந்த ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 கோடி ரூபாய் கொடுத்து மவியை வாங்கியது. அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். மிக முக்கியமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும், மவிக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி ஏற்பட்டது. கேப்டன் பாண்டியாவுக்கு பிடித்த பந்துவீச்ச்சாளராக மாறினார் மவி.

இபோது இந்திய அணிக்கு கேப்டனாக பாண்டியாவுக்கு முடிசூட்டப்பட. தான் கேட்கும்படி பந்துவீசும் மவியை ஆடும் லெவனில் சேர்த்தார் ஹர்த்திக் பாண்டியா. இங்கும் மவிஉ ஏமாற்றவில்லை. தனது இன்ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங்கர்களால் முதல் போட்டியிலேயே 4 விக்கெட்களை அள்ளி இருக்கிறார்.

தன் மகனின் 4 ஆண்டு கனவு இந்த போட்டியால் நனவாகி இருப்பதாக உருகுகிறார் மவியின் அப்பா பங்கஜ். மவின் கனவு இத்துடன் முடிந்துவிடக்கூடாது. வளர்ந்துவரும் இளம் வீரர்களின் கனவு நாயகனாகும் அளவுக்கு கிரிக்கெட்டில் இன்னும் வளர வேண்டும். என்பதே அனைவரின் ஆசை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...