No menu items!

லியோ விஜய் பேச்சு – Decoded

லியோ விஜய் பேச்சு – Decoded

லியோ வெற்றி விழா விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. சமூக ஊடகங்களை திறந்தால் எங்கெங்கும் விஜய்தான். அப்படி என்ன பேசினார் விஜய்?

ரசிகர்கள்தான் தனக்கு எல்லாம் என்பதால் அவர்களை குளிர்வித்து தனது பேச்சைத் தொடங்கினார் விஜய். “என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான  நண்பா… நண்பி. இவ்ளோ நாள் நான்தான் உங்கள என் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன்னு நினைச்சேன். இப்போதுதான் தெரியுது நீங்கதான் உங்கள் நெஞ்சத்தில் குடி வச்சிருக்கிங்க. நான் குடியிருக்கும் கோயில் நீங்க. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நீங்க என் மேல வச்சிருக்கிற அன்பு நான் என்ன செய்வேன் நண்பா? என் தோலை செருப்பாக தைத்துக் கொடுத்தாலும் உங்கள் அன்புக்கு ஈடாகாது. ஒண்ணு மட்டும் நிச்சயம் நான் சாவுற நிமிஷம் வரைக்கும் உங்களுக்கு என்றும் உண்மையாக இருப்பேன்” என்று தனது பேச்சைத் தொடங்கினார் விஜய். இந்த வரிகளுக்கே விஜய் ரசிகர்களிடமிருந்து அடங்காத ஆரவாரம் எழுந்தது.

’ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு ரஜினி ரசிகர்களுக்கும், தனது ரசிகர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பைப் பற்றி மறைமுகமாக குறிப்பிட்ட விஜய், “சமீப காலமாக சமூக வலைதளங்களில் உங்களது கோபம் அதிகமாக உள்ளது. ஏன்? இவ்வளவு கோபம் உடம்புக்கு நல்லதில்லை. அதெல்லாம் வேண்டாம் நண்பா. காந்திஜி சொல்லியிருக்கிறார் வன்முறையைவிட அகிம்சை வலுவான ஆயுதம். அதனால Cool, Calm.  நாம் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். அது நம்முடைய வேலையுமில்லை. நமக்கு நிறைய வேலை இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே வந்த விஜய் தனது வழக்கமான பாணியான குட்டிக் கதைக்கு மாறினார்.

’நான் ஒரு குட்டிக் கதை சொல்றேன். ஒரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க. அந்த காட்டுல மான், மயில், முயல், இந்த காக்கா, கழுகு….’ இப்படி சொல்லிக் கொண்டே வரும் விஜய் ஒரு இடைவெளிவிடுகிறார். ரசிகர்கள் கூச்சல் விண்ணை பிளக்கிறது. காரணம் ரஜினி சொன்ன காக்கா, கழுகு கதை. மீண்டும் தொடருகிறார் விஜய். ’காடுன்னு இருந்தா இதெல்லாம் இருக்கும் தானே.  அதுக்கு சொன்னேன் பா. ஒருத்தர் வில் அம்பு எடுத்து போறார். உன்னொருத்தர் ஈட்டி எடுத்து போறார். வில் எடுத்து போனவர் முயல அடிச்சி தூக்கிட்டாரு. ஈட்டி வைத்திருந்தவர் யானைய குறி வெச்சு மிஸ் பண்ணிட்டார். ரெண்டும் பேரும் ஊருக்கும் திரும்பி வருவாங்க. இதுல யாருக்கு வெற்றி. அந்த யானைய குறி வைத்தவர் தான் சாதனையாளர்.Achiever.

ஏன்னா, நம்மால் எதில் எளிதாக வெல்ல முடியுமோ அதை செய்வது வெற்றி அல்ல. எது முடியாதோ அதை செய்வது தான் வெற்றி. முயற்சியாவது செய்ய வேண்டும். பாரதியார் சொன்ன வரிகள் இது பெரிதினும் பெரிது கேள். அப்படி இருக்கணும் உங்க ஆசைகள். அப்படி இருக்கணும் உங்க உழைப்பு.. பெரிதாக கனவு காணுங்கள். “Small aim is crime” என கலாம் கூறியுள்ளார்.’ என்றார்.

அடுத்து அப்பா, மகன் பற்றி பேச ஆரம்பித்தார். இதுவும் சர்ச்சையானது. கலைஞர்-ஸ்டாலினை சொல்கிறார் என்று கண்டனங்கள் வந்திருக்கிறது.

விஜய் பேசியது இதுதான். ”ஒரு குட்டிப் பையன் ஆசையா அவங்க அப்பா சட்டைய எடுத்து போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச் எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ரில் ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த ஷர்ட் அவனுக்கு செட்டே ஆகாது. தொள தொளனு இருக்கும். வாட்ச் கையிலயே இருக்காது. அந்த சேர்ல உட்காரலாமா வேணாமா? தகுதி இருக்கா, இல்லையா? அதெல்லாம் அவனுக்கு தெரியாது. அப்பா சட்டை. அப்பா மாறி ஆகணும்னு கனவு. அதில் என்ன தவறு. அதனால, பெருசா கனவு காணலாம். ஒருத்தரும் ஒன்னும் பண்ண முடியாது! நம்மால் எதை மிகவும் எளிதாக ஜெயிக்க முடியுமோ அதை ஜெய்ப்பது வெற்றி இல்லை நண்பா. நம்மால் எதை ஜெயிக்கவே முடியாதோ அதை வெற்றி கொள்வதுதான் வெற்றி. ”

லியோ படத்தின் பாடல்களால் ஏற்பட்ட சர்ச்சையைப் பற்றி பேசிய விஜய், “விரல் இடுக்கில் தீப்பந்தம் என்ற வரி வந்தது. அதை ஏன் நீங்கள் சிகரெட் என்று எடுத்துக் கொள்கிறீர்கள். அதை பேனா என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தானே. பத்தாது பாட்டில் நான் குடிக்க, வரியை நீங்கள் சரக்கு என்று ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள். கூழ் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே. இப்படி எல்லாம் மழுப்பலான பதிலைச் சொல்லி நான் இங்கிருந்து இறங்கி செல்ல முடியும். ஆனால் அதை நான் செய்வதில்லை. தயவு செய்து சினிமாவை சினிமாவாக பாருங்கள்.  சினிமா என்பது மக்கள் விரும்பக்கூடிய ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. அதில் வரக்கூடிய காட்சிகள் மற்றும் இன்ன பிற விஷயங்கள் அனைத்தும் கற்பனை. அது முழுக்க முழுக்க செயற்கை தனமானது என்பது உங்க எல்லோருக்கும் தெரியும்.

ஒரு சில படங்களில் ஒரு நல்லவன், ஒரு கெட்டவன் இருப்பான். அதை வேறுபடுத்தி காண்பிப்பதற்கு, நீங்கள் என்ன செய்வீர்கள் அதற்கு தகுந்தார் போன்ற காட்சிகளை, அதற்கு தகுந்தார் போன்ற வசனங்களை வைப்பீர்கள். இதில் சில கேரக்டர்கள் வெளிப்படுத்தக்கூடிய எண்ணங்களோ, காட்சிகளோ உங்களை பாதிக்குமா?

உங்களுக்கு நான் அறிவுரை சொல்ல வேண்டுமா.. அதற்கு அவசியமே கிடையாது. எனக்கு தெரியும் அதையெல்லாம் நீங்கள் பாலோ செய்யவே மாட்டீர்கள் என்று.. பள்ளி, கல்லூரிகளுக்கு பக்கத்திலேயே ஒயின்ஷாப்கள் இருக்கின்றன. அந்த வழியாக செல்லும் மாணவர்கள் தண்ணி அடித்து விட்டா,  தினமும் பள்ளிக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு பக்காவான தெளிவு இருக்கிறது.” என்று கேள்வி எழுப்பினார்.

சினிமாவிலும், அரசியலிலும் எம்ஜிஆர் போல் உச்சம் தொட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் இந்த உரையில் விஜய் மறைமுகமாக தெளிவுபடுத்தி உள்ளார்.

 “ஒரு முறை ஏவிஎம் சரவணன் சார், வடபழனி மெயின் ரோட்டுல கார்ல போனப்போ சிக்னல்ல இருந்த ஒரு அம்மாவுக்கு உதவி செய்திருக்கார. அந்த அம்மா உடனே நீ நல்லா இருப்ப எம்.ஜி.ஆர்-ன்னு சொல்லி இருக்காங்க. அந்த காலத்துல யார் அள்ளி கொடுத்தாலும் எம்.ஜி.ஆர் அவர்களா தான் இருக்கும். அப்படின்னு பேர். நாம யாரையும் ஒப்பிட்டு பேசல. நாம அவ்வளவு பெரிய ஆளும் இல்ல. ஆனா, நல்ல விஷயத்த எடுத்துக்கலாம். அந்த வகையில எனக்கு ஒரு குட்டி ஆசை. எதிர்காலத்துல எங்க நல்லது நடந்தாலும் அதை நம்ம பசங்கதான் பண்ணி இருப்பாங்க. அப்படின்னு ஒரு பேர் எடுக்கணும்னு எனக்கு ஒரு ஆசை” என்று தெரிவித்துள்ளார்.

லியோ படத்தைப் பற்றி பேசிய விஜய், “இயக்குநர் லோகேஷ் கனகராஜை எண்ணி பெருமை கொள்கிறேன். மாநகரத்தில் திரும்பி பார்க்க வைத்தார். கைதியில் திரும்ப திரும்ப பார்க்க வைத்தார். மாஸ்டர், விக்ரமை இந்தியாவையே திரும்ப பார்க்க வைத்தார். லியோவை.. இன்னும் ஹாலிவுட் தான் மிச்சம் இருக்கிறது” அடுத்து த்ரிஷாவுக்கு வந்தார்.

”20 வயசுல ஹீரோயின் ஆகுறது பெருசு இல்ல. 20 வருஷமா முன்னணி ஹீரோயினா இருக்குறது தான் பெருசு. நம்ம இளவரசி குந்தவை (திரிஷா) சூப்பர். சஞ்சய் தத் சார், அர்ஜுன் சார், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் சார்னு இந்த படத்துல அங்கமா இருக்குற எல்லாருக்கும் எனது வாழ்த்துகள். அட்லி, லோகேஷ், நெல்சன் எல்லாரும் நம்ம பசங்க. அவங்களை எண்ணை நான் பெருமை கொள்கிறேன். அவர்கள் மிக திறமையானவர்கள். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்” என்றார்.

கடைசியாக சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் விஜய், “புரட்சி தலைவர்னா ஒருத்தர்தான். நடிகர் திலகம்னா ஒருத்தர்தான். அதே மாதிரி உலக நாயகன் ஒருத்தர்தான். சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர் தான். தல-னா ஒருத்தர் தான். நீங்கள் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி. நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன்” என்றார்.

இறுதியாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் தான் பன்ச்.

இயக்குநரும் நடிகருமான அர்ஜுன், “விஜய்யாக இருப்பது கஷ்டமா.. ஈஸியா” எனக் கேட்க, அதற்கு விஜய் எழுந்து, ”வெளியே இருந்து பார்ப்பதற்கு வேண்டும் என்றால் கடினமாக இருக்கலாம்; ஆனால் உண்மையில் அது ஈஸியாக மட்டுமே உள்ளது. அதற்கு காரணம் ரசிகர்கள்தான்” எனப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அர்ஜுன், “நடிகர் விஜய் சீக்கிரம் அரசியலுக்கு வந்துவிடுவார்; மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது” என்றார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர்களான மிர்ச்சி விஜய்யும், டிடியும் விஜய்யிடம் ரேபிட் பையர் பாணியில் சில கேள்விகளை கேட்டனர்.

கல்வி என்கிற கேள்விக்கு விஜய்,” எல்லோருக்கும் சரிசமமாக ஏற்ற தாழ்வு இல்லாம கிடைக்கிறது.” எனக் கூறினார்.

மக்கள் என்கிற கேள்விக்கு விஜய் ,” புடிச்ச தட்டி கொடுப்பாங்க, புடிக்கலைனா தட்டி விட்ருவாங்க.” என பதிலளித்தார்.

எம்.ஜி.ஆர் என்கிற கேள்விக்கு விஜய்,” இதுவரை தோல்வி காணாத தலைவர்.” எனக் கூறினார்.

இறுதியாக , 2026 என கேட்ட கேள்விக்கு விஜய்,” 2026…2025க்கு அப்புறம் வர்ற வருஷம்.” என பதிலளித்தார். “வேற எதாவது சீரிஸாக கேட்கிறோம் ணே….” எனக் கேள்வியைத் தொடர்ந்தார். இதற்கு விஜய் ,” 2026ல ஃபுட்பால் வொர்ல்ட் கப் வருது, நீ வேணா செக் பண்ணி பாரு ப்ரோ.” எனக் கூற மேலும் கேள்வியை தொகுப்பாளர் மிர்ச்சி விஜய் தொடர்ந்தார். இறுதியாக ,” கப்பு முக்கியம் பிகிலு” என விஜய் கூற அரங்கமே அதிர்ந்தது.

விஜய் மனதில் ஏதோ திட்டம் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...