No menu items!

கொஞ்சம் கேளுங்கள்: அரசியல் மாநாடுகள்… பெரும் கூட்டம் – வெறும் பேச்சு!

கொஞ்சம் கேளுங்கள்: அரசியல் மாநாடுகள்… பெரும் கூட்டம் – வெறும் பேச்சு!

“மதுரையில் அழகர் திருவிழாவுக்கு வருகிற மக்கள் திரளைக் காட்டிலும் கட்சி மாநாடுகளுக்கு அங்கே தொண்டர்கள் கூடுவார்களா? எடப்பாடியாரின் அதிமுக பொன்விழா மாநாட்டுக்கு கூட்டம் சேர்ந்ததை எதை வைத்து கண்டுபிடிப்பது?” என்று ஆரம்பித்தார் இடதுசாரி தலைவர்.

“டன் கணக்கில் ஊசிப் போன புளியோதரை போன்ற உணவுகள் வீசி எறியப்பட்டு, பின்னர் குழிதோண்டிப் புதைத்த திடுக்கிடும் காட்சிகளை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும்!”

சற்று கோபக்குரலில் பேசினார் அவர். இப்படி ஒரு அவசர அலங்கோல மாநாட்டுக் காட்சியை கண்டதில்லை என்றும் கூறினார்.

“என்னால் மறக்கமுடியாத மாநாடு ஒன்று உண்டு. அது 1955ல் ஆவடியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாடு. யு.என். தேபர் தலைமை வகித்த மாநாடு. யு.என். தேபர் நகருக்கு வந்தபோது சென்னையே திரண்டு வரவேற்பு கொடுத்தது போல அப்படி ஒரு கூட்டம்” என்றார் அவர். நிகழ்ச்சிகளை விவரித்தார்.

காமராஜர் அப்போது முதல்வர். கவலையுடனும் சுறுசுறுப்புடனும் அவர் மாநாடு பணிகளை நேரடியாக கவனித்தார். நகரம் நெருக்கடிகளால் பாதிக்கப்படக்கூடாது என்பதால் மாநாடு ஆவடியில். அப்போது அங்கே போக வசதி வாய்ப்புகளே இல்லை. சாலை வசதியும் கூட செய்ய வேண்டி இருந்தது.

பிரதமர் நேரு உட்பட எல்லா தலைவர்களும் வருகிறார்கள். யுகோஸ்லோவியா அதிபர் மார்ஷல் டிட்டோ கலந்து கொள்கிறார். ஆகவே பெருமளவு கூட்டம் எதிர்பார்க்கப்பட்டது.

மாநாட்டுக்கு வரும் மக்களுக்காக உணவு தயாரிக்க பலவகையான ஏற்பாடுகள். ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம் நடத்திய மேயர் ராமநாத ஐயர் தலைமையில் அந்த பணிகள். அப்போதுதான் முதல்முறையாக இட்லி அரைக்க மின்சார கிரைண்டர், காபி மிஷின் எல்லாம் அங்கே இடம்பெற, பத்திரிகைகளில் அதிசய செய்திகளாக இடம் பெற்றன. லட்சக்கணக்கில் இட்லிகள் தயாராயின. எச்சரிக்கையுடன் சுத்தமாக சமையல் அமையும் விதமாக கண்காணிப்புகள்.

அன்று மாநாடுகளில் கலந்துகொள்ள வரும் தொண்டர்கள் கையோடு உணவு பொட்டலங்களையும் கொண்டு வருவார்கள். இடைவேளையில் நிழல்களில் அமர்ந்து உணவு சாப்பிடுவார்கள். ஆவடியில் அப்படியும் நடந்தது. எந்தவித குழப்பம் இன்றி அந்த பெரும் மாநாடு நடந்தது கண்டு நேரு வியந்தார்.

இந்த மாநாட்டில்தான் காமராஜர் மீது பிரதமர் நேரு கண் பட்டது. நேரு ஆரம்பத்தில் ராஜாஜி மீதுதான் பெரும் மதிப்பு வைத்திருந்தார். வேடிக்கை என்னவென்றால், நேரு இருக்கிற பக்கம் காமராஜ் நெருங்கவே மாட்டார். தூரத்தில் நின்று நேருவை பார்த்தவாறு இருப்பார். அவ்வளவு மரியாதை!

இந்த மாநாட்டில்தான் காங்கிரஸ் ஜனநாயக சோஷலிஸம் தனது லட்சியம் என்று அறிவிப்பு செய்தது. காங்கிரஸின் பொன்விழா மாநாடுதான் இதுவும். ஒருநாள் கூத்தாக நடக்கவில்லை.

இவ்வளவு பெரிய கூட்டத்தை அதுவரை தமிழ்நாடு எந்த மாநாட்டிலும் கண்டதில்லை. மாநாடு பந்தல் முதல் பல அலங்கார ஏற்பாடுகள் செய்வதை ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனிடம் ஒப்படைத்தார் காமராஜ். நேருவையே வியக்க வைத்தார் வாசன். காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால தலைவர்கள் முதல் அன்றைய தலைவர் வரை அத்தனை பேரின் வண்ண ஓவியங்கள் பந்தல் வாயலை அலங்கரித்தது கண்டு வடநாட்டு தலைவர்கள் பிரமித்தார்கள்.

இந்த மாநாடு பற்றி அறிஞர் அண்ணா திராவிடநாடு இதழில் ‘பெரும் கூட்டம்… வெறும் பேச்சு…’ என்று கடுமையாக விமர்சனம் செய்ததும் மறக்க முடியாது. காகித பூ மணக்காது – காங்கிரஸ் சோஷலிஸம் இணிக்காது என்றார்.

“நான் எனது தமையனாருடன் திமுகவின் திருப்பரங்குன்றம் மாநாட்டை பார்த்திருக்கிறேன்” என்றார் அதுவரை அமைதி காத்த இலக்கியவாதி.

“அது 1961. ‘விகடன்’ அந்த மாநாட்டை பற்றி வண்ண படங்கள் வெளியிட்டு வாசகர்களை திகைக்க வைத்தது. சாவியும், மணியனும் எழுதிய கட்டுரை பரபரப்பானது. மாநாட்டுக்கு செல்ல ரயில்களில் இளைஞர்களின் கூட்டம் நிரம்பி எல்லார் கைகளிலும் திராவிட இயக்க புத்தகங்களாக இருந்ததை பற்றி எழுதினார்கள். விறுவிறுப்புடன் வாதங்கள் நடந்தவாறு அந்த இளைஞர்கள் லட்சியவாதிகளாக இருந்தார்கள். ஏதோ ஒரு மாபெரும் மாற்றத்திற்கு வித்திடும் சூழ்நிலையை புரிய வைத்தது அந்த காட்சிகள். இளைஞர்களின் உற்சக குரல்கள் அந்த ரயிலில் பயணித்த என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. ஆட்சியை பிடிக்கும் ஆசையும், அவசரமும் அண்ணா நடத்திய அந்த மாநாட்டில் இருக்கவில்லை.” இலக்கியவாதி கூறினார்.

எம்.ஜி.ஆரின் அதிமுக முதல் மாநாடு திருச்சியில் நடந்தது. எம்.ஜி.ஆரே மாநாட்டு வாயிலில் துண்டு ஏந்தி நின்று நிதி வசூலித்தார். புரட்சித்தலைவர் துண்டு ஏந்தினால் கேட்கவா வேண்டும்.” லட்சக்கணக்கில் திரண்ட மக்கள் ஒரு ஒழுங்கோடு ஒருவர் விடாமல் வரிசையாக வந்தார்கள். எம்.ஜி.ஆர். மடியேந்தி நின்ற துண்டில், ரூபாய் நோட்டுகள், காசுகள், கடிகாரங்கள், கழுத்தில் இருந்த செயின்கள் மடமடவென்று விழுந்தன. ஒரு பெண் தன் கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டிக்கொண்டு தங்க தாலியை கழற்றி அளித்தார்… எந்தவித குழப்பமும் இல்லை! – இடதுசாரி தலைவர் இதை விவரித்தார்.

பெரியார் நடத்திய திராவிடர் கழக மாநாடு…! குறிப்பிட்ட பேச்சாளர் அந்த நாளில் மாநாட்டுக்கு வந்தால் போதும். அன்று மட்டுமே அவர்களுக்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். பெரியரின் சிக்கனம்! ஆடம்பரத்துக்கு அனுமதி இல்லாத மாநாடு. “உன்னை யார் இன்று வரச்சொன்னது… நீ நாளைக்கு தானே பேசவேண்டும்” என்று பெரியார் கேட்பார். பேச்சாளர்கள் சிரித்தவாறு “ஐயா! தங்க ஏற்பாடு நானே பார்த்து கொள்கிறேன். தினமும் உங்கள் பேச்சை கேட்க வேண்டுமே” என்பார்.

பெரியார் மாநாடுக்கு வருகிறவர்கள் உறுதியான கொள்கை பிடிப்பு உள்ளவர்கள். வெகுதூர கிராமங்களில் இருந்தும் வருவார்கள். மாநாட்டில் ஒருவர் பாக்கியில்லாமல் கறுப்பு சட்டை அணிந்திருப்பார்கள். பெரியாரும்!

“மாநாடுகள் என்பது ஒரு கட்சியின் வளர்ச்சியை காட்டுவது. கொள்கையை காட்டுவது. பண பலத்தை அல்ல. கட்சியின் வளர்ச்சி என்பது – ஒழுங்கு, திட்டமிடல், உருப்படியான தீர்மானங்கள், எதிர்காலத்துக்கான புதிய பார்வை இவற்றில்தான் இருக்கிறது. மாநாடு இவைகளை வெளிப்படுத்தினால்தான் கட்சியின் கம்பீரம் புரியும்.” முடித்தார் இடதுசாரி தலைவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...