No menu items!

தமிழ் சினிமாவின் ’வசூல் ராஜாக்கள்’!

தமிழ் சினிமாவின் ’வசூல் ராஜாக்கள்’!

தீபாவளி, பொங்கல் வந்துவிட்டால் போதும், படம் வெளியான அன்று ’அந்த’ மூன்றெழுத்து ஹீரோவின் படம் 5 கோடி வசூல், ‘இந்த’ மூன்றெழுத்து ஹீரோ படம் 3 கோடி வசூல் என ’பாக்ஸ் ஆபீஸ்’ புள்ளியியல் புலிகளின் சைபர் யுத்தம் ட்விட்டரில் ஆரம்பமாகி விடும். அதற்கு பிறகு அந்த ஹீரோவின் ரசிகர்களும், இந்த ஹீரோவின் ரசிகர்களும் கமெண்ட்களால் தெறிக்க தெறிக்க பரஸ்பரம் தாக்கி கொள்வார்கள். ஆனால் அப்படம் சம்பந்தபட்ட ஹீரோக்களோ அமைதியாக, அடுத்தப் படவேலைகளில் இருப்பார்கள். ஆனால் தயாரிப்பாளர்களோ, விநியோகஸ்தர்களோ அல்லது திரையரங்கு அதிபர்களோ (பட ரிசல்ட்டைப் பொறுத்து) அதிகப்படியான சந்தோஷத்தினாலோ அல்லது துக்கத்தினாலோ பேச முடியாத நிலைமைக்குப் போய் இருப்பார்கள்.

உண்மையில் இந்த வசூல் புள்ளியியல் விவரங்கள் சாத்தியப்படுமா? இது நிஜமா? யார் இதை தீர்மானிக்கிறார்கள்? இதனால் யாருக்கு லாபம்? தமிழ் சினிமாவையே சைலண்ட்டாக காலி பண்ணும் இந்த வசூல் கலாட்டாவை பத்தி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

பாக்ஸ் ஆபீஸ் என்பது என்ன?

தயாரிப்பாளர் மூதலீடு (பட்ஜெட்) செய்து ஒரு படத்தைத் தயாரிக்கிறார். பட்ஜெட்டில் படத்திற்கான ப்ரமோஷன் மற்றும் விளம்பர செலவுகள் அடங்காது. படம் முழுமையாக முடிவடைந்ததும் அதன் திரையரங்கு உரிமையை விநியோகஸ்தர்களிடம் (டிஸ்ட்ரிப்யூட்டர்) குறிப்பிட்ட தொகைக்கு விற்கிறார். விநியோகஸ்தர் தனது பகுதியில் இருக்கும் திரையரங்குகளில் திரையிடுகிறார். அதில் வரும் வருமானத்தில் விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் (எக்ஸிபிட்டர்) தங்களது பங்கைப் பிரித்து எடுத்துகொள்கிறார்கள். இது வழக்கமாக மல்ட்டி ஃப்ளெக்ஸ்களில் 50:50 என்ற ஷேரில் இருக்கும். மாஸ் ஹீரோவின் படங்கள் என்றால் சிங்கிள் ஸ்கிரீனிங்கிற்கு, 70% முதல் 80% வரை விநியோகஸ்தர்களின் பங்கு மாறுப்படும். விற்கும் டிக்கெட்டின் விலையில், கேளிக்கை வரியாக 30% கழிக்கப்பட்டு மீதம் இருக்கும் தொகையே ஒரு டிக்கெட்டிற்கான வசூலாகும். படம் வாங்கப்பட்டிருக்கும் விலையில் இருந்து, விநியோகஸ்தரின் பங்கை கழித்துப் பார்க்கும் போது, விநியோகஸ்தரின் பங்கு அதிகமிருப்பின் லாபம். இல்லையெனில் நஷ்டம். இதுதான் பாக்ஸ் ஆபீஸ் ஃபார்மூலா.

வசூலைச் சொல்லும் உரிமை யாருக்கு?

ஒரு படம் வெளியானதும், அப்படம் திரையிட்ட திரையரங்குகளின் உரிமையாளர்கள் தங்களது விநியோகஸ்தர்களுக்கு புக்கிங் முடிந்த உடனேயே விற்ற டிக்கெட்களின் விவரம் மற்றும் வசூல் நிலவரங்களைத் தெரிவித்து விடுவார்கள். விநியோகஸ்தர் இந்த விவரங்களை தயாரிப்பாளருக்கு தெரிவிப்பார். இதனால் ஒரு படத்தின் வசூல் விவரங்களை, அதிகாரப்பூர்வமாக வெளியிடும் தகுதி அப்படத்தின் தயாரிப்பாளருக்கே இருக்கிறது.

பாக்ஸ் ஆபீஸ் ட்ரெண்ட்டின் பின்னணி

1990-கள் வரை நன்றாக இருந்த தமிழ் சினிமாவின் நிலை, பல பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் ஆக்ரமிப்பாலும், திருட்டு விசிடியாலும் கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற ஆரம்பித்தது. இதனால் தமிழ் சினிமாவை மீட்டெடுக்கும் என்ற நல்ல எண்ணத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் ’டிக்கெட் விலையை விருப்பப்படி நிர்ணயம் செய்யும் முறையும்’, முன்னாள் முதல்வர் கருணாநிதியால் ‘கேளிக்கை வரி தள்ளுப்படியும்’ (30%) திரையுலகுக்கு அளிக்கப்பட்டது. இந்த நல்ல முயற்சிகளானது, ஒட்டுமொத்த திரையுலகுக்கும் நன்மையளிக்கும் என்ற எதிர்பார்பு நிறைவேறாமல், நட்சத்திரங்களுக்கே அதிக வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் வரமாகி போனது என்பதே நிஜம்.

டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் அனுமதி கிடைத்ததும், பெரிய ஹீரோக்களின் மெகா பட்ஜெட்டிலான படங்களுக்கு விலை இரு மடங்கு முதல் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டது. இதனால் தங்களால் தானே டிக்கெட் விலை இவ்வளவு டிமாண்ட் என சம்பளத்தை உயர்த்தியது நட்சத்திர வட்டாரம். ஆனால் பிரம்மாண்டம், மேக்கிங் என பல புதிய ட்ரெண்ட்களால் படத்தின் பட்ஜெட், மூன்று மடங்கு உயர்ந்திருப்பதை யாரும் குறிப்பிடுவது இல்லை. உதாரணத்திற்கு
பட்ஜெட் டிக்கெட் விலை வரி நிகர டிக்கெட் விலை
10 கோடி 80 ரூபாய் 30% 56 ரூபாய்
50 கோடி 200 ரூபாய் 30% 140 ரூபாய்

இதேபோல், கேளிக்கை வரி தள்ளுபடியும், நட்சத்திரங்களுக்கே சாதகமாகி இருக்கிறது. பெரிய நட்சத்திரங்களின் மெகா பட்ஜெட் படங்களுக்கான கேளிக்கை வரி தள்ளுபடி பெரிய தொகையாக இருக்கும். காரணம் அதன் பெரிய பட்ஜெட். இந்த தொகையானது படத்தின் பட்ஜெட்டிலிருந்து கழித்து கிடைக்கும் லாபக் கணக்காகவே பார்க்கப்படுகிறது. இந்த லாபக் கணக்கும் நட்சத்திரங்களின் இமேஜை அடிப்படையாக வைத்தே பார்க்கப்படுகிறது. இப்படியாக தொடங்கிய வசூல் வேட்டை டிரெண்ட் இன்று ஹாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்களையும் மிஞ்சும் வகையில், பலப்பல பில்டப்களுடன் சமூக இணையதளங்களிலும், தனிநபர் ப்ளாக்குகளிலும் அசுரத்தனமாக தாக்க அரம்பித்திருக்கிறது. இது நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்களின் வருமானத்தை உயர்த்த உதவுமே தவிர, தமிழ் சினிமாவை புத்துயிர் பெற வைக்காது.

அப்படியானால் தீர்வு என்ன?

முதலாவதாக, கேளிக்கை வரியாக 30% அனைத்துப் படங்களுக்கும் விதிக்கப்படவேண்டும். இதன் மூலம் அரசுக்கு குறைந்தபட்சம் 300 முதல் 500 கோடிகள் வரை ஆண்டொன்றுக்கு வருவாய் கிடைக்கும்.
இரண்டாவதாக தமிழக முழுவதும் ஒரே டிக்கெட் விலையை நிர்ணயிக்கப்படவேண்டும். இதிலும் அரசுக்கு வருவாய் கிட்டும்.

இது பழைய ட்ரெண்ட்டுக்கு யூ டர்ன் அடிப்பதுதான். ஆனால் இதனால் இன்றைய சூழ்நிலையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரமுடியும். ஒரே டிக்கெட் விலை மற்றும் விலைக் குறைப்பு மக்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும். வேறு வழியில்லாமல் நட்சத்திரங்களின் சம்பளம் கட்டுக்குள் வரும். பட்ஜெட் நியாயமானதாகும். ரசிகர்களும் திரையரங்குகளுக்குப் போய் படம் பாருங்கள். திருட்டு டிவிடிக்களுக்கு குட்பை சொல்லுங்கள்.

அடுத்ததாக நட்சத்திரங்களை மட்டுமே குறைச் சொல்வதாக நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. படமெடுத்த நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமை வாங்கி கஷ்டப்படும் விநியோகஸ்தர்கள், படங்களைத் திரையிட்டு, திருமண மண்டபங்களுக்காக திரையரங்குகளை விற்கும் அதன் உரிமையாளர்களையும் ஆயிரக்கணக்கில் பார்க்கலாம். ஆனால் படம் நடித்ததால், நஷ்டமடைந்தேன்; எந்த லாபமும் இல்லை என நட்சத்திரங்களால் சொல்ல முடியுமா?

‘இனியும் வேண்டாம் வசூல் பப்ளிசிட்டி

ஆனால் இன்று சமூக இணையதளம் என்ற வாய்ப்பு இருப்பதால், ஆளாளுக்கு தங்களை வசூல் ராஜக்களாக நினைத்து கொண்டு இதுதான் முதல் நாள் வசூல், முதல் வார வசூல் என குத்துமதிப்பாக குறிப்பிடுகிறார்கள். படத்தின் வசூல் அதிகம் என்றால் படம் நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்பதால் அப்படம் சம்பந்தபட்ட யாரும் வசூலைப் பற்றி குறிப்பிடுவதே இல்லை.

தயாரிப்பாளர்களும் ‘வரலாறு காணாத வசூல் மழை’ என்று விளம்பரமும் செய்வார். படம் வெளியான இரண்டு மாதங்கள் கழித்து, அப்படம் சம்பந்தமாக ஏதாவது பஞ்சாயத்து கிளம்பும் போதுதான், ‘பெரும் நஷ்டம். ஹீரோவும், டைரக்டரும்தான் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவினார்கள்’ என்ற உண்மையைப் போட்டு உடைப்பார் தயாரிப்பாளர். உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கும் இன்று இதே நிலைமைதான். இதற்குள் ஒவ்வொரு ஹீரோவின் ரசிகர்களும் தங்களை மறந்து, மோசமான வார்த்தைகளால், போட்டுத் தாக்க ஆரம்பித்திருப்பார்கள். அதேநேரம் உண்மையில் வசூலை அள்ளிக்குவித்தாலும் கூட, அப்பட தயாரிப்பாளர் வாயைத் திறக்கவே மாட்டார். திறந்தால், அடுத்த வாரமே வருமானவரித் துறையை வரவேற்க அவரது வீட்டுக் கதவைத் திறக்க வேண்டியிருக்கும் என்ற பயம்.

ஆகவே இந்த பாக்ஸ் ஆபீஸ், வசூல், என நம்மை நாமளே ஏமாற்றுகிற புள்ளியியல் விளையாட்டுகள் இனியும் வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...