சேப்பாக்கம் மைதானத்தில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையிலான டி20 போட்டி நடக்கவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு சென்னை வீரர்கூட கிடையாது. ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணியில் தமிழக ரஞ்சி அணியின் கேப்டன் சாய் கிஷோர் உள்ளிட்ட 3 சென்னை வீரர்கள் இருக்கிறார்கள்.
ஐபிஎல் தொடங்கிய காலகட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளி விஜய், சுப்ரமணியன் பத்ரிநாத், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பல வீர்ர்கள் இருந்தனர். ஆனால் காலப்போக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழக வீரர்களிடம் இருந்து அன்னியப்பட்டு போனது. தமிழக வீர்ர்கள் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டாலும், அவர்களுக்கு பிளேயிங் லெவனில் ஆட தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு தமிழக வீரர்கூட இந்த ஆண்டு வாங்கப்படவில்லை.
இதற்கு நேர்மாறாக கடந்த 2022-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியில் தமிழக ரஞ்சி கோப்பை அணியின் கேப்டன் சாய் கிஷோர், சாய் சுதர்சன், விஜய் சங்கர் ஆகிய 3 சென்னை வீரர்கள் உள்ளனர். அந்த வகையில் சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து ஆடி பயிற்சி பெற்ற 3 சென்னை வீரர்களுக்கும், தமிழக வீர்ர்கள் யாரும் இல்லாத சிஎஸ்கே அணிக்கும் இடையிலான போட்டி நாளை நடக்கப்போகிறது. இதில் வெற்றிபெறப் போவது சென்னையை பெயரில் வைத்துள்ள அணியா, இல்லை சென்னை வீர்ர்களின் அணியா என்பதுதான் இப்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
ரோஹித்தை அவமானப்படுத்தினாரா ஹர்திக் பாண்டியா?
மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் ரோஹித் சர்மா. ஆனால் இந்த முறை அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம். ரோஹித் சர்மாவின் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அவமானப்படுத்தியாக அவரது ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியின்போது மைதானத்தில் பீல்டிங் செய்துகொண்டிருந்த ரோஹித் சர்மாவை வெவ்வேறு இடங்களில் நிற்கச் சொல்லி கேப்டன் ஹர்திக் பாண்டியா அலைக்கழித்தார். இது சமூக வலைதளங்களில் பரவியது. ரோஹித் சர்மாவை மைதானத்தில் ஹர்திக் பாண்டியா அலைக்கழித்து, அவரை அவமானப்படுத்தியதாக கூறி, ரோஹித்தின் ரசிகர்கள் கமெண்ட்களை அடித்துள்ளனர்.