No menu items!

இந்தியா Vs மாலத்தீவு – என்ன பிரச்சினை?

இந்தியா Vs மாலத்தீவு – என்ன பிரச்சினை?

சில நாட்களுக்கு முன் லட்சத் தீவுகளுக்கு சுற்றுலா சென்ற பிரதமர் மோடி, அங்கு எடுத்த சில புகைப்படங்களை தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட, மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எதனால் அந்தப் பிரச்சினை வந்தது? காலம் காலமாக இரு நாடுகளும் எந்த அளவுக்கு நட்புடன் இருந்துள்ளது என்பதைப் பார்ப்போம்…

இந்தியா செய்த உதவிகள்:

காலம் காலமாக இந்தியாவுடன் நட்பாக இருக்கும் நாடுகளில் ஒன்று மாலத்தீவு. அந்நாடு தன்னை தனிநாடாக அறிவித்தபோது அதற்கு முதலில் அங்கீகாரம் கொடுத்த நாடு இந்தியா. 1988-ம் ஆண்டில் மாலத்தீவு அதிபராக இருந்த மவ்மூன் அப்துல் கயூமுக்கு எதிராக புரட்சி வெடித்தபோது, இரவோடு இரவாக ராணுவ வீர்ர்களை அனுப்பி அங்கு ஜனநாயகத்தை காத்தார் இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. அந்நாடில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோதும், பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோதும் அதற்கு முதல் நாடாக உதவிக்கு வந்தது இந்தியாதான்.

மாலத்தீவுக்கு இந்த உதவிகளை இந்தியா செய்ததற்கு முக்கிய காரணம் அதன் அமைப்பு. தெற்காசியாவில், இந்தியப் பெருங்கடலில் குட்டித் தீவுகளின் சங்கமமாக இருக்கிறது மாலத்தீவு. இந்திய பெருங்கடல் பகுதியில், தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், மற்ற நாடுகள் அங்கு கடற்படையை நிறுத்த விடாமல் தடுக்கவும் இந்தியாவுக்கு மாலத்தீவின் நட்பு முக்கிய தேவையாக இருந்தது. அந்நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அங்கு இந்திய ராணுவம்கூட நிறுத்தப்பட்டிருந்தது.

மாறிய தலைமையும் புதிய சிக்கலும்:

கடந்த ஆண்டு வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் ஆதரவாளராக கருதப்படும் முகமது முய்சு மாலத்தீவின் அதிபரானதும் எல்லாமே தலைகீழாகி விட்டது.

மாலத்தீவின் அதிபராக முகமது முய்சு பதவியேற்ற பிறகு, இந்தியாவுக்கு அடுத்தடுத்து 2 அதிர்ச்சிகளைக் கொடுத்தார். முதலாவதாக அந்நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியப் படைகளை அங்கிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இந்தியாவுடன் போடப்பட்ட ஹைட்ரோகிராஃபிக் சர்வே ஒப்பந்தத்தை ரத்து செய்தார். கடந்த 2019-ம் ஆண்டில், அப்போதைய மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ்ஹின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவுக்கு சென்றபோது கையெழுத்தான ஒப்பந்தம் இது. இதன்படி இந்தியாவும், மாலத்தீவும் இணைந்து அப்பகுதிகளில் உள்ள நீர் பரப்பளவு, பவளப்பாறை, கடல் ஆகியவற்றை ஆய்வு செய்வதாக இருந்தது. இந்த ஒப்பந்தத்தைதான் புதிய மாலத்தீவு அரசு ரத்து செய்தது. இந்த இரண்டு அதிர்ச்சிகளை இந்தியாவுக்கு தந்த பிறகு, மூன்றாவது அதிர்ச்சியாக சீனாவுடன் நெருங்கி உறவாட ஆரம்பித்தது மாலத்தீவு.

பிரதமரின் லட்சத்தீவு பயணம்:

இந்த சூழலில்தான் சில தினங்களுக்கு முன் லட்சத்தீவு பகுதிக்கு சென்றார் பிரதமர் மோடி. அங்கு தான் கடற்கரையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களையும், கடலுக்குள் சென்ற புகைப்படத்தையும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட மோடி, , ‘சாகசப் பயணத்தை விரும்புபவர்கள் கண்டிப்பாக லட்சத்தீவுக்கு வர வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது மாலத்தீவுக்கு வலித்தது. இதற்கு காரணம் சுற்றுலா.

காலம் காலமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கரை சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற நாடாக மாலத்தீவு இருக்கிறது. இந்தியாவில் இருந்தே ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வருகிறார்கள். மாலத்தீவில் உள்ள இந்திய ஹைகமிஷன் அறிக்கையின்படி, 2022-ம் ஆண்டில் 2 லட்சத்து 41 ஆயிரம் பேரும், 2023-ல் சுமார் 2 லட்சம் பேரும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பிரதமர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களால் தங்களின் சுற்றுலா வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்படுமே என்று கவலைப்பட்டது மாலத்தீவு அரசு.

மோடிக்கு எதிரான கருத்து:

இந்த நேரத்தில் மாலத்தீவு அமைச்சர் மரியம் ஷியூனா, பிரதமர் மோடியின் புகைப்படங்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய சில கருத்துகளை தனது சமூக வலைதலப் பக்கத்தில் குறிப்பிட்டார். பின்னர் அவற்றை நீக்கினார். அவரைத் தொடர்ந்து மேலும் 2 அமைச்சர்கள் இந்தியாவையும் மோடியையும் விமர்சிக்க, சிக்கல் பெரிதானது. மாலத்தீவை புறக்கணிப்போம் என்ற வார்த்தைகள் இந்திய சமூக வலைதளப் பக்கங்களில் டிரெண்ட் ஆனது.

இதன் தொடர்ச்சியாக நேற்று ஒரே நாளில் மாலத்தீவு ஓட்டல்களில் 7,500 முன்பதிவுகளை இந்தியர்கள் ரத்து செய்துள்ளனர். மாலத்தீவு செல்லும் விமானங்களில் 2,300 டிக்கெட்டுகளையும் இந்திய சுற்றுலா பயணிகள் ரத்து செய்தனர். அதோடு மாலத்தீவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரபல நடிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவுடனான மோதலால் தங்களுக்கு சேதாரம் அதிகமாவதை உணர்ந்த மாலத்தீவு அரசு, நம் நாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்த 3 அமைச்சர்களை தற்காலிகமாக நீக்கியுள்ளது.

இதுகுறித்து மாலத்தீவு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்டை நாடான இந்தியாவை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியான பதிவு குறித்து வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தில் பதவிகளை வகித்து சமூக ஊடகங்களில் இதுபோன்ற பதிவுகளை செய்தவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.” என்று கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே இனியாவது பிரச்சினைகள் ஓய்கிறதா என்று பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...