No menu items!

புத்தகம் படிப்போம்: தமிழ்நாட்டில் பிற மொழியினர்

புத்தகம் படிப்போம்: தமிழ்நாட்டில் பிற மொழியினர்

தமிழ்நாட்டிற்குள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குடியேறுவது கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து இந்தி மொழி பேசுவோர் தினம் தினம் ஆயிரக்கணக்கில் ரயில்களில் வந்து இறங்கிக்கொண்டே இருக்கிறார்கள். அதேநேரம் தமிழர்கள் வடமாநிலங்களில் குடியேறுவது கணிசமாக குறைந்துள்ளது!

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆதாரமாக கொண்டுள்ள சமீப ஆய்வு ஒன்று பின்வரும் விவரங்களை சுட்டிக்காட்டுகிறது, தமிழர்கள் வட மாநிலங்களில் குடியேறுவது 2001-ஆம் ஆண்டில் 8.2 லட்சமாக இருந்தது, 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 7.8 லட்சமாக குறைந்துள்ளது. இதேகாலகட்டத்தில் உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்தும், அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமானோர் தமிழ்நாட்டில் குடியேறியுள்ளனர். தமிழ்நாடு, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் குடியேறும் வட இந்தியர்களின் எண்ணிக்கை 2001-ஆம் ஆண்டு 58.2 லட்சமாக இருந்தது, 2011-ஆம் ஆண்டில் 77.5 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது வட இந்தியர்கள் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் குடியேறுவது ஏற்கெனவே அதிகமாக இருந்த நிலையில், தற்போது அதிலும் அதிகமாக 33.2 சதவீதம் உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு உள்பட தென்னிந்திய மாநிலங்களில் நிலவும் அமைதியான சூழல், வேலைவாய்ப்பு, பொருளாதார வசதி போன்ற காரணங்கள் இவர்கள் தெற்கு நோக்கி படையெடுக்க காரணம் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்காக தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்; ஆனால், எதிர்காலத்தில் தமிழர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும் அபாயம் இதனுள் பொதிந்திருப்பதை மறுக்க முடியாது. 

அது என்னவிதமான அபாயம், இந்த சூழலை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு நமக்கு வழிகாட்டியாக அமையக்கூடிய நூல்களில் ஒன்று, ‘தமிழகத்தில் பிற மொழியினர்’. வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றாலும் இன்றைய சூழலுக்கு படித்து தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்களை கொண்டுள்ள நூல்.

இந்நூல் ஆசிரியர் ம.பொ. சிவஞானம், தமிழறிஞர். தனது நயமான உரை மூலம் சிலப்பதிகாரப் பெருமையினை தமிழுலகம் அறியச் செய்து, அதனாலேயே ‘சிலம்பு செல்வர்’ என சிறப்புப் பெயர் பெற்றவர். 1946இல் ‘தமிழரசுக் கழகம்’ என்ற அமைப்பை நிறுவி, அதன் வாயிலாக, மொழியின் அடிப்படையில் தமிழ்நாடு தனி மாநிலமாக வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் எழுப்பியவர். அப்போது தென் மாநிலங்கள் இணைந்து சென்னை மாகாணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

‘தமிழகத்தில் பிற மொழியினர்’ என்னும் இந்த நூலில் பல நூறு ஆண்டுகால வரலாறு புள்ளிவிவரமாக சொல்லப்பட்டுள்ளது. வரலாறு நெடுகவே தமிழ்நாடு திறமைகளைப் பாராட்டத் தெரிந்த மக்கள் நிறைந்த பகுதியாகத்தான் இருந்திருக்கிறது. அரசியல், இலக்கியம், கலை என எந்தத் துறையாக இருந்தாலும் திறமைகளை ஏற்றுக்கொள்ளும், ஊக்குவிக்கும் மனப்பாக்கு உடையவர்களாகத்தான் தமிழர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள். அதேநேரம் தமிழ்நாட்டுக்கு பக்கத்து மாநிலங்களில் இந்நிலை இல்லை என்பதும் தமிழர்களே அங்கெல்லாம் பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், தமிழர்கள் தடம்புரளவில்லை. சமீபகால அரசியல், சினிமா வரலாறுகளே இதற்கு சாட்சி.

இந்நிலையில், தமிழர்கள் மீது பிறமொழிக்காரர்கள் ஆதிக்க செலுத்த முயற்சித்தபோதுதான், அதன் ஆபத்தை உணர்ந்து இந்நூலை எழுதியுள்ளார், ம.பொ.சி. குறிப்பாக அரசு வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டது ம.பொ.சி. மனதில் காயங்களை ஏற்படுத்தியுள்ளது. அதனால், தமிழினம் ஒன்றுபட வேண்டும்; விழிப்புணர்வு அடைய வேண்டும் என்ற அவரது ஆர்வத் துடிப்பை நூல் முழுவதும் உணர முடிகிறது.

“இந்நூல் இனவெறியை வளர்க்க எழுதப்பட்டதல்ல; இனவழி உரிமைகளை வலியுறுத்தி, ஒருமைப்பாட்டை வளர்க்கும் குறிக்கோளுடன் எழுதப்பட்டது” எனக்கூறும் ம.பொ.சி. தேசிய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பது நாடறிந்த உண்மை. ஆகவே, இந்தியாவின் பிற மொழியினர் மீது அவர் காழ்ப்புகொள்ள சந்தர்ப்பமே இல்லை. ஆயினும், பிற மாநிலங்களில் இனவுணர்வும் தேசிய உணர்வுடன் இணைந்து செயல்படுவதை எடுத்துக்காட்ட தேசியவாதிகளிடம் காணப்படும் இனவிரோதப் போக்கையும் தயவு தாட்சண்யமின்றி இந்நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.  

அக்காலகட்டத்தில் சென்னை நகரில் பிறமொழியினரின் வாழ்வு பற்றியும், எங்கும் எதிலும் தமிழரல்லாதோரின் தலையீடு பற்றியும், தமிழனத்துக்கு விபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்ற விழிப்புணர்வுச் சிந்தனை பற்றியும், ஏன் தமிழினம் ஒன்றுபட வேண்டும் என்ற கோட்பாடு பற்றியும் இந்நூல் விரிவாக பேசுகிறது.

இந்நூல் அக்கால நாட்டு நிலைமையை எளிதாக புரியவைப்பதுடன் எதிர்காலத்தில் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடுகள் குறித்தும், இன்றைய சிக்கலை புரிந்துகொள்வதற்கும் வழிகாட்சியாக அமைகிறது.


தமிழகத்தில் பிற மொழியினர்
ஆசிரியர்: ம.பொ. சிவஞானம்
விலை ரூ. 190
வெளியீடு: புலம் பதிப்பகம், சென்னை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...