No menu items!

செஞ்சுரி மனிதன் புஜாரா!

செஞ்சுரி மனிதன் புஜாரா!

இது அதிரடி பேட்ஸ்மேன்களின் காலம். கோலி, சூர்யகுமார் யாதவ், சுப்மான் கில் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களைத்தான் இப்போது கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் அந்தக் கொண்டாட்டங்களின் நடுவில், டெஸ்ட் போட்டிகளில் சத்தமில்லாமல் சாதித்து வருகிறார் சேதேஷ்வர் புஜாரா. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெல்லியில் நாளை தொடங்கவுள்ள டெஸ்ட் போட்டி சேதேஸ்வர் புஜாரா ஆடப்போகும் 100-வது டெஸ்ட் போட்டி. இதற்காக பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

இதுவரை ஆடியுள்ள 99 டெஸ்ட் போட்டிகளில் 7,021 ரன்களைக் குவித்திருக்கிறார் புஜாரா. இதில் 19 சதங்களும், 34 அரை சதங்களும் அடங்கும். அவரது சராசரி ரன்கள் 44.15. இதில் பல போட்டிகளில் இந்தியா வெற்றி பெறவும், தோவியின் பிடியில் இருந்து மீளவும் அவரது பேட்டிங் இந்தியாவுக்கு உதவி இருக்கிறது.

சேதேஷ்வர் புஜராவின் தந்தை அரவிந்த் புஜாராவும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். சவுராஷ்டிரா அணிக்காக 6 போட்டிகளில் ஆடி 172 ரன்களை எடுத்துள்ள அவரால், அதற்கு மேல் கிரிக்கெட்டில் சிறகடித்து பறக்க முடியவில்லை. கிரிக்கெட்டுக்கும் தனக்குமான தொடர்பு அவ்வளவுதான் என்று அரவிந்த் புஜாரா நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் மழலை மாறாத தனது 4 வயது மகன் கிரிக்கெட் விளையாடியதைப் பார்க்க நேர்ந்தது. இரண்டு அடிகள் கொண்ட பிளாஸ்டிக் பேட்டை அவன் பிடித்திருந்த லாவகமும், பந்துகளை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த வனது பார்வையும், அரவிந்த் புஜராவின் மனதில் நம்பிக்கையை விதைத்தது.

தன்னால் முடியாததை மகன் சாதிப்பான் என்று நம்பிய அரவிந்த் புஜார, அன்றிலிருந்து மகனுக்கு பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். அருகில் உள்ள ரயில்வே மைதானத்துக்கு சேதேஷ்வர் புஜரவை அழைத்துச் செல்லும் அவர், தினமும் காலையில் 60 பந்துகள், மாலையில் 60 பந்துகள் வீதம் அவருக்கு வீசி பேட்டிங் பயிற்சியைத் தொடங்கினார்.

இப்படியே சில ஆண்டுகள் சென்றுள்ளது. புஜாராவுக்கு 11 வயது நிறைவடைந்த பிறகு, அவருக்கு உரிய பயிற்சியை அளிக்க விரும்பி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான கார்சன் காவ்ரியிடம் அழைத்துச் சென்றுள்ளார். புஜாராவின் பேட்டிங் ஸ்டைலும், பந்துகளுக்கு உரிய மரியாதை கொடுக்கும் ஆற்றலும் காவ்ரிக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரது பரிந்துரையின் பேரில் மும்பை மாடுங்கா பகுதியில் ரவி தாக்கர் என்பவர் நடத்திவரும் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதைப்பற்றி குறிப்பிடும் ரவி தாக்கர், “11 வயது சிறுவனாக புஜாரவை என்னிடம் அழைத்து வந்தார்கள். அடுத்த 2 நாட்கள் என்னிடம் உள்ள திறமையான் பந்து வீச்சாளர்களை அவனுக்கு பந்து வீசச் செய்தேன். அப்போது வேகப்பந்து மற்றும் சுழற்பந்துகளை புஜாரா லாவகமாக கையாண்டது, எனக்கு அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவருக்கு கற்றுக்கொடுக்க ஏதும் இல்லை என்றபோதிலும் என்னால் முடிந்தவரை அவரது பேட்டிங்கை மெருகூட்டினேன்” என்கிறார்.

ரவி தாக்கரிடம் பயிற்சி பெறத் தொடங்கியதில் இருந்து புஜாராவின் கிரிக்கெட் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டது. 14 மற்றும் வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் ஆடி தேர்வாளர்களைக் கவர்ந்த அவர், 2005-ம் ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக களம் இறங்கினார். இதைத்தொடர்ந்து 2006-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் புஜாரா 6 இன்னிங்ஸ்களில் 349 ரன்களைக் குவித்தார். ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்களிலும் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வுக் குழுவினரின் கவனத்தைக் கவர்ந்தார்.

2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரக இந்தியா ஆடிய டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமனார் சேதேஷ்வர் புஜரா. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இவர் 4 ரன்களை மட்டுமே எடுத்தபோதிலும், 2-வது இன்னிங்ஸில் 72 ரன்களைச் சேர்த்தார். அவரது ஆட்ட முறை, ராகுல் திராவிட்டின் ஆட்ட முறையைப் போன்றே இருந்ததால், திராவிஉட் ஓய்வுபெற்ற பிறகு, டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் ஒரு புறம் நங்கூரம் பாய்ச்சி நின்று விக்கெட் விழாமல் தடுக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.

தனக்கு எது சரிப்பட்டு வரும், எது சரிப்பட்டு வரது என்பதை நன்றாக உணர்ந்துகொண்ட வீரர் புஜாரா. அதிரடியான ஆட்டம் தனக்கு வராது என்பதாலேயே ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை. அதற்கெல்லம் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் வெளுத்து வாங்குகிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்துவரும் சாதனைகளைப் பற்றிக் கேட்டால், “சாதனைகளை என் கடும் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். அவை என்னை மேலும் சிறப்பாக ஆடத் தூண்டுகின்றன. கிளப்புக்காக ஆடினாலும், என் மாநிலத்துக்காக ஆடினாலும், இந்தியாவுக்காக ஆடினாலும், என் மனதில் இருக்கும் லட்சியம் ஒன்றே ஒன்றுதான். எதிரணி வீரர்களுக்கு என் விக்கெட்டை எளிதாக விட்டுக்கொடுக்க கூடாது. அதற்காக அவர்களை கடுமையாக போராட வைக்க வேண்டும் என்பதே என் லட்சியம்” என்கிறார் புஜாரா. வரவிருக்கும் தொடர்களிலும் இந்த போராட்ட குணத்தை புஜாரா வெளிப்படுத்தட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...