No menu items!

Jadeja Vs CSK – என்ன நடக்கிறது சிஎஸ்கேயில்?

Jadeja Vs CSK – என்ன நடக்கிறது சிஎஸ்கேயில்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆடும் அணிகளிலேயே, ஒரு குடும்பம் போல ஒற்றுமையான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. சிஎஸ்கேவைப் பார்த்து மற்ற அணிகள் பொறாமைப்படும் விஷயங்களில் இந்த ஒற்றுமையும் ஒன்று.

“2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஆட வந்தபோது, அணி நிர்வாகத்திடம் தோனி கேட்டதெல்லாம் ஒன்றுதான். எந்த விலை கொடுத்தாவது சிஎஸ்கேவின் பழைய வீரர்களை வாங்கியாக வேண்டும் என்பதே அது. இதனால் ஜடேஜா, ரெய்னா, பிராவோ, வாட்ஸன், ராயுடு என்று 30 வயதைக் கடந்தவர்களாக இருந்தாலும் பழைய வீரர்களை தேடிப் பிடித்து வாங்கியது சென்னை. பலரும் டாடீஸ் ஆர்மி (Daddy’s Army) என்று கிண்டலடித்தாலும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அந்த ஆண்டில் கோப்பையை வென்று தங்கள் வெற்றியின் மூலம் பதில் சொன்னார்கள்” என்கிறார் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ஒருவர்.

இதைப்பற்றி கூறும் சிஎஸ்கே அணியின் முன்னாள் பிட்னெஸ் டிரெயினரான ராம்ஜி சீனிவாசன், “சிஎஸ்கே ஒரு அணி அல்ல. ஒரு குடும்பம். அங்கு வெற்றி தோல்விகளைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்பட மாட்டார்கள். ஒன்றாக இணைந்து ஆடவேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே லட்சியம்” என்கிறார்.

இப்படி கூட்டுக் குடும்பமாக இருக்கும் சிஎஸ்கே அணியில் இப்போது விரிசல் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிஎஸ்கே அணியின் தளபதியான ரவீந்திர ஜடேஜாவின் சில நடவடிக்கைகள் இந்த சந்தேகத்தை அதிகரித்து வருகின்றன.

கடந்த ஆண்டில் தனது கேப்டன் பதவியை உதறித் தள்ளிய தோனி, தனக்கு பதிலாக ஜடேஜாவைக் கேப்டனாக்கினார். ஆனால் ஜடேஜாவால் ஒரு வெற்றிகரமான கேப்டனாக செயல்பட முடியவில்லை. அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறமையையும் அந்த கேப்டன் பதவி பாதித்தது. சிஎஸ்கே அணி அடுத்தடுத்து தோல்விகளைத் தழுவ, கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் ஜடேஜா. அவருக்கு பதில் மீண்டும் தோனியே கேப்டனானார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான ஜடேஜா, சிஎஸ்கே அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகினார்.

கடந்த ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே அணியை அன்ஃபாலோ செய்தார். புதிய அணியை தேடத் தொடங்கினார். சிஎஸ்கே அணியும் ஜடேஜாவைக் கழற்றிவிடத் தயாரானது. ஆனால் அவரை விட தோனிக்கு மனமில்லை . சிஎஸ்கே அணியிடம் பேசி அவரை அணியில் தக்கவைத்தார்.

தோனியின் விருப்பப்படி அணிக்குள் நுழைந்தாலும், ஜடேஜாவின் மனதில் இருந்த பழைய வருத்தங்கள் தொடர்ந்தன. இந்த கட்டத்தில் அவரது மனவருத்தத்தை கூட்டும் வகையில் புதிதாக ஒரு விஷயம் ஒவ்வொரு போட்டியிலும் நடந்தது.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் ஜடேஜாவுக்கு அடுத்து களம் இறங்குவது என்று தோனி முடிவு செய்தார். ஆனால் போட்டியைப் பார்க்க வந்த ரசிகர்களோ, தோனியின் பேட்டிங்கை பார்க்க விரும்பினார்கள். இது தோனியின் கடைசி தொடர் என்று கருதியதால் அவரது பேட்டிங்கை கடைசியாக பார்க்க மாட்டோமா என்று ரசிகர்கள் ஏங்கினர். அது ஜடேஜாவை பாதித்தது,

களத்தில் ஜடேஜா அவுட் ஆனால்தான் தோனி வருவார் என்பதால், அவர் பேட்டிங் செய்யும்போதே ரசிகர்கள் ‘வீ வாண்ட் தோனி..’ என்று முழக்கமிடத் தொடங்கினார்கள். ஜடேஜா நிலைத்து ஆடினால் கவலைப்பட்டார்கள். அவர் அவுட் ஆனால் வருத்தப்படுவதற்கு பதிலாக கொண்டாடினார்கள். ஒவ்வொரு முறையும் ஜடேஜா அவுட் ஆகி, தோனி களத்தில் நுழையும்போது கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

இது ஜடேஜாவை வருத்தமடையச் செய்தது. அணியின் கொண்டாட்டங்களில் இருந்து அவர் மெல்ல மெல்ல விலகியதாக கூறப்படுகிறது.

2 நாட்களுக்கு முன் டெல்லிக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற பிறகு பேசிய ஜடேஜா, “தோனி இருக்கும்போது நான் 7-வது பேட்ஸ்மேனாக களம் இறங்குவதை சிஎஸ்கே ரசிகர்கள் விரும்பவில்லை. தோனி பேட்டிங் செய்ய வரவில்லையே என்ற ஏமாற்றத்தில் அவர் பெயரைச் சொல்லி முழக்கமிடுகிறார்கள். நான் அவுட் ஆவதற்காக காத்திருக்கிறார்கள்” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து சிஎஸ்கே ரசிகர் ஒருவர், “ஜத்து (ஜடேஜா) தனது மனதுக்குள் சோகத்தை வைத்துக்கொண்டு, சிரித்துப் பேசுகிறார். தனது சொந்த அணி ரசிகர்களே தான் அவுட் ஆக வேண்டும் என்று ஆசைப்படுவது யாருக்குத்தான் வலியைத் தராது?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். ரசிகரின் இந்த பதிவை ஜடேஜா லைக் செய்துள்ளார்.

அவரது இந்த செயல், சிஎஸ்கேவுக்கும் ஜடேஜாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது. இந்த ஐபிஎல்லுடன் தோனி ஓய்வுபெற்றால், புதிய கேப்டனின் கீழ் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணி களம் இறங்கும். ஆனால் தான் கேப்டனாக இருந்த அணியில் தோனியைத் தவிர மற்றொரு கேப்டனின் கீழ் ஆடுவதை ஜடேஜா ஒருபோதும் விரும்ப மாட்டார். தனது தாய்மண்ணான குஜராத்தை சேர்ந்த ‘குஜராத் டைட்டன்ஸ்’ அணிக்காக அவர் அடுத்த ஐபிஎல்லில் ஆடலாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

விரிசல் குறையுமா? சர் ஜடேஜா அடுத்த ஆண்டில் மீண்டும் சிஎஸ்கேவுக்காக ஜடேஜா ஆடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...