No menu items!

இரும்புக் கை மாயாவி சூர்யா!!

இரும்புக் கை மாயாவி சூர்யா!!

குறும்பட இயக்குநராக அறிமுகமாகி, இன்று பெரிய கமர்ஷியல் ஹீரோக்களின் பெரும் படங்களின் இயக்குநராக அடையாளம் காணப்படும் லோகேஷ் கனகராஜ், ஒரு நிகழ்வில் என்னிடம் ‘இரும்புக் கை மாயாவி’ வகையறா கதை ஒன்று உள்ளது என்று சொன்னார்.

அவ்வளவுதான். இப்போது அந்த ’இரும்புக் கை மாயாவி’ கதை உயிர்பெறுமா. அப்படியே அந்த கதை திரைப்படமானால் யார் அதில் ஹீரோ என பல உருட்டல்கள் ஆரம்பமாகி இருக்கின்றன.

’இரும்புக் கை மாயாவி’ என்பது ஒரு காமிக் கதாபாத்திரம். 1962-ல் பிரபலமாக இருந்த இந்த இரும்புக் கை மாயாவி ’The Steel Clan’ என்ற காமிக்ஸ் கதையில் இடம்பெற்று இருந்தது. விபத்து ஒன்றில் கை பறிப்போக, அதற்கு பதிலாக இரும்பினால் ஆன கையைப் பொருத்தி கொள்கிறார் கதாநாயகன். அவனுக்கு சில விசேஷ குணங்கள் உண்டாகின்றன. அதை வைத்து மக்களை எப்படி காப்பாற்றுகிறான் என்று சொல்லும் ஒரு சூப்பர் ஹீரோ கதைதான் ‘த ஸ்டீல் க்ளான்’.

இதனால்தான் லோகேஷ் கனகராஜ் ‘இரும்புக் கை மாயாவி’யைப் போன்ற கதை என்று சொன்னதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. குறும்பட இயக்கும் போது எழுதிய கதை என்பதால், சினிமாவில் கமர்ஷியல் படங்களுக்குதான் வாய்ப்பு கிடைத்ததால் ’இரும்புக் கை மாயாவி’ கதையை கிடப்பில் போட்டுவிட்டார்.

இந்த கதையை படமாக எடுக்கவேண்டுமென்றால், கதை மற்றும் திரைக்கதையில் இப்போது உள்ள ட்ரெண்ட்டுக்கு ஏற்றவகையில் நிறைய மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும் என்கிறது லோகேஷ் கலந்துரையாடல் வட்டாரம்.

இப்போது லோகேஷ் கனகராஜ் சொன்ன அந்த இரும்புக்கை மாயாவி வகையறா கதையில் சூர்யா நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்று கோலிவுட் பக்கம் ஒரு கிசுகிசு கிளம்பியிருக்கிறது.

அப்படியானால் ‘ரோலக்ஸ்’ படம் என்னவாயிற்று என்று எதிர்க்கேள்வி ஒன்றும் எழுகிறது.

விசாரித்த வகையில், லோகேஷூடன் சூர்யா இணைவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ’ரோலக்ஸ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தால், கமலின் ’விக்ரம்’ படத்தின் தொடர்ச்சியாகவே அப்படம் பார்க்கப்படும்.

ஆனால் இரும்புக் கை மாயாவி ஆக நடித்தால், ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் போல் தொடர்ந்து வேறு வேறு களங்களில் படங்களாக தொடர்ந்து எடுக்கமுடியும். பான் – இந்தியா சந்தையையும் வளைத்துப் போட முடியும். இதனால் சூர்யா ரோலக்ஸை விட இந்த சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

‘கங்குவா’ ஏறக்குறைய ஒரு சூப்பர் ஹீரோ படம்தான். அடுத்து ‘இரும்புக் கை மாயாவி’ படம் வந்தால், தற்போது பிரபாஸூக்கு இருக்கும் பான் – இந்திய மார்க்கெட் சூர்யாவுக்கும் சாத்தியம்தான் என்பதால் சூர்யா தரப்பு தீவிரமாக வேலைப் பார்த்து வருகிறது.


கண்ணீர் விட்ட தேசிய விருது பெற்ற நடிகை!

69-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றவர் கீர்த்தி சனோன். ஆலியா பட் உடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றிருக்கிறார். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால், சமீபத்தில் வெளியான ‘ஆதிபுரூஷ்’ படத்தில் சீதையாக நடித்தவர்.

தேசிய விருதை வென்ற பின் இவர் மனம் திறந்து பேசுகையில், தனது கடந்த கால அனுபவம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக கீர்த்தி சனோன் மாடலாகவும் இருந்திருக்கிறார். பல டிவி விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.

அந்தக் காலக்கட்டத்தில், கீர்த்தி சனோனின் முதல் ரேம்ப் ஷோ. மாடல்கள் ஒய்யாரமாக நடந்து போகும் நிகழ்ச்சி அது.

‘’என்னோட முதல் ரேம்ப் ஷோ அது. ஒரு ஃபார்ம் ஹவுஸ்ல நடந்துச்சு. அந்த ரேம்ப் ஷோவுக்கான கோரியோக்ராஃபரும் ஒரு பெண்தான். இதுக்கு முன்னாடி நான் அவரோட சேர்ந்து எந்த ஷோவும் பண்ணினது இல்ல. அந்தப் பெண் ரொம்ப கெடுபிடியான ஆளு.

சொல்லி வைச்ச மாதிரி புல் மேல் ஸ்டைலா நடந்து போகும் போது என்னோட ஹீல்ஸ் மாட்டிகிச்சு. என்னால நடக்க முடியல. இதனால பின்னாடி வந்தவங்களுக்கும் முன்னாடி நடந்து போக முடியல. ஏறக்குறைய 50 மாடல்கள் அந்த ரேம்ப் ஷோவுல கலந்துகிட்டாங்க. அவங்க எல்லோர் முன்னாடியும் என்னை கன்னாபின்னான்னு அந்த கோரியோக்ராஃபர் திட்டிட்டாங்க.

என்னால அந்த வார்த்தைகளை தாங்கிக்க முடியல. எவ்வளவோ முயற்சி பண்ணியும் என் அழுகையைக் கட்டுப்படுத்த முடியல. அங்கேயே உடைஞ்சுப் போயிட்டேன்.
எப்படியோ ரேம்ப் ஷோ முடிச்சு, ஆட்டோவுல ஏறிட்டேன். ஆட்டோவுல போகும் போதும் கூட அழுதுட்டேதான் போனேன். வீட்டுக்குப் போய் அம்மாகிட்ட இதை சொல்லி திரும்பவும் அழுதேன்.

’உனக்கேத்த வேலை இது இல்லன்னு நினைக்கிறேன். இப்படி மனசு உடையுற அளவுக்கு எமோஷனலா இருக்காதே. மனசுல உறுதி இருக்கணும். இந்தமாதிரி சம்பவங்கள் பாதிக்காம இருக்கணும்னா உனக்குள்ள இருக்கிற தன்னம்பிக்கை இன்னும் அதிகம் வேணும்னு அம்மா அன்பா சொன்னாங்க.

அப்புறம் நான் மும்பைக்கு வந்து சேர்ந்தேன். ஜிமாட் பரீட்சைக்காக படிக்க ஆரம்பிச்சேன். அந்த நேரத்துலதான் மாடலிங் பண்ணிகிட்டே சினிமாவுல நடிக்க முயற்சி பண்ணினேன். அப்படிதான் தெலுங்குப் பட வாய்ப்பு கிடைச்சது. முதல் படத்துல மகேஷ் பாபுவுக்கு ஜோடியா நடிச்சேன். அடுத்து இன்னொரு படமும் வந்துச்சு. இந்த ரெண்டு படங்களோட ஷூட்டிங்குக்கு நடுவேதான் ஜிமாட் பரீட்ச்சையை எழுதினேன்.

இன்னிக்கு ஒரு நடிகையாக இருக்கேன். ஆனா என்னோட தன்னம்பிக்கை இப்போ ரொம்ப அதிகமாகி இருக்கு. அதனாலதான் என்னாலயும் எதையும் எதிர்கொள்ள முடியுது’ என்று மனம் திறந்து இருக்கிறார்.

‘பரம் பரம் பரம்சுந்தரி’ பாட்டில் இவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து, இளசுகளெல்லாம் ஆட்டம் போட்டது ஒரு வைரல் கதை.

வெகுசீக்கிரமே இவர் தமிழ் சினிமா பக்கமும் அடியெடுத்து வைக்க இருக்கிறார் என்கிறார்கள்.


100 குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் – விஜய் தேவரகொண்டா

’நீங்கள் எல்லோரும் நான் ஜெயிக்கணும்னு விரும்புறீங்க. என்னோட படங்களெல்லாம் நல்லா ஓடணும்னு ஆசைப்படுறீங்க. என் படம் ஃப்ளாப் ஆனால் நீங்க வருத்தமாறது தெரியுது. ஹிட் ஆனா உங்க வெற்றி மாதிரியே கொண்டாடுறீங்க.

இதுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. அதனால இப்போ நான் ஒரு காரியம் பண்ணப் போறேன். என்னையே உங்களுக்காக, உங்களோட சந்தோஷத்துக்காக அர்ப்பணிக்கிறேன். நீங்க எல்லோரும் சந்தோஷத்துல சிரிக்கிறதை பார்க்க ஆசைப்படுறேன். உங்க எல்லோரையும் தனித்தனியா பார்க்க முடியல. ஆனாலும் ‘குஷி’யை உங்க எல்லோருடனும் பகிர்ந்துக்க விரும்புறேன்.

சந்தோஷத்தைப் பகிர்ந்துக்க, என்னோட சம்பளத்துல இருந்து ஒரு கோடி ரூபாயையும், குஷி படத்தோட லாபத்துல இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையையும் உங்களுக்கு கொடுக்க நினைக்கிறேன். சீக்கிரமே ஒரு நூறு குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அவங்களுக்கு தலா ஒரு லட்சம் கொடுக்கப் போறேன்.

என்னோட சம்பாத்தியத்தையும், சந்தோஷத்தையும் உங்களோடு பகிர்ந்துக்க போறேன். நீங்க எல்லோரும் தேவாரா குடும்பம்’’ என்று பொருளாதாரரீதியாக பிந்தங்கிய 100 குடும்பங்களுக்கு ஒரு லட்சம் என அறிவித்து இருக்கிறார் தெலுங்கு நடிகரான விஜய் தேவரக்கொண்டா.

இந்த ஒரு லட்சம் பொருளாதார ரீதியாக பின் தங்கிய அந்த குடும்பங்களுக்கு நல்ல முறையில் பயன்படும் என்பதால்தான் இப்படியொரு திட்டமாம்.

ஏதாவது ஒரு ரகளை செய்வது விஜய் தேவரகொண்டாவின் வழக்கம். ஆனால் இந்த முறை அர்த்தமுள்ள ஒன்றை செய்து, நெகிழ வைத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...