No menu items!

தன்னம்பிக்கை தந்தவர்: டைரக்டர் சித்திக் மறைவு – சூர்யா உருக்கம்

தன்னம்பிக்கை தந்தவர்: டைரக்டர் சித்திக் மறைவு – சூர்யா உருக்கம்

வடிவேலு நடித்த காமெடி ரோல்களிலேயே அதிகம் பிரபலமானது ‘கான்ட்ராக்டர் நேசமணி’ பாத்திரம்தான். கான்ட்ராக்டர் நேசமணியின் அத்தனை வசனங்களும் மீம்ஸ்களாக வைரலாகி வடிவேலுவை மக்கள்  மனதில் மறக்காமல் வைத்திருக்க காரணமாக இருந்துள்ளன. அந்த ‘காண்ட்ராக்டர் நேசமணி’ பாத்திரத்தை செதுக்கிய இயக்குநர் சித்திக் இன்று காலமாகிவிட்டார்.

சித்திக், கேரளா மாநிலம் கொச்சியில் 1954 ஆகஸ்ட் 1ஆம் தேதி பிறந்தவர். அப்பா பெயர், இஸ்மாயில் ஹாஜி; அம்மா ஜைனபா. களமச்சேரி புனித பால் கல்லூரியில் படித்து முடித்த பின்னர், 1983இல், பகத் ஃபாசில் தந்தையும் பிரபல மலையாள மூத்த இயக்குநருமான ஃபாசிலிடம் உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். முன்னதாக, கேரளாவில் பிரபலமான கொச்சி கலாபவன் குழுவில் சித்திக்கும் லாலும் நடித்துள்ளதை  ஃபாசில் பார்த்து ஈர்க்கப்பட்டுள்ளார். எனவே, இவர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.

ஃபாசிலிடம் இருந்து வெளியே வந்த பின்னர் சித்திக்கும் லாலும் இணைந்து சித்திக்-லால் என்ற பெயரில் படங்களை இயக்கினர். மற்றவர்கள் படங்களுக்கு திரைக்கதையும் எழுதினார்கள்.

இவர்கள் முதல் படம் மலையாளத்தில் வெளியான ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ (1989). பெரிய ஹிட். தொடர்ந்து ‘இன் ஹரிஹரன் நகர்’, ‘காட்பாதர்’, ‘வியட்நாம் காலனி’, ’ஹிட்லர்’, ‘கிங் லயர்’, ‘பிக் பிரதர்’ உட்பட 1989 – 95 காலகட்டத்தில் இவர்கள் மலையாளத்தில் இயக்கிய படங்கள் அனைத்துமே ஹிட்தான்.

பின்னர் இருவரும் பிரிந்தனர். சித்திக்  இயக்குனராகத் தொடர்ந்தார்; லால், நடிப்பு மற்றும் தயாரிப்பில் கவனம் செலுத்தினார்.

தமிழில் சித்திக்கின் முதல் படம் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான ‘ஃப்ரெண்ட்ஸ்.’ இப்படம் பெரும் வெற்றி பெற்றது. வடிவேலுவின் காண்ட்ராக்டர் நேசமணி பாத்திரம் இப்படத்தில்தான் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து பிரசன்னா நடித்த ‘சாது மிரண்டா’, விஜய் நடித்த ‘காவலன்’, அரவிந்த்சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, விஜயகாந்தின் ‘எங்கள் அண்ணா’ ஆகிய படங்களை இயக்கினார்.

சித்திக்கின் முதல் படமான ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ ரீமேக்தான் தமிழில் பிரபு, ரேவதி நடிப்பில் வெளியான ‘அரங்கேற்ற வேளை’. இவரது ‘நாடோடிக்காற்று’ படம்தான் தமிழில் பாண்டியராஜன், எஸ்.வி. சேகர் நடிப்பில் ‘கதாநாயகன்’ என்று வெளியானது. இரண்டுமே காமெடிக்கு புகழ்பெற்றவை.

சித்திக்கின் அனைத்து படங்களிலும் நகைச்சுவை பிரதானமாக இருக்கும். தமிழில் சித்திக் இயக்கிய ‘பிரண்ட்ஸ்’ மட்டுமல்ல ‘எங்கள் அண்ணா’ காமெடிகளையும் எப்போது பார்த்தாலும் சலிக்காது. விஜய்யின் ‘காவலன்’ படத்திலும் வடிவேலு காமெடியை மறக்க முடியாது.

தமிழில் சித்திக் நேரடியாக இயக்கிய படங்களும்கூட பெரும்பாலும் அவரது மலையாளப் படங்களின் ரீமேக் தான். மலையாளத்தில் அவர் இயக்கிய ‘பாடிகார்ட்’ படம்தான், தமிழில் விஜய் நடிப்பில் ‘காவலன்’ என்ற பெயரில் சித்திக்கால் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் சல்மான்கான் நடிப்பில் ‘பாடிகார்ட்’ என்ற பெயரிலேயே ரீமேக் செய்தார்.

மலையாளம், தமிழ், ஹிந்தி தவிர தெலுங்கிலும் சித்திக் படங்களை இயக்கியுள்ளார்.

சித்திக்குக்கு, 1984 மே 6இல் திருமணமானது. சஜிதாவை மணந்தார். இவர்களுக்கு சுமயா, சாரா, சுகோன் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக, நிமோனியாவால் பாதிக்கப்பட்டு கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு சித்திக் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் (7-8-23, திங்கட்கிழமை) மதியம் திடீரென சித்திக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் (ECMO – Extracorporeal membrane oxygenation) ஆதரவுடன் ஆபத்தான நிலையில் இருந்தவர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

சித்திக் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், துல்கர் சல்மான் எனப் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சித்திக்கின் ‘ஃபிரண்ட்ஸ்’ படத்தில் நடித்துள்ள சூர்யா, அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன் ‘ஃபிரண்ட்ஸ்’ படத்தில் பணியாற்றியதை உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், ‘என் இதயம் கனமாக இருக்கிறது. சித்திக் சாரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.  ‘ஃபிரண்ட்ஸ்’ படம் பல்வேறு வழிகளில் எனக்கு ஒரு முக்கியமான படம். சித்திக் சார் இயல்பாகவே ஒரு ஊக்கமளிக்கும் மனிதர். படப்பிடிப்பின் போது நடிப்பில் சிறிய முன்னேற்றம் செய்தாலும் நடிகர்களைப் பாராட்டுவார். படப்பிடிப்பைத் தாண்டி எடிட் செய்யும் போதும், எனது நடிப்பு குறித்த தனது அபிப்ராயங்களை அன்புடன் தெரிவிப்பார்.

‘ஃபிரண்ட்ஸ்’படம் பண்ணும்போது அவர் புகழ்பெற்ற மூத்த இயக்குநர். ஆனால், அவர் தனது நட்பு அணுகுமுறையால் படப்பிடிப்பின் போது  அனைவரையும் சமமாக நடத்துவார். படப்பிடிப்பில் அவர் கோபமாகவோ குரலை உயர்த்தியோ நான் பார்த்ததில்லை. அவருடன் பணிபுரிவது என்றென்றும் நான் விரும்பும் அனுபவம். நான் அவரைச் சந்திப்பதற்கு முன்பு என்னிடம் இல்லாத ஒன்றை அவர் எனக்குக் கொடுத்தார். என்னையும் என் திறமையையும் நம்புவதற்கான உள்நம்பிக்கையை அவர் கொடுத்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சித்திக் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துள்ள ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் வசனகர்த்த ஜெயக்குமார் மண்குதிரை, ‘’ராம்ஜிராவ் ஸ்பீக்கிங்’ தொடங்கி மலையாளத்தின் புதிய நகைச்சுவை பாணியை உருவாக்கியவர் சித்திக். லாலுடன் இணைந்து தொடக்கத்தில் வாய்ப்பு தேடிச் சென்றபோது, ‘கோடம்பாக்கம் பாலம் ஏறிப் பழகாத நீங்கள் கதை சொல்ல வந்துவிட்டீர்களா?’ என ஏளனப்படுத்தியவர்கள் பலர்.  பல முன்னணி நடிகர்கள் மறுத்த நிலையில் முகேஷ் போன்ற இரண்டாம் நிலை நாயகனை வைத்து ‘இரண்டாவது ஓணம்’ என்ற வெற்றிப் படத்தை அளித்தார்கள். ஜனங்களின் மனம் அறிந்து வெற்றிகளைத் தந்த கலைஞன் சித்திக்’ என்று பதிவிட்டுள்ளார்.

எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான சுகா, ‘‘கலாபவன்’ கலைக் குழுவில் இயக்குநர் ஃபாஸிலால் கண்டெடுக்கப்பட்டவர். மலையாள சினிமாவின் நகைச்சுவை பாங்கை மாற்றி அமைத்தவர். மலையாளத்திலும் தமிழிலும் ‘ஃபிரெண்ட்ஸ்’ திரைப்படத்தை வெவ்வேறு வடிவங்களில் கொடுத்தவர். பிரியத்துக்குரிய சித்திக் ஏட்டா! உங்கள் திரைப்படங்களைப் பார்த்து நாங்கள் சிரித்துக் கொண்டிருக்கிறோம். போய் வாருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

திரைப்பட இயக்குநர் தாய் பிரபு வெளியிட்டுள்ள பதிவில், “சித்திக், மென்மையான குரல் வளம் மிக்கவர். பாசில் சார் படங்கள் எடிட்டிங் மேற்கு மாம்பலம் எடிட்டர் சேகர் அறையில் தான் நடக்கும். இங்கே தான் எனக்கு சித்திக் அறிமுகம். மேற்கு மாம்பலம் தெருக்களில் அவருடன் நடந்து பேசிய நாட்கள் அதிகம். எனக்கு மலையாள பேச்சு எளிதாக வரும். அதனால் மலையாள சினிமா மீது தனி கவனம். நான் 1990 மலையாள படம் இயக்கிய போது, ஷூட்டிங் ஸ்பாட் வந்து நேரில் வாழ்த்தினார். செல்லமாக ‘பிரபு ஜி’ என்றே அழைப்பார். அவருடன் சேர்ந்து கழிந்த தேனீர் நாட்கள் கண்களில்…’ என்று தெரிவித்துள்ளார்.

சல்யூட் சித்திக்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...