ரிஷி சுனக். இங்கிலாந்தின் அடுத்தப் பிரதமராக எதிர்பார்க்கப்படுபவர். இந்திய வம்சாவளியை சார்ந்தவர் என்பதால் இந்தியாவில் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறார்.
அவர் சார்ந்த கன்சர்வேடிவ் கட்சியில் நடந்த முதல் சுற்று தேர்வில் ரிஷி சுனக் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அவர் பிரதமர் ஆக வேண்டுமென்றால் இன்னும் சில சுற்றுக்களில் வெற்றி பெற வேண்டும்.
தேர்வுச் சுற்றுக்களைப் பற்றியும் சுனக் குறித்தும் அறிந்துக் கொள்வதற்கு முன்பு மற்றொரு முக்கிய தகவலை தெரிந்துக் கொள்வோம்.
நமது புரிதலுக்காக இங்கிலாந்து என்று கூறுகிறோம். ஆனால் இங்கிலாந்தின் பிரதமர் என்பது சரியல்ல. இங்கிலாந்து என்பதற்கு பதில் யுனைட்டட் கிங்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இங்கிலாந்து என்பது யுனைட்டட் கிங்டமில் ஒரு பகுதி.
யுகே என்று நாம் எளிதாய் கூறும் யுனைட்டட் கிங்டமில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், நார்தர்ன் அயர்லாந்து என நான்கு பிரதேசங்கள் இருக்கின்றன. இங்கிலாந்தின் பிரதமர் என்று நாம் குறிப்பிடுவது இந்த நான்கு பிரதேசங்களுக்கான பிரதமர். இந்த நான்கு பிரதேசங்களையும் தனி நாடுகளாகதான் குறிப்பிடுகிறார்கள். அவர்களுக்கென்று தனி நாடாளுமன்றங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் நிர்வகிப்பது யுனைட்டட் கிங்டமின் நாடாளுமன்றன. கிட்டத்தட்ட இந்தியாவின் மாநில அரசு, ஒன்றிய அரசு என்பது போல்.
சரி, பிரிட்டன் என்றும் கூறுகிறார்களே என்ற கேள்வி எழும். ஆமாம், கிரேட் பிரிட்டன் என்பது பெரிய தீவு. அந்தத் தீவில்தான் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து இருக்கின்றன.
இத்தனை குழப்பம் இருப்பதால்தான் இங்கிலாந்து என்று பொதுப் பெயரில் அழைத்து எளிதாக்கியிருக்கிறோம்.
இந்த இங்கிலாந்தில் கடந்த வாரம் ஒரு அரசியல் குழுப்பம் நிகழ்ந்தது. பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகினார். இப்போது காபந்து பிரதமராக இருக்கிறார்.
அவருக்கு அடுத்து பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளில் கன்சர்வேடிவ் கட்சி இருக்கிறது. அதன் ஆட்சிக் காலம் இன்னும் மூன்றாண்டுகள் இருக்கின்றன. அடுத்த தேர்தல் 2025ல்தான்.
கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் எட்டு பேர் இருந்தார்கள். அவர்களில் ரிஷி கனக்கும் சுயெல்லா பிரேவர்மேனும் இந்திய வம்சாவளியை சார்ந்தவர்கள்.
கன்சர்வேடிவ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் தேர்வு பல சுற்றுக்களாக நடைபெறும். போட்டியிட விரும்பும் கட்சிக்காரருக்கு அடிப்படையில் 8 எம்.பி.க்கள் ஆதரவு இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் போட்டியிலேயே கலந்துக் கொள்ள முடியும்.
நேற்று வேட்பாளர் தேர்வுக்கான முதல் சுற்று தேர்தல் நடந்தது. இதில் 88 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார் ரிஷி. அவருக்கு அடுத்து 67 வாக்குகளுடன் பென்னி மருடண்ட் நிற்கிறார். போட்டியிட்ட மற்றொரு இந்திய வம்சாவளி வேட்பாளாரான சுயெல்லா பிரேவர்மேன் 32 வாக்குகள் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளார். 30 வாக்குகளுக்கு குறைவாக பெற்ற இருவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது போன்று பல சுற்றுக்கள் நடந்து இறுதியில் இருவருக்கான போட்டியாக மாறும். அந்த இருவரில் ஒருவரை கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். இப்போது பிரதமர் ரேசில் முந்தி முதலிடத்தில் இருப்பவர் ரிஷி. அவர் பிரதமராவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
யார் இந்த ரிஷி சுனக்?
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
ரிஷி பிறந்தது வளர்ந்தது எல்லாம் இங்கிலாந்தில். அப்பா கென்யாவையும் அம்மா தான்சானியாவையும் சார்ந்த இந்திய வம்சாவளியினர். ரிஷியின் தாத்தாதான் ஒரிஜினல் இந்திய குடிமகன். பஞ்சாப்பிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு குடியேறியவர்.
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்திருக்கிறார் ரிஷி. ஆரம்பத்தில் வங்கியில் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு சொந்தமாக வங்கித் தொழில். இப்படி வளர்ந்த ரிஷிக்கு அரசியல் ஆசையும் வர கன்சர்வேடிவ் கட்சி சார்பில் 2014 பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார். வெற்றி பெறுகிறார். பிறகு நிதித் துறை செயலர், அமைச்சர் என பொறுப்புகளில் உயர்ந்து இன்று பிரதமர் வேட்பாளராக நிற்கிறார். நாளை பிரதமராகவும் பொறுப்பேற்கலாம்.
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதாவை ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சந்தித்தார் ரிஷி. அங்கு காதல் பிறந்தது. கல்யாணத்தில் முடிந்தது. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.பதவிக்கு ரிஷி பொறுப்பேற்கும்போது பகவத் கீதையின் மேல் உறுதி எடுத்துக் கொண்டார்.
ரிஷி சுனக் மீது சர்ச்சைகளும் உண்டு. மனைவியின் சொத்துக்கள் குறித்து தகவல்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டு உண்டு. மனைவி அக்ஷதா இந்திய குடியுரிமை பெற்றவர். இந்திய அரசுக்கு வரி கட்டுபவர். ஆனால் இங்கிலாந்தில் சம்பாதித்தவற்றுக்கு வரி கட்டவில்லை என்ற சர்சை எழுந்தது. சாமானிய மக்கள் மீது வரிகள் போடும் சுனக் தன் மனைவிக்கு வரியை குறைத்துக் காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டை எதிர்க் கட்சிகள் வைத்தன. அதன்பிறகு இங்கிலாந்திலும் வரி கட்ட தொடங்கினார் அக்ஷதா.
பொதுமுடக்க விதிகளை மீறி இரவு விருந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் இவர்கள் மீது உண்டு. இந்த குற்றச்சாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் மீதும் வைக்கப்பட்டது. இதற்காக அபராதமும் கட்டினார்கள்.
இன்றைய நிலையில் ரிஷி-அக்ஷதா தம்பதியின் சொத்து மதிப்பு 73 கோடி பவுண்டுகள். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7000 கோடி.
இத்தனை பணம் படைத்த ரிஷியால் சாமனிய மக்களின் சிரமங்களைப் புரிந்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.