No menu items!

எம்.எஸ். சுப்புலட்சுமியை இழிவுபடுத்தினாரா டி.எம். கிருஷ்ணா?

எம்.எஸ். சுப்புலட்சுமியை இழிவுபடுத்தினாரா டி.எம். கிருஷ்ணா?

கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி விருது’ அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, சக இசைக் கலைஞர்களான ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் மியூசிக் அகாடமி தலைவருக்கு எழுதிய கடிதத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமியை டி.எம். கிருஷ்ணா இழிவுபடுத்திவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்கள். தொடர்ந்து சமூக வலைதளங்களில் நிகழ்ந்து வரும் இது தொடர்பான விவாதங்களில் வேறு சிலரும் டி.எம். கிருஷ்ணா மீது இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்கள். எம்.எஸ். சுப்புலட்சுமியை இழிவுபடுத்தினாரா டி.எம். கிருஷ்ணா?

டி.எம். கிருஷ்ணா என்று அழைக்கப்படும் தொடூர் மாடபூசி கிருஷ்ணா, தற்கால கர்நாடக இசையுலகில் ஒப்பற்ற ஒரு கலைஞர். இதை அவரை இன்று எதிர்ப்பவர்களும் கூட ஒப்புக்கொள்வார்கள். ரோமன் மகசஸே விருது உள்பட பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றவர், கிருஷ்ணா. தனித்த அடையாளம் பெற்ற குரல் அவருடையது.

மேடைக்கு வெளியிலும் தனித்து ஒலிக்கும் டி.எம். கிருஷ்ணாவின் சமூக அக்கறை சார்ந்த குரல் இசைச் சூழலின் சகல அம்சங்களையும் கூர்மையான கேள்விகளுக்கு உட்படுத்தக்கூடியது.

டி.எம். கிருஷ்ணாவின் ‘சதர்ன் மியூஸிக் – த கர்னாடிக் ஸ்டோரி’ (கர்நாடக இசையின் கதை),  `செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ இரு நூல்களும் மிக முக்கியமானவை. கர்நாடக இசையின் கதை நூலில் கர்நாடக இசையுலகினுள் நிலவும் சாதி, பாலினம், மொழி, மதம் சார்ந்த பாகுபாடுகளை விவாதிக்கிறார். வாய்ப்பாட்டுக் கலைஞர்களுக்கும் பிற கலைஞர்களுக்கும் இடையே இருக்கும் படிநிலைகள், கச்சேரிக்கான கட்டமைப்பு, பாடல்களின் தேர்வு ஆகியவற்றையும் கிருஷ்ணா இந்நூலில் கேள்விக்கு உட்படுத்துகிறார்.

`செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ நூலில் கர்நாடக இசைக் கச்சேரிகளில் இசைக்கப்படும் மிருதங்கத்தின் உருவாக்கம் மற்றும் வரலாறு, அதற்காகப் பதனிடப்படும் மாட்டுத் தோல், ஆட்டுத் தோல், அவற்றை உருவாக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், அவற்றை வாசிப்பவர்கள் எனத் தோல் இசைக் கருவிகளைச் சுற்றி பன்னெடுங்காலமாக நிகழும் அரசியல் குறித்து விரிவாக கள ஆய்வு செய்து, விவாதிக்கிறார்.

இந்த இரு நூல்களும் இசை தொடர்பான கிருஷ்ணாவின் தனிக் கட்டுரைகளும் கர்நாடக இசை உலகிலும் அறிவுலகிலும் தொடர்ந்து அதிர்வுகளை எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், டி.ஜே.எஸ். ஜார்ஜ் எழுதிய ‘எம்.எஸ். வாழ்க்கை வரலாறு’ ஆங்கில நூலின் தெலுங்கு மொழியாக்க நூல் வெளியீட்டில் டி.எம். கிருஷ்ணா கூறிய சில கருத்துகள் சர்ச்சைக்குள்ளாயின. இந்தப் பின்னணியில், எம்.எஸ். சுப்புலட்சுமி குறித்துப் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் பார்வையையும் பிம்பங்களையும் கேள்விக்குட்படுத்தும் நீண்ட கட்டுரையை ஆங்கிலத்தில் . டி.எம். கிருஷ்ணா எழுதினார். எம்.எஸ். சுப்புலட்சுமி என்ற மகத்தான கலைஞரின் நிஜ ஆளுமையை வெளிக்கொணரும் கட்டுரை அது. ஆனால், இதுவும் பெரும் விவாதத்துக்கும் தாக்குதலுக்கும் உள்ளானது. இந்தக் கட்டுரையில்தான் எம்.எஸ். சுப்புலட்சுமியை டி.எம். கிருஷ்ணா இழிவுபடுத்திவிட்டார் என்று இப்போதும் விமர்சிக்கிறார்கள்.

எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி டி.எம். கிருஷ்ணா எழுதிய இந்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘காலச்சுவடு’ 2016, மே இதழில் ‘எம்.எஸ்-கற்பிதங்களும் தவறான கருத்துக்களும்’ என்ற தலைப்பில் வெளியானது. பின்னர் காலச்சுவடு பதிப்பகம் இதை சிறு நூலாகவும் வெளியிட்டது. இந்நூல் தற்போது விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் சொல்வதுபோல் டி.எம். கிருஷ்ணா இதில் எம்.எஸ். சுப்புலட்சுமியை அவமானப்படுத்தியுள்ளாரா எனத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இதனை வாங்கிப் படிக்கமுடியும்.

சரி, படித்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்நூலை மொழிபெயர்த்தவரும் எழுத்தாளரும் காலச்சுவடு இதழ் ஆசிரியருமான அரவிந்தன் இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவில், “இதைப் படித்துப் பார்த்தால் எம்.எஸ்.ஸுக்கு கிருஷ்ணா மாபெரும் புகழாரம் சூட்டுவதையும் எம்.எஸ்.ஸின் ஆளுமையையும் இசையையும் அணுகிய விதத்திற்காக இசையுலகினரைக் கூர்மையாக விமர்சிப்பதையும் அறியலாம். புகழ், கைத்தட்டல்கள், மக்கள் திரள் ஆகியவற்றை எம்.எஸ். தானாகத் தேடிப் போகவில்லை என்பதையும் கிருஷ்ணா இதில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். எம்.எஸ்.ஸை சுற்றியிருந்தவர்கள் தான் அவரை அங்கே திட்டமிட்ட ரீதியில் தள்ளிக்கொண்டு போனார்கள். எம்.எஸ்.ஸுக்கும் வேறு வழியில்லாமல் போனது. தனக்குச் சமூக அந்தஸ்தையும் பாதுகாப்பையும் தந்தவர்களுக்கு அவர் செய்த கைம்மாறு அது. இதனால், தூய கலைக்கு இழப்பு,  பக்தி இசைக்கு லாபம்” என்கிறார், அரவிந்தன்.

இந்நூல் தொடர்பாக எழுத்தாளர் கே.என். செந்தில் எழுதியுள்ள பதிவில், ‘எம்.எஸ். சுப்புலட்சுமி மதுரையில் சிறுமியாக முதல் பாடலை வெளியிட்டதிலிருந்து சென்னை வந்து புகழின் உச்சியை எட்டி மறையும் வரைக்குமான அவரது இசையுலக வாழ்வை குறுக்கு வெட்டாகவும் விரிவாகவும் ஆழ்ந்த பார்வையுடன் டி.எம். கிருஷ்ணா இதில் எழுதியுள்ளார்.

இதில் கிருஷ்ணாவின் சமநிலை நோக்கு, எம்.எஸ்.ஸின் இசைப் பாண்டித்தியத்தை மெச்சியபடியே தன் விமர்சனத்தையும் அதற்கான காரணங்களையும் முன்வைத்து செல்கிறது. வெளியில் இருக்கும் ஒருவர் எம்.எஸ்.ஸின் இசையை காணும் பார்வைக்கும் வைக்கும் விமர்சனங்களுக்கும், அந்த உலகினுள் இசையின் சூக்குமத்தை அறிந்த சமகால வாய்ப்பாட்டுக் கலைஞரான ஒருவர் மதிப்பிடுவதற்குமான வேறுபாட்டை இந்தக் கட்டுரை நம் முன் நிறுத்துகிறது. அனைத்திற்கும் மேலாக கிருஷ்ணா வைத்திருப்பது எம்.எஸ்-ஸின் மீது மதிப்போடு கூடிய கூர்மையான விமர்சனமே.

புகழ், கைதட்டல்கள், வெகுஜன மக்கள் திரள் இவற்றை நோக்கி செல்லும் ஒரு கலைஞர் மெல்ல தன் கலையிலிருந்து சரிந்து போகிறார் என்பதே அந்த கூர்மையான விமர்சனம். பல சமயங்களில் அது அந்த கலைஞருக்குத் தெரியும், சில சமயங்களில் தெரியாமலும் நிகழும். இசை என்னும் இடத்தில் இலக்கியம், ஓவியம், சிற்பம், நடனம் என பல்வேறுபட்ட கலை வடிவங்களை தன் தேர்வாகக் கொள்பவர்களுக்கு இதைப் பொருத்திப் பார்க்கலாம்” என்கிறார், கே.என். செந்தில்.

எழுத்தாளர் தீபா ஜானகிராமன், “எம்.எஸ். சுப்புலட்சுமி குறித்து டி.எம். கிருஷ்ணா எழுதிய கட்டுரையில் வார்த்தைகளையும் பொருளையும் சரியாகவே கையாண்டிருந்தார். எம்.எஸ்.ஸின் திறன் வீணடிக்கப்பட்டிருந்தது என்பதையே கிருஷ்ணா அந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார். இது எப்படி எம்.எஸ். பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்? அந்தக் கட்டுரைக்கு தேர்ந்த, சரியான  மறுப்பினை யாரும் இதுவரை தந்ததாக எனக்குத் தெரியவில்லை” என்கிறார்.

இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எழுத்தாளர் மருதன், “வீணை தனம்மாள், நாகரத்தினம்மா, டி. பாலசரஸ்வதி, பிருந்தா, முக்தா என்று தொடங்கி எம்.எஸ். சுப்புலட்சுமி வரை நீண்டுசெல்லும் தேவதாசி பாரம்பரியம் கர்நாடக இசையுலகுக்கு அளித்துள்ள கொடை என்பது மகத்தானது. தேவதாசிகள் இல்லாத கர்நாடக இசையைக் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. இருந்தும் இன்று ஏன் இன்று கர்நாடக இசையுலகில் தேவதாசிகளுக்கு இடமில்லை? ஏன் தேவதாசிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்? கர்நாடக இசை ஏன் பிராமணர்களின் இசையாக மாறிக் கிடக்கிறது? தேவதாசி பரம்பரையைச் சேர்ந்த தகுதிவாய்ந்த கலைஞர்கள் பலர் இருந்தும் ஏன் பெருமைக்குரிய மியூசிக் அகாடெமியில் டிசம்பர் மாதக் கச்சேரிகளில் அவர்கள் இடம்பெறுவதில்லை? டி.எம். கிருஷ்ணா எழுப்பும் இந்தக் கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு பதிலாக அவர் மீது அவதூறுகளையே அள்ளி வீசுகிறார்கள்” என்கிறார்.

இதுதான் விஷயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...