No menu items!

வடக்கு வாசல் – ராகுலுடன் கைகோர்ப்பாரா வருண் காந்தி?

வடக்கு வாசல் – ராகுலுடன் கைகோர்ப்பாரா வருண் காந்தி?

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள போதுத் தேர்தலில் ராகுல் காந்தியுடன் வருண் காந்தி கைகோர்ப்பாரா என்பதுதான் டெல்லி அரசியல் வட்டாரத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. தற்போது பாஜகவில் இருந்தாலும் கட்சிக்கு எதிரான நிலைப்பாடுகளை சமீப காலமாக அவர் எடுத்து வருவதே இதற்கு காரணம்.

விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து பேசியது, லக்கிம்பூர் கலவரத்தைக் கண்டித்தது போன்ற காரணங்களால் கடந்த 2021-ம் ஆண்டில் பாஜகவின் தேசிய செயற்குழுவில் இருந்து வருண் காந்தி நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அடுத்த பொதுத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் அவர் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. அவர்களைப் போலவே சமஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் வருணுக்கு நெருக்கமானவர் என்பதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் கூட்டணியின் உதவியுடன் உத்தரப் பிரதேசத்தில் வருண் காந்தி போட்டியிடுவார் என்று அடித்துச் சொல்கிறார்கள் வட இந்திய பத்திரிகையாளர்கள்.

ராகுலின் நடை பயணத்தின்போது இந்தக் கேள்வி அவரிடம் வைக்கப்பட்டது. அப்போது ராகுல், ‘வருணை நான் அன்புடன் கட்டியணைப்பேன். ஆனால் அவர் சார்ந்திருக்கும் சித்தாந்தத்தை ஒருநாளும் என்னால் அணைத்துக் கொள்ள முடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

பாஜகவின் தூக்கத்தை கெடுக்கும் திரிபுரா மோதா

திரிபுரா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸ் இடதுசாரி கட்சிகள் கூட்டணிக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த இரு அணிகளுக்கும் இடையே புதிதாக ’திரிபுரா மோதா’ என்ற கட்சி களத்தில் குதித்துள்ளது. திரிபுராவில் அரச குடும்பத்தின் வாரிசான பிரத்யோத் மாணிக்ய தேவ் வர்மாதான் இந்த கட்சியின் தலைவராக இருக்கிறார். முன்னாள் பத்திரிகை ஆசிரியருமான இவர், மக்களின் தேவைகளை உணர்ந்து இவர் வாக்குறுதிகளை அளிப்பதால் அவரது செல்வாக்கு அதிகமாகி வருகிறது.

குறிப்பாக திரிபுராவில் அதிகமாக உள்ள திப்ரா இன மக்களின் வாக்குகளைப் பெற, தான் ஆட்சிக்கு வந்தால் திப்ரா இன மக்களுக்காக ’கிரேட்டர் திப்ராலேண்ட்’ என்ற தனி மாநிலத்தை உருவாக்குவேன் என்று கூறி இவர் பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கு அந்த இன மக்களிடையே ஆதரவு பெருகி வருவதால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அச்சத்தில் இருக்கின்றன. கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த சில கட்சிகள் இந்த தேர்தலில் திரிபுரா மோதா கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதும் அக்கட்சி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

உமா பாரதியின் புதிய போராட்டம்

மத்திய பிரதேசத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக புதிய போராட்டத்தைத் தொடங்கியுள்ளார் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான உமா பாரதி. மதுக்கடைகளின் வாசலில் பசுமாடுகளைப் பிடித்து கட்டுவது அவரது போராட்ட யுக்தியாக இருக்கிறது.

மதுக்கடைகளின் வாசலில் பசுமாடுகளை பிடித்துக் கட்டும் உமா பாரதியும் அவரது ஆதரவாளர்களும், ‘மதுவுக்கு பதிலாக பாலைக் குடியுங்கள்’ என்று கடைக்கு வரும் குடிமகன்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த போராட்டமாவது பரவாயில்லை. சில நாட்களுக்கு முன் மதுக்கடைகள் மீது சாணியை வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் உமா பாரதி.

ஒரு பக்கம் மாநிலத்துக்கு வருவாயைத் தரும் மதுக்கடைகள்… மற்றொரு பக்கம் மக்கள் ஆதரவைப் பெற்ற உமா பாரதியின் போராட்டம். இதில் எந்தப் பக்கம் சாய்வது என்று புரியாமல் குழம்பிக் கிடக்கிறார் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...