No menu items!

இடஒதுக்கீடு: ஆழம் பார்த்த மத்திய அரசு!

இடஒதுக்கீடு: ஆழம் பார்த்த மத்திய அரசு!

உயர் கல்வி நிறுவனங்களில் நிரப்பப்படாத பட்டியல் சாதி,  பட்டியல் பழங்குடியின, ஓபிசி பிரிவினருக்கான பின்னடைவு பணியிடங்களை நீக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யூஜிசி நேற்று வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த முயற்சியில் இருந்து பின்வாங்கியுள்ளது. என்ன காரணம்?

ஐஐடி, ஐஐஎம் உட்பட உயர்கல்வி நிறுவனங்களில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள   பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை நீக்கம் செய்வதற்கான (De- Reservation) வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை (Draft Guidelines) பல்கலைக்கழக மானியக் குழு நேற்று வெளியிட்டிருந்தது.

‘ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிட நேரடி நியமனங்களில் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முழு பிரதிநிதித்துவம் கிடைப்பது உறுதி செய்ய வேண்டும்’ என மத்திய கல்வி நிலையங்கள் (ஆசிரியர் பணியில் இடஒதுக்கீடு) அவசரச் சட்டம் தெரிவிக்கிறது. அதன்படி, பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் முறையே 15%, 7.5%, 27% என்ற அளவில் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், மத்திய பல்கலைக்கழகங்களில் 4% ஓபிசி பிரிவினர் மட்டுமே பேராசிரியர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, பணியமரத்தப்பட்ட 1,341 பேராசிரியர்களில், வெறும் 60 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினர். அதேபோன்று, எஸ்டி, எஸ்சி பிரிவினர் எண்ணிக்கை 1.4%, 6.8% என்ற அளவில் குறைந்து உள்ளது. அதேபோன்று, ஆசிரியர் இல்லாத இட ஒதுக்கீட்டில் வரும் பணியிடங்களில் பெரும்பாலானவை நிரப்பப் படாமலேயே உள்ளன. இதனால், கடந்தகால பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய  அரசு மேற்கொள்ள வேண்டும் என்று  அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில்தான், நிரப்பப்படாத பட்டியல் சாதி,  பட்டியல் பழங்குடியின, ஓபிசி பிரிவினருக்கான பின்னடைவு பணியிடங்களை நீக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யூஜிசி வெளியிட்டது. யூஜிசியின் அறிவிப்புபடி, குரூப் ‘சி’, ‘டி’ பிரிவு இடஒதுக்கீடு பணியிடங்களை நீக்கம் செய்வதற்கான ஒப்புதலை பல்கலைக்கழக நிர்வாக மன்றம் அளிக்கும். ‘ஏ’, ‘பி’ பிரிவுக்கான ஒப்புதலை மத்தியக் கல்வி அமைச்சகம் அளிக்கும்.

யூஜிசியின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவின் “சப் கா விகாஸ்” (அனைவரின் வளர்ச்சிக்காக) என்பதின் உண்மை முகம் இதுதான். இதுவரை காலைப் பிடித்து இழுத்தவர்கள் இப்போது உச்சந்தலையில் கை வைத்து விட்டார்கள். இந்திய நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டு கொள்கையை கொலை செய்வதற்கான சம்மட்டி அடி இது.

ஏற்கெனவே நாடு முழுக்க பல கல்லூரிகள் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூக, பழங்குடியின மாணவர்களுக்கும் விண்ணப்பதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களை பொதுப்பிரிவினருக்கு தாரைவார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருக்கின்றன. இந்த தவறான போக்கை சரிசெய்ய நாம் கோரிக்கை வைத்தால், பாஜகவோ அந்த தவறையே நிறுவனமயப்படுத்துகிறது. இந்தியாவில் வாழும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூக, பழங்குடியின மாணவர்களுக்கும் விண்ணப்பதாரர்களுக்கும் வஞ்சகம் செய்து பாமர மக்களை அழித்து ஒழிக்கும் பாஜகவின் முயற்சியை சமத்துவம், சமூக நீதியில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘யுஜிசியின் புதிய விதிகள் அமலுக்கு வந்தால் மத்திய உயர்கல்வி நிறுவன வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு விட்டதாகதான் பொருள் கொள்ள முடியும்.

ஏற்கெனவே, மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தகுதியானவர்களை மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்கள் பல்வேறு சதிகளை செய்து வெளியேற்றுகின்றன. இப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் நடைமுறைக்கு வந்தால், அதை பயன்படுத்தி, மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முற்றிலுமாக மறுக்கப்படும். சமூகநீதிக்கு எதிரான பல்கலை. மானியக்குழுவின் விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணிகளை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து, சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவதை கட்டாயமாக்க வேண்டும். ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு தடையாக இருக்கும் கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

‘உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவரச் செய்யப்படும் சதி தான் இது. மோடி அரசுக்கு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகள் மீது அக்கறை இல்லை’ என்று காங்கிரஸ் கட்சியும் சாடியிருந்தது.

இதனிடையே, யுஜிசி தலைவருக்கு எதிராக டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத்தினர் போராட்டத்தையும் அறிவித்து இருந்தனர்.

எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து உயர் கல்வி நிறுவனங்களில் நிரப்பப்படாத பட்டியல் சாதி,  பட்டியல் பழங்குடியின, ஓபிசி பிரிவினருக்கான பின்னடைவு பணியிடங்களை நீக்கம் செய்வதற்கான அறிவிப்பில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு இப்போது வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகும் , எந்த இட ஒதுக்கீடு பதவியும் பாதிக்கப்படாது. 2019 விதிகளின்படியே அனைத்து காலியிடங்களும் நிச்சயம் நிரப்பப்படும்” என்று தெரிவித்துள்ளது.

அதேபோல யுஜிசி தலைவர் எம் ஜெகதேஷ் குமாரும், ‘கடந்த காலங்களிலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் பொதுப் பிரிவினருக்கு மாற்றப்பட்டது இல்லை. இனிமேலும் அப்படி நடக்காது’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஒரு தற்காலிய பின்னடைவே, மீண்டும் வேறு வடிவில் இட ஒதுக்கீட்டை காலி செய்வதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுவார்கள் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, ‘எஸ். எஸ்.டி. ஓபிசி சமூகத்தவர்கள் ஒற்றுமையாக எதிர்க்கமாட்டார்கள் என்கிற மமதையிலேயே தேர்தல் நெருங்கும் இந்த நேரத்திலும் இப்படியான அறிவிப்பை யு.சி.ஜி. மூலம் ஒன்றிய ஆட்சியாளர்கள் செய்ய வைத்துள்ளனர். ஆனால், இப்போது எதிர்ப்பு கிளம்பியதும் யு.ஜி.சி.யின் தன்னிச்சையான அறிவிப்பு போல காட்டி பின்வாங்குகிறார்கள்’ எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...