மதுரை ரயில் நிலையத்தில் இன்று நடந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாக பலர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போக, ரயில் பயணங்கள் முன்பைப்போல் பாதுகாப்பானதுதானா என்ற சந்தேகம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.
ஆன்மிக பயணமாக வந்த வட நாட்டினர்
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுமார் 90 பேர் கடந்த 17-ம் தேதி ஆன்மிகப் பயணமாக தமிழகத்துக்கு வந்துள்ளனர். ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களுக்கு சென்ற அவர்கள், கடைசியாக வெள்ளிக்கிழமை நாகர்கோவிலில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர். சனிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு புணலூரில் இருந்து வந்த ரயில் மூலம் அவர்கள் மதுரைக்கு வந்துள்ளனர்.
அவர்கள் பயணம் செய்த 2 பெட்டிகளும் தனியாகப் பிரிக்கப்பட்டு மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் மதுரை போடி லைன் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கனெக்டிங் ரயில் மூலமாக நாளை அவர்கள் சென்னைக்கு செல்லவிருந்தனர்.
திடீர் தீ விபத்து
இந்நிலையில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் அவர்கள் இருந்த ரயில் பெட்டிகளில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் வந்து அணைப்பதற்குள், ரயில் பெட்டி முழுவதும் மளமளவென்று தீ பரவியது.
ரயில் பெட்டிகளில் இருந்த சுமார் 90 பயணிகளில் பெரும்பாலானவர்கள் உடனடியாக ரயில் பெட்டியில் இருந்து குதித்து தப்பினர். ஆனால் சிலர் ரயில் பெட்டிக்குள் சிக்கிக்கொண்டனர். தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்து, ரயில் தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 9 பேர் மரணம் அடைந்தனர். பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிபத்து ஏற்பட்டது எப்படி?
ரெயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலர் காலையில் காபி குடிப்பதற்காக காஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமைக்க முயன்றுள்ளனர். அப்போது திடீரென சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரியத் தொடங்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது.
தீ விபத்து நடந்த ரயில் பெட்டியில் 3 காஸ் சிலிண்டர்கள் வைத்திருந்ததால் தீ மளமளவென பரவியுள்ளது. ரயில் பெட்டியை பூட்டி கொண்டு சமைத்ததால் பயணிகள் வெளியேற முடியாமல் தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
கழிவறையில் சமையல் பாத்திரங்கள்
தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல தடை உள்ள நிலையில் தடையை மீறி சிலிண்டரை ரயிலில் எடுத்துச் சென்றுள்ளனர். எரியும் அல்லது வெடிக்கும் பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்வது ரயில்வே சட்டப்பிரிவு 154, 164, 165ன் படி குற்றச்செயலாகும். விபத்துக்கு உள்ளான ரயில் பெட்டியில் அதிக அளவு சமையல் பாத்திரங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. ஒரு கழிவறை முழுவதும் சமையல் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஆய்வு
விபத்து நடந்த பகுதியில் தமிழக அமைச்சர் மூர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் சங்கீதா, காவல் உயரதிகாரிகள், தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் விரைந்து சென்றனர். விபத்துப் பகுதியை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “நிகழ்விடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சிலிண்டர் வெடித்ததே விபத்துக்குக் காரணம் எனத் தெரிகிறது. 9 பேர் பலியாகியுள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.
ரூ.10 லட்சம் நிவாரணம்
இதற்கிடையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை ரயில் நிலையத்துக்குள்ளும், ரயிலிலும் எடுத்துச் செல்லக் கூடாது என்று தெற்கு ரயில்வே மீண்டும் எச்சரித்துள்ளது.