தமிழ் நாட்டில் பொழுதுப்போக்கு அம்சங்களுக்கு இருக்கும் போட்டியில் விஜய் தொலைக்காட்சி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறது.
ஆனால் இப்போது வருவாய் ஈட்டுவதில் தொலைக்காட்சிகள் படாதப்பாடு பட்டு வருகின்றன. இதனால் பல தொலைக்காட்சிகள் தாக்குப்பிடிக்க முடியாமல் கை மாறி வருகின்றன.
அந்தவகையில் விஜய் டிவியும் அந்தப் பட்டியலில் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
விஜய் டிவியை டிஸ்னி நிறுவனம் கையகப்படுத்தி இருந்தது. ஆனால் தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காத காரணத்தினால், தொலைக்காட்சியை மட்டும் விற்று விடலாம், ஒடிடி தளமான ஹாட் ஸ்டாரை மட்டும் கைவசம் வைத்து கொள்ளலாம் என டிஸ்னி முடிவெடுத்து இருப்பதாகவும் தெரிகிறது.
விஜய் டிவி விற்பனைக்கு வருகிறது என்றதுமே அதை வாங்க கடும் போட்டி நிலவியது. அதிலும் குறிப்பாக அம்பானியின் ஜியோ, உலக அளவில் முன்னணி வகிக்கும் சோனி லைவ் என இரண்டு நிறுவனங்களுக்கு இடையே யார் வாங்குவது என விலை தாறுமாறாக எகிறியது.
இந்தியாவில் பொழுதுப்போக்கு துறையில் தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதில் அம்பானி மும்முரமாக இருக்கிறார். இதற்கு காரணம் அவரது மனைவி நீத்தா அம்பானி. இவரது முயற்சிகளால்தான் இப்போது மும்பையில் ஜியோ ஸ்டூடியோ தொடங்கப்பட்டுள்ளது. சினிமாவில் இருக்கும் வர்த்தகத்தில் ஜியோ அசைக்க முடியாத போட்டியாக இருக்கவேண்டுமென விரும்புகிறாராம்.
இதனால் விஜய் டிவியை கையகப்படுத்துவதில் இப்போது ஜியோ நிறுவனத்தின் கை ஓங்கியிருப்பதாக தெரிகிறது. இறுதி ஒப்பந்தம் மட்டும்தான் மீதமிருக்கிறது. அதுவும் கூடிய சீக்கிரமே கையெழுத்தாகிவிடும் என்ற தகவல் கசிந்திருக்கிறது.
விஜய் டிவியின் மதிப்பு சுமார் 3 பில்லியன் டாலர் என்று கூறுகிறார்கள்.