No menu items!

பாலியல் குற்றம் – கமல் செய்த தவறும் தப்சி செய்த சரியும்!

பாலியல் குற்றம் – கமல் செய்த தவறும் தப்சி செய்த சரியும்!

பிரபு ராஜதுரை


முதலில் ‘கண்ணூர் ஸ்குவார்’…

ஸ்குவாட் என்பது சட்டரீதியான அமைப்பு அல்ல. குற்றவாளிகள் யார் என்று தெரியாத, சற்று பரபரப்பான வழக்குகளில் இம்மாதிரியான தனிப்படை அமைப்பார்கள். தனிப்படை காவலர்கள் கையில் அகப்பட்டவர்களை அடி அடி என்று அடித்து குற்ற ஒப்புதல் வாங்கி குற்றம் பதிவு செய்த காவலரிடம் ஒப்படைத்து விட்டு கலைந்து விடுவார்கள். தொடர்ந்து குற்றத்தை விசாரிக்கும் அதிகாரி சாட்சிகளை சேகரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வார்.

இந்தப் படத்தில் கொள்ளையடிக்க வந்த கும்பலால், செல்வந்தர் ஒருவர் கொல்லப்படுகிறார். கொலை நடந்த சமயம் வந்து சென்ற வண்டிகளை வைத்து, கண்ணூர் ஸ்குவாட் வட இந்தியாவிற்குச் சென்று கொலையாளிகளைப் பிடித்து வந்த சம்பவத்தை கற்பனை சற்றுத் தூக்கலாகக் கலந்து திரைக்கதையாக்கி இருக்கிறார்கள்.

முக்கியமாக கொலை செய்யப்பட்டவரின் கண் முன்னரே அவளது இளம் மகளை வல்லுறவு கொள்ளும் கற்பனை சங்கடப்படுத்தியது. பணம் எங்கே எங்கே என்று அவசர அவசரமாகத் தேடிக் கொண்டிருப்பவர்கள் வன்புணர்வு எண்ணம் கொள்ளும் அபத்தத்திற்கான காரணம், கையில் ஒரு பெண் கிடைத்து விட்டால் வில்லன் வன்புணர்ந்துதானாக வேண்டும் என்பது இந்திய திரைப்பட இலக்கணம் என்பதுதான்.

ஹமாஸ் விடுவித்த இஸ்ரேல் கைதியின் பேட்டியை பார்த்தேன். அந்தப் பெண் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்து அவளுடன் ‘கை மல்யுத்தம்’ செய்திருக்கிறான் ஹமாஸ் போராளி. கைக்கு மேலாக ஒரு துணியை சுற்றிக் கொண்டானாம். ‘ஏன்’ என்று கேட்டதற்கு, ‘பெண்களைத் தொடக்கூடாது’ என்று பதில் வந்ததாம்.

ஆனால், நம் திரைக் கதாசிரியர்களுக்கு பெண் என்றால் செக்ஸ்தான்.

மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வரும் அந்தச் சிறுமியை மம்முட்டி தனியே விசாரிக்கிறார். தன் மீதான தாக்குதலை மம்முட்டியிடம் கூறும் சிறுமி இறுதியில் கூறுவதுதான் வல்லுறவுக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் பின்னுக்குத் தள்ளுவதான பிற்போக்குத்தனம்.

தனக்கு ஏற்பட்ட கொடுமையை யாரிடம் கூறக்கூடாது என்று அந்தச் சிறுமி மம்முட்டியிடம் வேண்டுகோள் வைக்கிறார். மம்முட்டியும் அதை ஏற்றுக்கொள்கிறார்.

இவ்வாறு ஒரு சிறுமி, அதுவும் இஸ்லாமிய சிறுமி வேண்டுகோள் வைப்பது இயல்பில் நிகழக்கூடியதுதானே என்றால், உண்மைதான். ஆனால், இப்படி ஒரு வசனமோ காட்சியோ இல்லாமலிருந்தால் கூட படத்திற்கு குறைவு ஒன்றும் இல்லை. மாறாக விறுவிறுப்பு கூடியிருக்கும்.

வல்லுறவு என்பதில் பாதிக்கப்படுபவருக்கு அவமானம் ஏதுமில்லை. மாறாக குற்றவாளிக்குதான் அவமானம் என்ற எண்ணம் தொடர்ந்து நம் மகள்களிடம் விதைக்கப்பட வேண்டும்.

‘இதை வெளியே யாரிடமும் சொல்லிடாதீடி’ என்று மகள் தலையில் தண்ணீர் ஊற்றி அக்கினிப் பிரவேசம் செய்த கதையை ஜெயகாந்தன் எழுதி அறுபது வருடங்களாகிறது. இன்னமும் ஜெயகாந்தனையேவா பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது?

த்ருஷ்யத்தில் மோகன்லால் செய்ததை கண்ணூர் ஸ்குவாட்டில் மம்முட்டி செய்திருக்கிறார். பெண்களுக்கு எதிரான வன்முறையை எவ்வாறு எதிர்கொள்வது என்ற பாடம் மலையாளிகளுக்கு உடனடியாகத் தேவைப்படுகிறது.

‘ஆமாம், நாங்கள் பணம் வாங்கினோம். அதனால் என்ன? பணம் கொடுத்து விட்டதாலேயே சட்டப்படி… சட்டப்படி சொல்லுங்கள் அவர்களுக்கு எங்களை பலாத்காரம் செய்யும் உரிமை வந்து விடுமா?” தொடர்ந்த குறுக்கு விசாரணையின் அழுத்தத்தால் ஒரு கட்டத்தில் உடைந்து போய் ஃபாலக் அலி (கீர்த்தி குல்காரி) கதறும் அந்தக் காட்சியில்தான் ‘பிங்க்’ மற்ற திரைப்படங்களில் இருந்து வித்தியாசப்படுகிறது.

ஆனால், படம் பார்த்த பலர் ‘ஃபாலக் அலி ஒப்புக்கொண்டது போல உண்மையிலேயே தோழிகள் பணம் வாங்கினார்களா?’ என்ற சந்தேகத்தை இணையத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருந்ததில் இயக்குஞரும் கதாசிரியர்களுமான அனிருத்த ராய் செளத்திரி, சூஜித் சிர்கார் ஆகிய இருவரும் படத்தில் தாங்கள் சொல்ல நினைத்த கருத்தை கடத்துவதில் சிலரிடம் தோல்வியடைகிறார்கள்.

இதுவரை நாம் வகுத்து வைத்திருக்கும் ஒழுக்கக் கோட்பாடுகளை ஒரேடியாக மீறி அடுத்த கட்டத்திற்கு நம்மை தயார்ப்படுத்துவது அவ்வளவு சுலபமல்லதான்.

அந்த அச்சத்தில்தான், இங்கு இருப்பதிலேயே தாராள எண்ணம் கொண்டவராக அறியப்படும் கமல்ஹாசன் கூட தனது ‘பாபநாசம்’ படத்தில் மிகவும் பாதுகாப்பாக பயணித்து, நமது பெண் பிள்ளைகளுக்கு எதைச் சொல்ல வேண்டியதிருக்கிறதோ அதைச் சொல்லக் கூடிய அருமையான வாய்ப்பினை நழுவ விட்டிருப்பார்.

கமல்ஹாசனை சொல்லிக் குற்றமில்லை. ‘உங்கள் புகைப்படத்தினை யாராவது தவறாக பயன்படுத்தினால், யாரும் செய்யாததையா நான் செய்து விட்டேன் என்ற தைரியம் கொண்டு எங்களிடம் வந்து புகார் செய்யுங்கள்’ என்ற விழிப்புணர்வை ஊட்ட வேண்டிய நமது சைபர் க்ரைம் காவல் அதிகாரிகள், ‘பெண்கள் தங்களது படங்களை இணையத்தில் பொதுவில் வெளியிடாதீர்கள்’ என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். விட்டால் ‘ஸ்மார்ட் ஃபோன்கள் அதிகரித்து விட்டதால், பெண்கள் பர்தா அணிந்து வெளியே வருவதுதான் நல்லது’ என்றும் சொல்வார்கள் போல.

ஆனால், பாபநாசம் சுயம்புலிங்கத்தின் மகளைப் போல எல்லா பிள்ளைகளும் தவறு ஏதும் செய்யாமலேயே இக்கட்டில் மாட்டிக்கொள்பவர்கள் இல்லை. விளையாட்டுத்தனமான தைரியத்தில் தாங்களும் இசைந்து செய்த செயல்களினால் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளும் மகள்களுக்குத்தான் பெற்றோரின், சமூகத்தின் அரவணைப்பும் புரிதலும் தைரியமும் தேவைப்படுகிறது.

‘பிங்க்’ அந்தப் புரிதலை கூர்மையான அதன் வசனங்கள் மூலம் தருகிறது.

தில்லி அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கும் மூன்று தோழிகள். இரவு கேளிக்கைக்கு சென்ற இடத்தில் பழகிய ஆண்களோடு விடுதிக்கு செல்கிறார்கள். அவர்களது தாராள குணத்தால் உந்தப்படும் ஆண்கள் அவர்களை பலாத்காரம் செய்ய முயல்கிறார்கள். தோழிகளில் ஒருவரான மினால் அரோரா (தப்ஸீ), ரஜ்வீர் சிங்கை பாட்டிலால் தலையில் அடித்து தப்பிக்கிறார்கள்.

சமாதான முயற்சிகள் தோல்வியடைய அரசியல்வாதியின் மகனான ரஜ்வீர் சிங் செல்வாக்கால் மினால் மீது கொலை முயற்சி வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

மிகச்சிறப்பாக கட்டமைக்கப்பட்ட திரைக்கதையில், ‘தாங்களே இசைந்துதான் தோழிகள் ரஜ்வீர் சிங்குடன் சென்றார்கள் என்ற ரீதியில் நடத்தப்படும் குறுக்கு விசாரணையின் வெப்பத்தை தாங்க முடியாத ஃபாலக், ‘ஆமாம் காசு வாங்கினோம்’ என்று ஏற்றுக்கொள்கிறார். ஆனாலும், அவர்களது வழக்குரைஞரான தீபக் ஷெகால், ‘ஒரு பெண் இல்லை என்று சொன்னால் இல்லைதான். ஒரு ஆண் அந்த இடத்தில் நிறுத்தி விட வேண்டும்’ என்று வாதிட்டு வழக்கை வெல்வதுதான் கதை.

தில்லி நிர்பயா வழக்கில், ‘அந்த இரவில் அந்தப் பெண்ணுக்கு வெளியே என்ன வேலை’ என்று கேட்டவர்களுக்கு பதில்தான் ‘பிங்க்’ படத்தின் ‘நோ மீன்ஸ் நோ.’

இதற்கே, ‘அது எப்படி அவ்வளவு தூரம் விடுதி வரை போய் விட்டு பலாத்காரம் என்றால்’ என்று பொங்குபவர்கள் ஜூடி போஸ்டர் நடித்து 1998இல் வெளி வந்த ‘தி அக்கியூஸ்ட்’ படத்தைப் பார்த்தால் என்ன சொல்வார்களோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...