No menu items!

தமிழர்கள் இல்லாத இந்திய அணி

தமிழர்கள் இல்லாத இந்திய அணி

மிக நீண்ட காத்திருப்புக்கு பின்னர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியை அறிவிக்க ஐசிசி கெடு கொடுத்த கடைசி நாளான செப்டம்பர் 5-ம் தேதி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்கு காரணம் கே.எல்.ராகுல், பும்ரா மற்றும் ஸ்ரேயஸ் ஐயர்.

இந்திய அணியின் முக்கிய வீரர்களான இவர்கள், சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட காயத்தால் நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்தனர். ஓய்வுக்குப் பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்ற அவர்கள், எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பார்த்த பிறகே உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்க தேர்வுக் குழு திட்டமிட்டிருந்தது.

இதில் பும்ரா ஏற்கெனவே கடந்த மாதம் அயர்லாந்தில் நடந்த தொடரில் தனது உடல் தகுதியை நிரூபித்திருந்தார். ஸ்ரேயஸ் ஐயர் ஆசியக் கோப்பைக்கான போட்டியில் ஆட, கடைசி நாளான இன்று கே.எல்.ராகுல் முழு தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டார். இந்த மூன்று வீர்ர்களுக்காக காத்திருந்த தேர்வுக்குழுவும் இன்று அணியை அறிவித்துள்ளது.

பேட்டிங்கே பலம்

உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு இது வலிமையான அணியா என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இந்தியாவில் உள்ள ஆடுகளங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான பிட்ச்கள் பேட்டிங்குக்கு சாதகமானவை. பந்து வீச்சாளர்களைவிட சிறந்த பேட்ஸ்மேன்களைக் கொண்ட அணிக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதன்படி பார்த்தால் ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகிய வலிமையான 5 பேட்ஸ்மேன்களை இந்திய அணி கொண்டுள்ளது. இவர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பயன்படுத்தப்படலாம்.

முதல் 5 பேட்ஸ்மேன்களைத் தவிர, வேகப்பந்து வீசும் ஆல்ரவுண்டர் ஒருவரையும், சுழற்பந்து வீசும் ஆல்ரவுண்டர் ஒருவரையும் இந்திய அணி போட்டிகளில் பயன்படுத்தும். இந்த இடத்துக்கு ஹர்த்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி பார்த்தால் இந்திய அணி ஒவ்வொரு போட்டிக்கும் 7 வலிமையான பேட்ஸ்மேன்களை களம் இறக்கும். இவர்களைத் தவிர ஷமி, பும்ரா ஆகியோரும் ஓரளவுக்கு ரன்களை அடிக்கக்கூடிய பேட்ஸ்மேன்கள் என்பதால் பேட்டிங்கில் வலுவான அணியாகவே இந்தியா உள்ளது. இந்த பலம் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தரும் என்று தேர்வாளர்கள் நம்புகின்றனர்.

பலவீனம்:

உலகக் கோப்பைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அணியில் பலம் இருக்கும் அதே நேரத்தில் பலவீனங்களும் உள்ளன. இதில் முக்கியமானது அணியில் ஒரு சிறந்த ஆஃப் ஸ்பின்னர் இல்லாதது. இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவை. ஆனால் இப்போது எடுக்கப்பட்டுள்ள அணியில் ஒரு சிறந்த ஆஃப் ஸ்பின்னர் இல்லாதது பெரிய குறை. அஸ்வின் ஒரு சிறந்த ஆஃப் ஸ்பின்னராக இருந்தாலும், அவரை அணியில் சேர்க்காமல் ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல் ஆகியோரை அணியில் சேர்த்துள்ளனர். இந்த மூவரில் அக்‌ஷர் படேலுக்கு பதிலாக அஸ்வினை சேர்த்திருக்கலாம் என்பது பலரது கருத்தாக உள்ளது.

அதேபோல் இந்த அணியில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கும் பஞ்சம் இருக்கிறது. இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவர் மட்டுமே இடதுகை பேட்ஸ்மேன்களாக உள்ளனர். பேட்டிங்கில் இது பாதிப்பை ஏற்படுத்தலாம். டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும், ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் சொதப்பி வருகிறார். அவருக்கு பதிலாக இன்னொரு இடதுகை பேட்ஸ்மேனான திலக் வர்மாவை அணியில் சேர்த்திருக்கலாம் என்பது பலரது கருத்தாக உள்ளது.

தமிழருக்கு இடமில்லை:

உலகக் கோப்பையை பொறுத்தவரை தமிழக வீர்ர்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளனர். 1975 மற்றும் 1979-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் ஆடிய இந்திய அணிக்கு தமிழரான வெங்கட்ராகவன்தான் கேப்டனாக இருந்தார். இதற்கு அடுத்து 1983-ம் ஆண்டில் இந்தியா உலக்க் கோப்பையை வென்றபோது அந்த அணியில் தமிழரான ஸ்ரீகாந்த் முக்கிய பங்காற்றினார். 1987, 1992-ம் ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பையிலும் அவர் முக்கிய பங்காற்றினார்.

1996 ஆண்டிலும் 2003-ம் ஆண்டிலும் மட்டுமே தமிழர்கள் யாரும் ஆடவில்லை. 1999-ம் ஆண்டில் சடகோபன் ரமேஷும், ராபின் சிங்கும் 2007-ம் ஆண்டில் தினேஷ் கார்த்திக்கும் அணியில் இடம்பிடித்திருந்தனர். 2011 முதல் 2015 வரை அஸ்வின் இந்திய அனிக்காக ஆடினார். கடந்த உலகக் கோப்பையில் விஜய் சங்கரும், தினேஷ் கார்த்திக்கும் இந்திய அணியில் இடம்பிடித்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஒரு தமிழர்கூட உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

அணி விவரம்

ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...