சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி, அதர்வா நடிக்கும் படத்துக்கு ‘பராசக்தி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி வசனத்தில், கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், ஏவி.எம் தயாரிப்பில் 1952ல் வெளி வந்த படம் பராசக்தி. தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்த படமும் கூட. அதனால், அந்த தலைப்பை சிவகார்த்திகேயன் டீம் பயன்படுத்தக்கூடாது. அது பல தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும். வருங்காலத்தில் பராசக்தி என்ற நெட்டில் தேடினால் குழப்பங்கள் வரும். முந்தைய சாதனைகள் மறைக்கப்படும். எனவே, பராசக்தி பெயரை பயன்படுத்தக்கூடாது என்று நடிகர் திலகர் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதை படக்குழு ஏற்கவில்லை
நேற்று மாலை பராசக்தி என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பராசக்தி என்ற தலைப்பை நான்தான் முறைப்படி பதிவு செய்து வைத்துள்ளேன். அந்த தலைப்புக்கு சொந்தக்காரன் நான்தான் என்று இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி கொடி பிடித்துள்ளார். தனது அடுத்த படத்தின் தலைப்பு ‘சக்தித்திருமகன்’. அதே படத்தின் தெலுங்கு தலைப்பு பராசக்தி என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த படத்தை அருவி அருண்குமார் இயக்குகிறார்
இதற்கிடையே, சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த பட தலைப்பை முறைப்படி இவர்களை பதிவு செய்து வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளது. இதற்கு ஒரு படி மேலேபோன ஏவி.எம் நிறுவனம் ‘‘சிவகார்த்திகேயன் டீம் பராசக்தி படத்தலைப்பை பயன்படுத்துவது மகிழ்ச்சி. 73 ஆண்டுகளுக்குமுன்பு வந்த அந்த தலைப்பை வழங்குவதில் பெருமை என கூறியுள்ளது. ஆக, இந்த போட்டியில் இருந்து விலகிய விஜய்ஆண்டனி, தமிழில் தன் படத்துக்கு சக்தித்திருமகன் என்று தலைப்பை மாற்றியதாக கேள்வி. டான் நிறுவனத்துடன் இணைந்து பராசக்தி படத்தை, ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.