தமிழ்நாடு முன்னாள் டி.ஜி.பி. வால்டர் ஐசக் தேவாரம் ‘ வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இது.
முந்தைய பகுதிகளை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா – மூன்று முதலமைச்சர்களுடனும் நீங்கள் பணியாற்றியுள்ளீர்கள். அந்த அனுபவங்களை சொல்ல முடியுமா?
மூவருமே என்னை நான்றாக வைத்திருந்தார்கள். கருணாநிதி ஆட்சியில் முதலில் என்னை தஞ்சாவூர் எஸ்.பி.யாக நியமித்தார். ஐந்து வருடங்களும் அங்கே இருந்தேன். பின்னர் நாகப்பட்டிணம் மாவட்டம் உருவாக்கியபோது என்னைத்தான் நியமித்தார். அதன்பின்னர் ஜப்பானுக்கு ஒரு பயிற்சிக்காக சென்றேன். திரும்பி வந்ததும் முக்கிய பதவி கொடுத்தார்.
எம்.ஜி.ஆர்., நக்சலைட் பிரச்சினை வந்ததுபோது என்னை தேர்வு செய்தார். அதுபோல் வீரப்பன் பிரச்சினையில் ஜெயலலிதா என்னை தேர்வு செய்தார்.
நான் முதன்முதலில் பணிக்கு வரும்போது பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்தார். கக்கன் உள்துறை அமைச்சர். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மதுரை வருவார். அப்போது ஏஎஸ்பியாக இருந்த ஸ்ரீபாலுடன் நான் செல்வேன். கக்கன் வெள்ளைச் சட்டை போட்டிருப்பார். சட்டை பாக்கெட்டில் 2 ரூபாய் வைத்திருப்பார். அவருடைய லக்கேஜை யாரையும் எடுக்கவிட மாட்டார். போர்ட்டர் வந்துதான் எடுத்து செல்வார். பாக்கெட்டில் இருக்கும் 2 ரூபாயை அந்த போர்ட்டருக்கு கொடுத்துவிடுவார். எத்தனை வருடங்கள் உள்துறை அமைச்சராக இருந்தவர். ஆனால், அவருக்கென்று சொந்தமாக வீடு கிடையாது, நிலம் கிடையாது. அவர் மட்டுமல்ல அவர் காலத்து ஆட்கள் எல்லோருமே அப்படித்தான் இருந்தார்கள். முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு என்ன இருந்தது? அவர்கள் எல்லாம் சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்கள்; அப்படித்தான் இருப்பார்கள். என்னிடம் இன்றும் கார் இல்லை. நம்மால் எல்லாம் முடியாது.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் மெரினாவில் மீனவர்களை அப்புறப்படுத்தும் விவகாரத்தில் நடந்த சூட்டிங் பற்றி சொன்னீர்கள். ஏன் அந்த சூட்டிங் நடந்தது?
அரசு ஆணையை அவர்கள் எதிர்த்தார்கள். குடிசை மாற்று குடியிருப்பு, 200க்கும் மேற்பட்ட வாகனங்களை உடைத்துவிட்டார்கள். தொடர்ந்து ஊர்வலமாக டிஐஜி அலுவலகம் நோக்கி வந்தார்கள். அதை நிறுத்த வேண்டியதிருந்தது. எனவே, சுட்டேன். சூட்டிங்கில் எக்ஸ்பர்ட் நான்.
ஏன் மெரினாவில் இருந்து மீனவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார்?
இதை எம்.ஜி.ஆரிடம் தான் கேட்கவேண்டும். மீனவர்கள் 3000 வருடங்களாக அங்கே மீன் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். திடீரென்று அவர்களை போகச் சொன்னால் எங்கே போவார்கள்? எங்கே மீன் பிடிப்பான்; சாப்பாட்டுக்கு எங்கே போவான்? வேறு இடம் கொடுப்போம் என்று சொன்னார். ஆனால், அங்கேயும் மீனவர்கள் இருப்பார்கள்தானே. இவர்களுக்கும் அவர்களுக்கும் மோதல் வரும். ஏன் எம்.ஜி.ஆர். அந்த முடிவை எடுத்தார் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது. மெரினாவை அழகாக வைக்கவேண்டும் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அது எம்.ஜி.ஆர். செய்த மிகப்பெரிய மிஸ்டேக்.
தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜிகணேசனுக்கு நீங்கள்தான் இன்ஸ்பிரேசன். அவர் உங்களை சந்தித்துள்ளாரா?
ஒரு பத்து நிமிடங்கள் மட்டும்தான் என்னை பார்த்திருப்பார். அப்போது ஊட்டியில் பணியில் இருந்தேன். ஊட்டியில் நடைபெற்ற சிவாஜிகணேசன் படப்படிப்பில் ஒரு பிரச்சினை வந்தது. நான் வீட்டில் இருந்தேன். என்னை அழைத்தார்கள். நான் போனேன். பிரச்சினை செய்தவர்களிடம், “பத்து எண்ணுவேன்; அதற்குள் நீங்கள் எல்லாம் போய்விட வேண்டும்” என்று சொல்லிவிட்டு, ஒன்று, இரண்டு, மூன்று என சொல்லத் தொடங்கினேன். அனைவரும் ஓடிவிட்டார்கள். அதை சிவாஜிகணேசன் பார்த்துக் கொண்டிருந்தார். சரி படிப்பிடிப்பை நடத்துங்கள் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டேன். அந்த பத்து நிமிடங்கள்தான். அதை வைத்து ‘தங்கபதக்கம்’ படத்தில் என்னை மாதிரி மீசை, நடை, உடை என நடித்தார்.
எம்.ஜி.ஆரும் ஊட்டிக்கு படப்பிடிப்புக்கு வந்துள்ளார். அவருடன் ஜெயலலிதாவும் வந்திருந்தார். அப்போது அவருக்கு 18 வயதுதான் இருக்கும். எம்.ஜி.ஆர். படிப்பிடிப்பு என்றால் கான்ஸ்டபிள் முதல் ஆபிசர் வரை எல்லோரும் அவருடன்தான் சாப்பிட வேண்டும்.
காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் இன்றும் காவல்துறை பணிக்கு வருபவர்களுக்கு ஒரு ‘ரோல் மாடல்’ நீங்கள்தான். அவர்களுக்கு உங்கள் ஆலோசனை?
தைரியமாக இருக்கணும். மிக முக்கியமானது லஞ்சம் கூடாது. லஞ்சம் மிகப்பெரிய தவறு. லஞ்சம் வாங்குவது உறுதியானால் அவர்களை உடனே டிஸ்மிஸ் செய்யவேண்டும். எனக்கு அதிகாரம் கொடுத்தால் லஞ்சம் வாங்குபவர்களை சுடுவேன்.
காவல்துறையில் பெண்களை அதிகம் எடுத்ததே இதற்காகத்தான். நான் தான் பரிந்துரை செய்தேன். பெண் காவலர்கள் அன்பாக இருப்பார்கள், விசாரணையை சிறப்பாக செய்வார்கள், பெண் விசாரணைக் கைதிகள் பாதுகாப்பு விஷயத்தில் அவர்கள் பங்களிப்பு இருக்கும், லஞ்சம் வாங்கமாட்டார்கள் – இந்த நான்கும்தான் நான் கொடுத்த காரணங்கள். நான் கொடுத்த அறிக்கையில் எல்லாம் இருக்கிறது. ஆனால், இப்போது அவர்களும் ஆண் காவலர்களுடன் போட்டி போடுகிறார்கள்; சில இடங்களில் ஆண்களைவிட அதிகமாகவே கொள்ளையடிக்கிறார்கள். இருந்தாலும் பெரும்பான்மை சிறப்பாகவே செயல்படுகிறார்கள்.
தொடரும்