ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களுக்கு இணையாக ரசிகர்களை கவர்ந்து இழுப்பவர் நீத்தா அம்பானி. மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரும், முகேஷ் அம்பானியின் மனைவியுமான இவர், ஒவ்வொரு போட்டிக்கும் விதவிதமான கெட் அப் மற்றும் இளமையான மேக்கப்பில் வந்து அசத்தி வருகிறார். இப்படி ஒவ்வொரு போட்டிக்கும் நீத்தா அம்பானி அணிந்துவரும் உடைகள் மற்றும் அவரது மேக்கப், பெண்கள் மத்தியில் அவருக்கு ரசிகைகளை பெற்றுத் தந்திருக்கிறது.
பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் மத்தியிலும் ரசிகர்களைப் பெற்றிருக்கிறார் நீத்தா அம்பானி. “இவங்களைப் பார்த்தா 59 வயசான பொம்பளை மாதிரியா இருக்கு? இன்னும் சின்னப் பொண்ணு மாதிரி சிக்குன்னு இருக்காங்க பாரு’ என்று கமெண்ட் அடிக்காத ஆண்கள் குறைவு.
இப்படி ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இரு தரப்பிலும் ரசிகர்களைப் பெற்ற நீத்தா அம்பானியின் அழகின் ரகசியம் இப்போது வெளியாகியிருக்கிறது. இந்த அழகு தோற்றத்துக்காக மட்டும் நாளொன்றுக்கு 1 லட்சம் ரூபாயை செலவழிக்கிறாராம் நீத்தா அம்பானி. இப்படி லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டு அவருக்கு மேக்கப் போடும் நபரின் பெயர் மிக்கி காண்டிராக்டர். மும்பையின் நம்பர் ஒன் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோவில் உள்ள ஒரு சலூனில் சாதாரண ஹேர்டிரஸ்ஸராக இருந்தவர்தான் மிக்கி காண்டிராக்டர். ஒருநாள் அங்கே சென்ற முன்னாள் பாலிவுட் நடிகை ஹெலனுக்கு அவர் ஹேர்டிரஸ்ஸிங் செய்துள்ளார். அது அவருக்கு பிடித்துப் போக, ‘என்னுடன் இந்தியாவுக்கு வருகிறாயா?’ என்று கேட்டுள்ளார் ஹெலன். மறுபேச்சு சொல்லாமல் மிக்கியும் மும்பை கிளம்பி வந்துள்ளார்.
ஹெலனின் சிபாரிசில் முதலில் நடிகை கஜோலுக்கு மேக்கப் போட, அது பாலிவுட்டில் பிரபலமாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஹம் ஆப்கே ஹே கோன், மை நேம் ஈஸ் கான், இங்கிலீஷ் மீடியம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இவர் மேக்கப் மேனாக பணியாற்றியுள்ளார். இதெல்லாம் நீத்தா அம்பானியின் பார்வை அவர் மீது படும் வரைதான். நீத்தாவின் பார்வை அவர் மீது பட்டதும், ‘ஒரு நிகழ்ச்சிக்கு மேக்கப் போட லட்ச ரூபாய் சம்பளம்’ என்று பேசி முடித்து அவரை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டார்.
அன்றிலிருந்து தினமும் முதலில் நீத்தா அம்பானிக்கு மேக்கப் போட்ட பிறகுதான் மற்ற வேலைகளைப் பார்க்கிறார் மிக்கி. நீத்தா அம்பானி மட்டுமல்ல அவரது மகள் இஷா அம்பானி, மருமகள் ஷ்லோகா அம்பானி ஆகியோருக்கும் இவர்தான் மேக்கப்மேன்.