No menu items!

பெட்ரோல், டீசல் கிடையாது – முடங்கிய இலங்கை

பெட்ரோல், டீசல் கிடையாது – முடங்கிய இலங்கை

இலங்கை நெருக்கடி அதி உச்ச நிலையை அடைந்துள்ளது. இலங்கையில் தனிநபர்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை தடை செய்யப்பட்டிருக்கிறது, அத்தியாவசிய சேவைகளுக்கு அரசு மட்டுமே எரிபொருளை பயன்படுத்த முடியும். இலங்கை முழுவதும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலைமை உருவாகியுள்ளது. இனி என்ன நடக்கும்?  இலங்கையில் வசிக்கும் ஈழக் கவிஞர் கருணாகரனுடன் பேசினோம்.

‘‘எரிபொருள் இனிக் கிடைக்காது. அத்தியாவசிய தேவைகள் – சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என்று சொல்கிறது அரசாங்கம். இதனால், பாடசாலைகள் மூடப்படுகின்றன. வெளியிடப் போக்குவரத்து இல்லை. நாடு கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு முன்னர் பெட்ரோல், டீசல், கேஸ் எல்லாவற்றையும் பெறுவது மிகுந்த சிரமமாகவே இருந்தது. பெட்ரோல் பங்குகளில் கிலோமீட்டர் கணக்கில் வரிசைகள் நீண்டிருந்தன. வரிசை நீள நீள காத்திருப்பின் நேரம் கூடும். ஆண்கள், பெண்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள், அரச உத்தியோகஸ்தர்கள், முதியோர் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் இரவு பகலாக மக்கள் காத்துக்கிடந்தார்கள். இப்படி வரிசையில் காத்திருந்தவர்களில் ஏழு எட்டுப் பேர் மரணமடைந்திருக்கின்றனர்.

நாட்கள் கணக்கில் காத்திருந்தாலும் எரிபொருள் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. கிடைத்தாலும் போதிய அளவுக்குப் பெற முடிந்ததில்லை. யானைப் பசிக்குச் சோளப்பொரி என்பதைப்போல மிகக் குறைந்தளவு எரிபொருளே கிடைத்து வந்தது. மண்ணெண்ணெய் கிடையவே கிடையாது.

இந்த காத்திருப்பு மக்களிடம் கோபத்தையும் எரிச்சலையும் உண்டாக்கி இதனால் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களை சுற்றியும் சண்டையும் அடிதடி பிரச்சினையுமாகவே இருந்தது. அதைக் கட்டுப்படுத்த ராணுவத்தையும் போலீஸையும் அரசாங்கம் நிறுத்தியிருந்தது. ஆனால், அவர்களை பொருட்படுத்தாமல் மக்கள் சண்டையிட்டுக் கொண்டனர். மூன்று  லிட்டர் பெட்ரோலுக்காக மானத்தை, கௌரவத்தை, மதிப்பை இழக்க வேண்டிய நிலை. யாரையும் யாரும் மதிப்பதில்லை. எவருடைய நிலைமையையும் எவரும் பொருட்படுத்துவதில்லை.

இப்போது அதுவும் இல்லை என்று அறிவித்துவிட்டார்கள்.

எரிபொருள் இல்லை என்றால் ஏறக்குறைய சமூக இயக்கமே இல்லை என்றாகி விடும். போக்குவரத்து, உணவு உற்பத்தி தொடக்கம் அனைத்து உற்பத்தித் துறைகளும் சேவைத் துறைகளும் படுத்துவிடும். இப்பொழுதே ஏறக்குறைய பாதி அளவுக்கு பல துறைகள் படுத்துவிட்டன.

அடுத்து வரும் நாட்களை, மாதங்களை எப்படிக் கடப்பது என்று தெரியாமல் மக்கள் எல்லோரும் திகைத்துப் போயிருக்கிறார்கள்.

இனி மரக்கறியை எப்படி உற்பத்தி செய்வது? அதற்கான மாற்று வழிகள் என்ன? இதனால், அடுத்த கட்டத்தில் உணவு கிடைக்காது. இப்போதே பசியும் பஞ்சமும் பட்டினியும் தலைவிரிக்கத் தொடங்கியுள்ளன. பட்டினிச் சாவுகளும் பசியினால் தற்கொலை முயற்சிகளும் நிகழ்கின்றன என்று செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.

மருந்து தட்டுப்பாடும் தீவிர பிரச்சினையாக உள்ளது. மருந்துகள் இல்லை என்று கையை விரிக்கும் நிலையால் உடல்நல பாதிப்புக்குள்ளானவர்கள் பாடுகள் சொல்ல வேண்டியதில்லை. மருந்தில்லாமல், உரிய சிகிச்சையில்லாமல் பலரும் அவதிப்படுகிறார்கள். அனஸ்தீசியா மருந்து இல்லை என்று அவசர தேவையைத் தவிர ஏனைய சத்திர சிகிச்சைகள் எல்லாம் தள்ளிப் போடப்படுகின்றன. 

மக்களின் இந்த பாடுகளுக்கும் நமக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்ற மாதிரியே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உள்ளனர்.  ஒவ்வொரு தேவைக்காகவும் கால் கடுக்க அநாதைகளைப்போல தெருவிலே சனங்கள் நிற்பதைப் பற்றிய கவலையோ கரிசனையோ எவருக்குமே இல்லை. நாடு திவாலாகினாலும் தலைவர்களோ பாராளுமன்ற அங்கத்தவர்களோ எதையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை. அமைச்சர்களின் பஜீரோ ஜீப்கள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.

இலங்கை அரசியற் பாரம்பரியமே இப்படித்தான் உள்ளது. எந்த நெருக்கடியைத் தணிப்பதற்கும் – தீர்ப்பதற்கும் ஏற்ற வகையில் தேசிய ஒருமைப்பாட்டை எட்டுவதைப் பற்றி எவரும் சிந்திப்பதே இல்லை. பதிலாக எரிகின்ற வீட்டில் பிடுங்குவது  மிச்சம், பிணத்திலே கழற்றுவது லாபம் என்றே ஒவ்வொரு தரப்பும் சிந்திப்பதுண்டு. இப்பொழுதும் இதுவே நடக்கிறது.

இனப்பிரச்சினை தொடக்கம் எந்தப் பிரச்சினைக்கும் இலங்கையில் தீர்வு காணப்படுவதில்லை. இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் எந்தத் தீர்வும் வரப்போவதில்லை. அரசியல்வாதிகளோ அரசியற் கட்சிகளோ இதற்கான சிறிய அளவிலான தகுதியையும்  கொண்டிருக்கவில்லை.

அதை விட மோசமான நிலை, இலங்கையின் இன்றைய அறிவுச் சூழல். எந்த நெருக்குடிக்குள்ளும் தங்களை எப்படித் தக்க வைத்துக் கொள்ளலாம். அதற்குள் தங்கள் தேவைகளை எப்படித் தந்திரமாக நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று சிந்திப்பவர்களே அதிகமாக உள்ளார்கள்.

இதனால், நாடு எந்த வகையிலும் மீட்பர்களும் வழிப்படுத்துநர்களும் இல்லாமல் பின்னடைந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிமிசமும் மேலும் மேலும் நெருக்கடிக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலை, நாட்டை முற்று முழுதான வன்முறைக்குள்தான் தள்ளும் என்ற அச்சம் அனைவரிடமும் உள்ளது.  விரைவில் மக்களின் கோபத்துக்கு அரசாங்கம், அரசியற் தலைமைகள், அதிகாரிகள் இலக்காகி வெளியே இறங்க முடியாத – நடமாட முடியாத நிலைமை ஏற்படும். மக்கள் ஒரு எல்லைக்குமேல் யாரையும் எதையும்  பொருட்படுத்த மாட்டார்கள். சட்டமும் படைகளும் விதிகளும் தகர்ந்து போகும் கணம் அது” என்கிறார் கருணாகரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...