No menu items!

மனைவியால் பிரச்சினை… தற்கொலை வரை சென்ற முகமது ஷமி!

மனைவியால் பிரச்சினை… தற்கொலை வரை சென்ற முகமது ஷமி!

இந்த உலகக் கோப்பையில் துப்பாக்கியில் இருந்து சீறிப்பாயும் புல்லட்டாக இருக்கிறார் முகமது ஷமி. முதல் 4 போட்டிகளில் வெளியே உட்கார வைக்கப்பட்ட நிலையில், அடுத்த 3 போட்டிகளில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 14 விக்கெட்களை அள்ளியிருக்கிறார். இதன்மூலம் உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீர்ர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

முகமது ஷமியை ஒரு வெற்றியாளராகவும், பேட்ஸ்மேன்களை பயமுறுத்தும் அசுர வேகப் பந்துவீச்சாளராகவும்தான் நமக்கு தெரியும். ஆனால் அவர் சந்தித்த சோதனைகள் தெரியாது. எண்ணற்ற துன்பங்களால் பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று யோசிக்கும் அளவுக்கு விரக்தியின் எல்லையைத் தொட்டவர் முகமது ஷமி.

உத்தர பிரதேசத்தில் உள்ள மொரதாபாத்தில் பிறந்த ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கை மேற்கு வங்கத்தில்தான் தொடங்கியது. 2010-ம் ஆண்டு மேற்கு வங்க அணிக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடத் தொடங்கிய முகமது ஷமி, கிரிக்கெட்டில் பலரது கவனத்தையும் ஈர்த்தது ஐபிஎல் போட்டிகளில்தான். 2011-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்ந்த முகமது ஷமி, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமின் மேற்பார்வையில் பயிற்சி பெற்று கூர்தீட்டப்பட்டவர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிக்கொண்டு இருந்த சமயத்தில் அந்த அணியின் சீர் லீடராக இருந்த ஹசின் ஜஹானை சந்தித்தார் முகமது ஷமி. ஐபிஎல் போட்டிகளின்போது அடிக்கடி சந்தித்துக்கொண்ட அவர்கள், காலப்போக்கில் காதலர்களாக மாறியிருக்கிறார்கள். 2014-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு அயிரா ஷமி என்ற மகள் பிறந்தார். ஷமியும் இந்திய அணியில் நுழைந்து, இந்தியாவின் முக்கியமான பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவாகத் தொடங்கினார்.

எல்லாம் சரியாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் 2018-ம் ஆண்டில் ஷமியின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. கருத்து வேறுபாட்டால் ஷமியைப் பிரிந்த அவரது மனைவி ஹசின் ஜஹான், திடீரென்று ஒருநாள் செய்தியாளர்களைச் சந்தித்து அவர்மீது அடுக்கடுக்கடுக்காக புகார்களைத் தொடுத்தார். முகமது ஷமி தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக புகார் கூறிய ஹசின், ஷமி மீது பாலியல் புகார்களையும் தெரிவித்தார். அத்துடன் ஷமி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகவும், அதற்காக பாகிஸ்தானிய பெண் ஒருவரிடம் இருந்து பணம் வாங்கியதாகவும் அவர் புகார் கூறினார்.

ஹசினின் புகார்களை மறுத்த ஷமி, அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், அதை மறைத்து தன்னை அவர் திருமணம் செய்துகொண்டதாகவும் புகார் தெரிவித்தார். ஆனால் ஷமியின் குரலைவிட அவரது மனைவியின் புகார்களுக்கு பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்க, உடைந்து போனார் முகமது ஷமி. அதேநேரத்தில் மனைவியின் மேட்ச் பிக்சிங் புகாரைத் தொடர்ந்து அவரது காண்டிராக்டைக்கூட பிசிசிஐ நிறுத்தி வைத்த்து. இது ஷமியின் கிரிக்கெட் பயணத்துக்கு தடைக்கல்லாய் அமைந்தது.

ஒரு பக்கம் மனைவியின் குற்றச்சாட்டுகள், மறுபக்கம் கிரிக்கெட் காண்டிராக்ட் நிறுத்தம் என்று தொடர்ந்து பிரச்சினைகள் வர, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் ஷமி. இதனால் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுகூட தோன்றியதாக ஒரு பேட்டியில் முகமது ஷமி சொல்லியிருக்கிறார். இந்த சூழலில் 2019-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி, மிக விரைவில் 100 விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க, தேர்வாளர்களின் குட் புக்ஸில் சேர்ந்தார். அந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரிலும் விக்கெட்களை அள்ள, மீண்டும் இந்தியாவின் முக்கிய பந்துவீச்சாளராக உருவெடுத்தார்.

தன் பழைய பிரச்சினைகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, பீனிக்ஸ் பறவைபோல் இந்த உலகக் கோப்பையில் புது மனிதராக வலம் வருகிறார் முகமது ஷமி. தைரியம் என்ற ஷமியின் யார்க்கர் பந்துவீச்சின் முன்னால், அவரது பிரச்சினைகள் க்ளீன் போல்டாகி கிடக்கின்றன. இதே வேகத்தை அவர் தொடர்வார் என்று எதிர்பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...