ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்து ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் மறுஉருவாக்கம்தான் இந்த ‘வீட்ல விசேஷம்’.
பிரபல ரேடியோ ஜாக்கி பாலாஜியும், என்.ஜே சரவணனும் இணைந்து இயக்கி இருக்கும் இப்படம் 129.42 நிமிடங்கள் நம்மை கலகலப்பாக இருக்கவும், சென்டிமென்ட்டில் மனம் இளகவும் வைக்கிறது.
கல்யாணத்திற்கு ஹீரோ தயாராக இருக்க, ஹீரோவின் அம்மா கருத்தரித்ததால் என்ன நடக்கிறது என்பதே ‘வீட்ல விசேஷம்’.
பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு திரைப்படத்தை மறு உருவாக்கம் செய்வது என்பது கணவன் தன் மனைவியை கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பெரும் செலவு செய்து மீண்டும் திருமணம் செய்து கொள்வது போலதான். காஸ்ட்யூம் மாறலாம். கல்யாணத்தில் கலந்து கொள்பவர்கள் முகம் மாறலாம். கல்யாண விருந்து சுவை மாறலாம். ஆனால் கணவன் – மனைவி விஷயத்தில் ஏதேனும் மாறினால் என்ன கலவரம் நடக்குமோ அதே போல் கதை திரைக்கதையில் கையை வைத்தால் விமர்சன கலவரங்களும் கிளம்பும்.
இந்த விஷயத்தில் ஆர்.ஜே. பாலாஜி ரொம்பவே உஷார். தனது கிண்டல் வகையறாவை ஒரங்கட்டி வைத்துவிட்டார். டைட்டில் கார்டில் கதை மறுஉருவாக்கம் ’ஆர்.ஜே. பாலாஜி கதை இலாகா’ என்று போட்டிருப்பதற்கான பலன் படம் பார்க்கும் போது நன்றாகவே தெரிகிறது.
சத்யராஜ், ஊர்வசி, கேபிஏசி. லலிதா இந்த மூன்று பேரின் நடிப்புதான் ’படத்துல விசேஷம்’ நடிப்பில் மூன்று பேரும் வெளுத்து கட்டியிருக்கிறார்கள்.
ஆர்.ஜே. பாலாஜி, அபர்ணா பாலமுரளி காதல், மோதலில் அதிகம் அலட்டாமல் நடித்திருக்கிறார்கள். காமெடிக்கு ’குக் வித் கோமாளி’ புகழ் இரண்டு காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
படத்தின் மிகப் பெரிய பலம் வசனம். திரையரங்கில் சிரிப்பு சத்தத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது.
சொல் பேச்சு கேட்காத ஆர்.ஜே. பாலாஜியின் தம்பியின் பெயர் அனிரூத். ஒரு காட்சியில் ‘அனிரூத்னு பேரு வைச்சாலே இப்படிதான்’ என்று லலிதா கலாய்ப்பது, ’முடிவெட்டுடா’ என்று வழுக்கை தலையுடன் இருக்கும் சத்யராஜ் சொல்லும் போது, ’உங்களுக்கு பொறாமை’ என தம்பி பதில் கமெண்ட் அடிப்பது, ஊர்வசி கர்ப்பமாகி இருப்பதை தங்களது மகன்களிடம் சத்யராஜ் சொல்ல முயற்சிக்கும் போது, பக்கத்து வீட்டு குழந்தை சத்யராஜ் மீது தண்ணீர் துப்பாக்கியை வைத்து விளையாட, ‘தாத்தாவிடம் சாரி கேளு’ என சொல்லும் போது ’என்னது தாத்தாவா’ என சத்யராஜ் கடுப்பாவது, அம்மா கர்ப்பம் என்றதும் ஷாக் ஆகும் ஆர். ஜே. பாலாஜி தம்பியிடம், ‘தனி ரூம் வேணும் தனி ரூம் வேணும்னு கேட்டீயே.. அப்பா அம்மா நடுவுல போய் படுத்தா என்ன’ என்று கேட்பது, சத்யராஜின் அம்மா, ‘அம்மாகிட்ட பேச 5 நிமிஷம் இல்ல. ஆனா இதுக்கு மட்டும் எப்படி டைம் கிடைச்சது’ என்று கேட்பது என காமெடி சரவெடி களைக் கட்டுகிறது.
‘அம்பது வயசுல பிள்ளைப் பெத்தா ஆண் சிங்கம். ஆனா பொம்பள நான் அசிங்கமா’ என ஊர்வசி கோபத்தில் கொந்தளிக்கும் காட்சி, ‘நீங்க பணக்காரங்க. வீட்டுக்குள்ளேயே மரம் வளர்க்கிறீங்க’ என அபர்ணா பாலமுரளி அம்மா பவித்ரா லோகேஷிடம் ஆர். ஜே. பாலாஜி சொல்லும் காட்சியில் வசனம் நெற்றிப் பொட்டில் அடிக்கிறது.
ஆர்.ஜே. பாலாஜியின் அப்பா அம்மா வீட்டில் இல்லாத போது அபர்ணா பாலமுரளி, வரும் காட்சி மூன்று நிமிட கலாட்டா பேக்கேஜ்.
ஊர்வசி பிரசவத்திற்காக ஆபரேஷன் தியேட்டரில் இருக்கும் போது அடிக்கும் லூட்டி காமெடியாக இருந்தாலும், ஒரு பெண் பிரசவத்தின் போது எதிர்கொள்ளும் வலியை உணரச் செய்கிறது.
ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் கொடுத்த வேலையை செய்தால் போதும் என்பது போல இருக்கிறது. பின்னணி இசை சில இடங்களில் காமெடிக்கு கைக்கொடுக்கிறது.
ஒரிஜினல் ’பதாய் ஹோ’ படத்துடன் ஒப்பிடும் போது, கதாபாத்திரங்களுக்கு இடையே இருக்கும் நெருக்கம் இதில் கொஞ்சம் குறைவே. ஆனாலும் கலகலப்பாக பொழுதைக் கழிக்க ’வீட்ல விசேஷம்’ ஓகே தான்.