No menu items!

எரியும் வடக்கு – என்ன காரணம்?

எரியும் வடக்கு – என்ன காரணம்?

ராணுவத்துக்கு புதிய ஆள் சேர்ப்பு முறையை அறித்த மறுநாளே பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா என பல வட மாநிலங்களில் போராட்டங்கள், கலவரங்கள். ரயில்கள் தீ வைக்கப்படுகின்றன. துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. போராட்டங்கள் இன்றும் தொடர்கின்றன. செகந்திராபாத்தில் ரயில்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன.

ராணுவ வேலை வாய்ப்புக்கு அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு இரண்டு நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. அதன்படி ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் நான்கு வருட ஒப்பந்தத்தில் பணி அமர்த்தப்படுவர். அவர்களில் 25 சதவீதத்தினருக்கு மட்டும் பணி நீட்டிக்கப்படும் மற்ற 75 சதவீதத்தினர் இழப்பீட்டுத் தொகையுடன் விடுவிக்கப்படுவர். இந்தத் திட்டத்தைக் குறித்து வாவ் தமிழா இணையத்தில் இரு நாள்களுக்கு முன்பு விரிவான கட்டுரை வெளியிடப்பட்டது.

இந்தத் திட்டத்தை வரவேற்று கருத்துக்கள் வந்தாலும் பலர் இந்தத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டினர். ஆனால் இந்தத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவம் இளமையாக மாறும் என்றும் ஊதியம் மற்றும் ஓய்வுதிய செலவு ராணுவத்துக்கு குறையும் என்றும் அரசு தரப்பில் சொல்லப்பட்டது. செலவு குறைந்தால் அந்தப் பணத்தைக் கொண்டு ராணுவத்தை மேலும் பலமாக்க, நவீனமாக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

75 சதவீதத்தினரை நான்கு வருடம் பயன்படுத்திவிட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டால் அவர்கள் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வி விமர்சகர்களால் எழுப்பப்பட்டது. ராணுவப் பயிற்சி பெற்ற பல்லாயிரக்காணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பது ஆபத்தானது என்றும் சுட்டிக் காட்டினர்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவுக்கு இரண்டு பக்கங்களில் இருந்து அச்சுறுத்தல் நிலவும் சூழலில் அக்னி பாதை திட்டமானது நமது படைகளின் செயல்திறனை குறைக்கும். ராணுவத்தின் மாண்பு, பாரம்பரியம், வீரம் மற்றும் ஒழுக்கத்தை சமரசம் செய்யும் முயற்சிகளை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இப்போது இந்தப் புதிய திட்டம் வட மாநிலங்கள் பலவற்றிலும் ஆந்திரா, தெலங்கானா போன்ற பகுதிகளிலும் கலவரத்துக்கு காரணமாகியிருக்கிறது. அக்னிபாத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

பழைய ராணுவ ஆள் சேர்ப்பு முறையில் 16.5 வயதிலிருந்து 21 வயதுக்குட்பட்டவர்கள் ராணுவ பணிக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு பணி கிடைத்தால் 15 வருடங்கள் ராணுவக்தில் பணியாற்றலாம். ஓய்வூதியம் உண்டு. ஆனால் அக்னிபாத் என்ற புதிய முறையில் 17.5 வயதிலிருந்து 21 வயதுக்குட்பட்டவர்கள்தாம் விண்ணப்பிக்க இயலும். நான்கு வருடங்கள்தாம் பணி வாய்ப்பு. நான்கு வருடங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டால் ஓய்வூதியம் கிடையாது.

”நான்கு வருடத்துக்காக ராணுவத்தில் சேர முடியுமா? நீண்ட கால பணி ஒப்பந்தம் தேவை’ என்கிறார் ஒரு போராட்டக்காரர்.

மற்றொருவர். ‘ நான்கு வருட ராணுவப் பணிக்குப் பிறகு எங்கள் வாழ்க்கை என்னாவது? நாங்கள் எங்கே போய் வேலை தேடுவது? ஓய்வுப் பெற்ற ராணுவத்தினருக்கு எங்கு வேலை கிடைக்கும்? நிச்சயமற்ற சூழலில் எங்களை தள்ளுகிறது இந்த திட்டம்’ என்று கூறுகிறார்.

முன்னாள் இந்திய ராணுவத் தளபதி விபி மாலிக் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்தப் பேட்டியில், “ராணுவம் என்பது தன்னார்வப் படை. அது ஒன்றும் நலவாரியம் அல்ல. அதில் இருப்பவர்கள் அனைவரும் தேசத்துக்காக போராடும் சிறந்த வீரர்களாக இருக்க வேண்டும். தேசத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டு ரயில்கள், பேருந்துகளை எரித்து சேதத்தை ஏற்படுத்துபவர்கள் ராணுவத்தில் சேர தகுதியற்றவர்களாவர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தங்களுக்கு வேலை கிடைக்காது என்ற கருதி இன்று பேருந்துகளையும் ரயில்களையும் எரிக்கும் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து நான்கு வருடங்கள் கழித்து விடுவிக்கப்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியும் இப்போது எழுகிறது.

போராட்டங்கள் தீவிரமடைந்திருப்பதால் மத்திய அரசு இறங்கி வந்திருக்கிறது. அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

‘அக்னி பாதை’ திட்டத்தின்கீழ் முப்படைகளிலும் 4 ஆண்டு சேவையில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு, 3 ஆண்டு பட்டப்படிப்பை இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் (இக்னோ) உருவாக்க உள்ளது. இதற்கு ஏஐசிடிஇ, என்சிவிஇடி மற்றும் யுஜிசி அங்கீகாரமும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர்களின் சிறந்த எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அக்னி பாதை திட்டத்தை அறிமுகம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து 4 ஆண்டு பணியை முடிக்கும் அக்னி வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் சேர முன்னுரிமை வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

ஆனால் இந்த அறிவிப்புகள் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தவில்லை. இன்றும் போராட்டங்கள் தீவிரமாய் தொடர்கிறது.

கடந்த வருடம் மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற்றது போல் இந்த அக்னிபாத் திட்டத்தையும் திரும்பப் பெறும் சூழலுக்கு மத்திய அரசு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...