No menu items!

நிதிஷ் குமார் – பல்டிகளின் நாயகன்!

நிதிஷ் குமார் – பல்டிகளின் நாயகன்!

மீண்டும் அணி மாறியிருக்கிறார் நிதிஷ் குமார். மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறார். ஒன்பதாவது முறையாக மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்திய சரித்திரத்தில் முதல்வர் பதவிக்காக இத்தனை முறை கட்சி மாறியவர் இவராகதான் இருக்கும்.

நிதிஷ் குமாருக்கு கூட்டணி மாறுவது புதிதல்ல. சட்டையை கழற்றி மாற்றுவது போல் கூட்டணிகளை மாற்றுவார்.

பொறியியல் பட்டப் படிப்பு முடித்து அரசு ஊழியராக பணியாற்றிக் கொண்டிருந்த நிதிஷ் குமாருக்கு கல்லூரி காலத்திலிருந்தே அரசியல் ஆசை உண்டு. சோஷலிச கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த நிதிஷ் குமாருக்கு ஆரம்ப கால அரசியல் குரு ராம் மனோகர் லோகியா. 70களின் துவக்கத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் பயணித்திருக்கிறார். கல்லூரி காலங்களில் இப்படி துவங்கிய அவரது அரசியல் பயணம் எஸ்.என்.சின்ஹா, வி.பி.சிங் என்று தொடர்ந்து ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸுடன் சமதா கட்சியில் தொடர்ந்தது. அனைத்தும் காங்கிரசுக்கு எதிர் நிலையிலிருந்து கட்சிகள்.

1977ல் முதல் முறையாக பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். தோற்கிறார்.1980 தேர்தலில் போட்டியிடுகிறார், மீண்டும் தோற்கிறார். 1985 தேர்தலில் அவருக்கு முதல் வெற்றி கிடைக்கிறது. 1989ல் முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். வெல்கிறார். 1991, 96,98,99, 2004 என தொடர்ந்து ஐந்து முறை நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றிப் பெற்ற நிதிஷ் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றியிருக்கிறார்.

2000ஆம் ஆண்டு பீகார் அரசியலில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக முதல் முறையாக பீகார் முதல்வர் பொறுப்பு ஏற்கிறார். ஏழே நாட்களில் ராஜினாமா செய்கிறார். 2004 வரை மத்திய அமைச்சராக பொறுப்பைத் தொடர்கிறார்.

2000ஆம் ஆண்டு 7 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார் 2005 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் வென்று இரண்டாம் முறையாக முதல்வராகிறார். அன்று தொடங்கிய அவரது முதல்வர் வாழ்க்கை 2024 இன்று வரை தொடர்கிறது. இடையே சில சில மாதங்கள் கூட்டணிப் பிரச்சினைகளினால் முதல்வர் பதவியிலிருந்து விலகி இருந்த சம்பவங்களும் உண்டு. 2005, 2010, 2015, 2020 என தொடர்ந்து சட்டப் பேரவைத் தேர்தல்களில் வென்றிருக்கிறது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி. பெரும்பான்மை பெறவில்லை என்றாலும் கூட்டணிக் கணக்குகள் மூலம் முதல்வர் பொறுப்பிலேயே நீடிப்பார் நிதிஷ். உதாரணமாய் 2020 சட்டப் பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வென்றது 45 இடங்களில்தாம். கூட்டணிக் கட்சியான பாஜக வென்றது 77 இடங்கள். ஆனாலும் நிதிஷ்குமார்தான் முதல்வரானார். இதுதான் நிதிஷ்குமாரின் அரசியல் மேஜிக்.

2022 ஆகஸ்ட்டில் பாஜக கூட்டணியைக் கழற்றிவிட்டு தேர்தலில் நேர் எதிராக மோதிய லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் முதல்வர் பொறுப்பேற்கிறார். லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சட்டப் பேரவையில் 79 இடங்கள் வைத்திருக்கிறது. நிதிஷ்குமார் கட்சியைவிட 34 இடங்கள் கூடுதல் ஆனாலும் நிதிஷ்தான் முதல்வர் ஆனார். இரண்டாமிடம்தான் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவுக்கு.

நிதிஷ் குமாரால் இதை சாதிக்க முடிவதற்கு காரணம் அவர் போடும் அரசியல் கணக்குகளும் கூட்டணி மாறுவதற்கு அவர் தயங்காததும்தான் காரணம்.

2013 வரை பாஜகவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த நிதிஷ், பிரதமர் வேட்பாளாராக மோடி அறிவிக்கப்பட்டதும் கூட்டணியிலிருந்து விலகினார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நிதிஷ் வென்றது இரண்டு இடங்கள்தாம். தன்னுடைய செல்வாக்கு குறைவதை அறிந்த நிதிஷ் குமார் 2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் லாலு கட்சியுடனும் காங்கிரசுடனும் கூட்டு வைத்து பெரிய வெற்றி பெறுகிறார். அந்தத் தேர்தலில் நிதிஷ் கட்சி 73 இடங்களையும் லாலு கட்சி 80 இடங்களில் வென்றிருந்த போதிலும் நிதிஷ்தான் முதல்வர் லாலுவின் மகன் தேஜஸ்வி துணை முதல்வர்.

சில வருடங்களில் இந்தக் கூட்டணியில் குழப்பம் வர மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்கிறார். 2020 சட்டப் பேரவைத் தேர்தலை பாஜக கூட்டணியுடன் சந்திக்கிறார். சொந்தக் கட்சி குறைவான இடங்களில் வென்ற போதும் பாஜகவின் உதவியுடன் முதல்வராகிறார்.

இப்போது மீண்டும் சிக்கல். இந்த முறை மீண்டும் கூட்டணி மாறி எதிர் துருவத்திலிருந்தவர்களுடன் கை கோர்த்திருக்கிறார்.

2017ல் ஊழல்வாதிகள் என்று லாலு குடும்பத்தை விமர்த்து அவர்களை கூட்டணியில் கழற்றிவிட்ட நிதிஷ் 2022ல் அதே குடும்பத்துடன் கூட்டணி வைத்ததுபோல் 2022ல் பாஜகவை கடுமையாக விமர்சித்த நிதிஷ் குமார் இன்று அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.

பீகாரில் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நிதிஷ் குமார் – பாஜக கூட்டணி 39 இடங்களில் வென்றது.

2024ல் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது.பாஜகவுக்கும் முக்கியமான தேர்தல். எதிர்க் கட்சிகளுக்கும் முக்கியமான தேர்தல். மத்தியில் ஆட்சியை முடிவு செய்யும் முக்கிய வட மாநிலங்களில் பீகாரும் ஒன்று. பீகாரில் சாதிய அடிப்படையில் கணக்குகள் போடப்பட்டுதான் தேர்தல் நடக்கும். நிதிஷ் குமாருக்கு தலித் மக்கள் மற்றும் மிகவும் பின் தங்கிய சமூகத்தினரின் வாக்குகள் உண்டு. லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கும், காங்கிரசுக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகள் அதிகம். இந்தக் கணக்குகளின் அடிப்படையில்தான் பீகார் அரசியல் நடந்துக் கொண்டிருக்கிறது.

2022ல் பாஜக கூட்டணியிலிருந்து வெளியில் வந்து லாலு கட்சியுடன் நிதிஷ் குமார் கூட்டணி அமைத்தபோது, ‘ 2024 தேர்தலில் நீங்கதான் எதிர்க் கட்சிக் கூட்டணி பிரதமர் வேட்பாளர்னு சொல்லப்படுதே?’ என்ற கேள்வி நிதிஷிடம் வைக்கப்பட்டது. அதற்கு, “நான் பிரதமர் வேட்பாளர் இல்லை. இப்போது நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி 2014ல் வந்தவர் 2024ல் ஜெயிப்பாரா? என்பதுதான்” என்று நிதிஷ்குமார் பதிலளித்தார். அவர் குறிப்பிட்டது பிரதமர் மோடியை.

இரண்டு வருட இடைவெளியில் ஜெயிப்பாரா என்ற சந்தேகப்பட்ட தலைவருடனே இணைந்து அவருக்காக வாக்குகள் கேட்கப் போகிறார் என்பதுதான் பீஹார் அரசியலின் வினோதம்.

பாரதிய ஜனதாவின் நீண்ட கால அரசியல் வியூகம் டினா ஃபாக்டர் (There is no alternative – TINA)), அதாவது மாற்று இல்லை என்பதைக் காட்டுவது. எதிரணியில் மோடிக்கு மாற்றாக யார் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு எதிர்க் கட்சிகளால் இதுவரை ஒருங்கிணைந்து ஒருவரை அடையாளம் காட்ட முடியாமல் இருப்பதுதான் பாஜகவின் வெற்றி வியூகம். போட்டியாளராக யாரையும் பாஜக வளரவிடுவதில்லை. நாடு முழுவதும் அறிந்த காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியை பப்பு என்ற பிம்பத்துக்கு அடைத்து அவரை முடக்கி வைத்திருக்கிறது. மமதா பானர்ஜி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு, விசாரணைகள், கைதுகள் என பயமுறுத்தி வைத்திருக்கிறது. இந்த இருவரைத் தாண்டி மாற்று முகமாக இருந்த நிதிஷ்குமாரை இப்போது தன் அணிக்குள் மீண்டும் கொண்டு வந்திருக்கிறது.

பீகாரைப் பொறுத்தவரை பாஜகவுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. எல்லாமே லாபம்தான்.

நிதிஷ் குமார் – பாஜக கூட்டணி வெகு விரைவில் உடைந்துவிடும் என்று ஆருடம் கூறியிருக்கிறார் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர்.

” ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது. 2025-ல் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறது. அப்படியென்றால் இப்போது அமைந்துள்ள ஜேடியு – பாஜக கூட்டணி ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான ஆயுளே கொண்டிருக்கும். இந்தக் கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தல் வரும்வரை கூட தாங்காது என்பதை நான் உங்களுக்கு எழுதித் தருகிறேன். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த 6-வது மாதமே கூட்டணி உடையும். ஏற்கெனவே கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தல் வரை அப்போதைய காங்கிரஸ், ஆர்ஜேடி, ஜேடியு மகா கூட்டணி தாங்காது என்று கூறியிருந்தேன். அது நடந்தது. அதேபோல் இப்போதும் சொல்கிறேன் 2025 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரை பாஜக – ஜேடியு கூட்டணி தாக்குப்பிடிக்காது” என்கிறார் பிரசாந்த் கிஷோர்.

கூச்சமோ கொள்கையோ இல்லாமல் இப்படி மாறி மாறி கூட்டணி அமைத்து முதல்வராகும் நிதிஷ் குமார் எப்படி தேர்தல்களில் வெல்கிறார்? மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள்? என்ற கேள்விகள் எழும்.

அதற்கு எளிமையான பதில். பீகாரின் அரசியல் அப்படி, பீகாரின் மக்கள் அப்படி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...