No menu items!

கொஞ்சம் கேளுங்கள்… சேரவாரும் எதிர்க்கட்சியினரே!

கொஞ்சம் கேளுங்கள்… சேரவாரும் எதிர்க்கட்சியினரே!

பீகார் தலைநகர் பாட்னாவில் 15 எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று கூடினார்கள்.

இதோ வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியை ஒன்றாக சேர்ந்து எதிர்க்க திட்டம். அதற்காக மீண்டும் மீண்டும் கூடி பேசுவார்கள்.

இரண்டுமுறை ஏகபோக ஆட்சியில் அமர்ந்து எல்லாவிதத்திலும் பலம் சேர்த்து கொண்டுவிட்ட பிஜேபியை எதிர்ப்பது ஒன்றும் சாதாரணமானது அல்ல. மோடியின் வண்ணமயமான பர்சனாலிடி வேறு! பக்கத்தில் மிரட்டலான அமித்ஷா!

இதே பாட்னாவில்தான் எமர்ஜென்சி ஆயுதத்துடன் நின்ற பிரதமர் இந்திராவுக்கு எதிராக, சர்வோதய இயக்க ஜெயபிரகாஷ் நாராயணன் – கிழவர்தான் – எழுந்து நின்றார் வீராவேசமாக! அதனால்தான் இப்போது எதிர்க்கட்சியினர் அங்கே கூடினார்கள்.

இந்திரா காந்தியின் எமர்ஜென்சி அடக்குமுறையை, அவரை துர்க்கா மாதாவாக வர்ணித்து ஓவியம் தீட்டினார் எம்.எப்.உசைன். மோடியைவிட அன்று ஆதரவு இருப்பதாக வானாளவிய காட்சிகள்! நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்கூட இந்திராவின் எமர்ஜென்சியை எதிர்த்து நின்றார்.

“அன்று திரண்ட எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வேறு மாதிரி. ஜனநாயக பாதையைவிட்டு இந்தியாவை வேறு திசை திருப்ப வெளிப்படையான முயற்சி அப்போது. ஆகவே, மக்கள் எளிதாக புரிந்து கொண்டு திரண்டார்கள் எதிர்க்கட்சியை ஆதரிக்க. இன்று எல்லாமே ஜனநாயக முறையில் நடக்கிறது! வாய்ப்பூட்டுக்கூட ஜனநாயக முறையில்” என்றார் எப்போதும் அருகில் இருக்கும் மூத்த இடதுசாரி அரசியல் தலைவர். ஆனால் இவருக்கு விவாதங்கள் பிடிக்கும்.

“ஓநாய்கள் கூட்டம் என்று இந்த எதிர்க்கட்சி சந்திப்பை பிஜேபி தலைவர் ஒருவர் வர்ணித்தார். போட்டோஷூட், வாரிசு அரசியலை வளர்க்க திட்டம் என்றெல்லாம் மோடி தாக்கினார். அன்று இந்திரா எமர்ஜென்சிக்கு எதிரான கூட்டணியை ‘கிச்சடி’ என்றார். பல காய்கறிகளை சேர்த்து சமைப்பது. நம் உப்புமா போல வடக்கே கிச்சடி என்றால் அலர்ஜி உண்டு” என்றார் மூத்த தலைவர்.

பிஜேபி ஒன்றை மறந்துவிட்டது. அன்று எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்து தெறித்து விழுந்து வளர்ந்து புது உருவம் பெற்றதுதானே பிஜேபி. ஒருவேளை இன்றைய எதிர்க்கட்சி கூட்டணியால் காலப்போக்கில் பிஜேபிக்கு எதிரான கொள்கையுடன் ஒரு புதிய கட்சி உதித்தால் நல்லதுதானே!

பொதுவுடமை கொள்கையின் சாந்த குணமாக சோஷலிஸ கருத்துகளுடன் ஆட்சி புரிந்தார் பிரதமர் நேரு. அதற்கு நேர்மாறாக ராஜாஜி சுதந்திரா கட்சியை ஆரம்பித்தார். இப்போது பின்பற்றப்படும் பொருளாதார கொள்கைகளை அன்றே சொன்னது சுதந்திரா கட்சி.

தீர்க்கதரிசியான ராஜாஜியின் எண்ணம் என்ன? இரண்டே கட்சிகள் நேர்மாறான கருத்துகளுடன் மக்கள் முன்னே இருக்க வேண்டும் என்பதே. இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ், தொழிற்கட்சி என்று இருக்கிறது. உலக நாடுகளில் பெரும்பாலும் இரண்டு கட்சிகளே மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன.

பிரதமர் நேரு இருக்கும்போதே இப்படி ஒரு மாற்று கட்சியை உருவாக்கி வளர்க்க நினைத்தார் ராஜாஜி. சுதந்திரா கட்சி ஒரு காலகட்டத்தில் பலம் பெற்றதாக இருந்தது உண்மை.

நேரு மறைந்தபோது ராஜாஜி “நீங்கள் பிரதமராக இருப்பதால்தான் நான் மாற்று சிந்தனையுடன் கூடிய கட்சியை ஆரம்பித்தேன். நீங்கள் எதிர்க்கட்சி கருத்தை காது கொடுத்து கேட்பீர்கள் என்ற தைரியத்தில்” – இவ்வாறு கூறினார். அடுத்த சில வருடங்களில் சுதந்திரா கட்சி புஸ்வானம் ஆகிவிட்டது.

“எமர்ஜென்சிக்கு பிறகு ஜனதாவாக உருவான கட்சிகளிடமிருந்து பிரிந்து பிஜேபி உருவானது நல்லதே. இப்போது அதற்கு மாற்றாக ஒரு பலம் வாய்ந்த ஒற்றுமைக்குரல் ஒலித்தே ஆகவேண்டிய நேரம். மதச்சார்பின்மை, சோஷலிஸம், தொழிற்சங்க அமைப்புகளின் தேவை – இவற்றை மீண்டும் வலியுறுத்தும் மக்கள் குரலாக அது அமைய வேண்டும். ஒரே மத்திய ஆட்சி என்ற பிஜேபியின் முடிவுக்கு எதிராக கூட்டாட்சியை ஆதரிக்கும் குரலாக இருக்க வேண்டும். தெற்கு மதிக்கப்பட்டு இந்தி திணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஆங்கிலம் நீடிக்க வேண்டும். இவை எல்லாம் அதன் வழிமுறையாக இருக்க வேண்டும்” என்று சொன்னார் மூத்த அரசியல்வாதி.

“இந்த கூட்டணிக்கு யார் தலைவர்? ராகுல் காந்தியா மம்தாவா என்பதெல்லாம் ஒற்றமை உறுதியானால் தானாக தெரிந்துவிடும்” என்றார் அவர். “இப்போது உருவாகும் இந்த கூட்டணியில் இருந்து இந்தியாவில் இரண்டு கட்சிகள் என்ற நிலை உருவானால் பிரமாதம்” என்றார் அவர்.

இடதுசாரி தலைவரானாலும் அவர் புராணங்களில் அதாரிட்டி. ஒரு கதை கூறினார். தெரிந்த கதை – தெரியாத செய்தி! “இரணிய கசிபுவை வீழ்த்துவது எப்படி என்பது பற்றி ஆராய சிவன், விஷ்ணு, பிரம்மா மூன்று கடவுள்களும் பலமுறை கூடி பேசினார்கள். திருகோஷ்டியூரில் அப்படி சந்தித்ததாக ஒரு கதை உண்டு. பிரகலாதனுக்கு ஆதரவாக தூணிலும், துரும்பிலும் ஒளிந்து தயாராக காத்திருந்தார் பகவான். ‘எங்கே உன் நாராயணன்’ என்று இரணியகசிபு கேட்டால், பிரகலாதன் சுட்டிக்காட்டும் இடத்திலிருந்து வெளிப்பட தயாராக இருக்கிறார். இரணிய கசிபு பெற்ற வரத்தை முறியடிக்க மனித உருவம் ப்ளஸ் மிருக உருவத்தோடு காத்திருந்தார். ஆனால் எந்த முகம் என்பதை கடவுள் முடிவு செய்யவில்லை. ‘உன் நாராயணன் வரட்டும்! யானையின் பிடறியில் அறைந்து வீழ்த்தும் சிங்கத்தைப்போல நான் பாய்வேன்’ என்கிறார் இரணியன். அப்போதுதான் அதை காதில் கேட்ட கடவுள் சிங்க முகத்தை ஏற்பது என்று முடிவு செய்கிறார்” என்ற கதையை கூறினார் நம் அரசியல் தலைவர்.

எதற்கு கூறினார்!

எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவானால் யார் தலைமை என்பது அந்த சூழ்நிலையே அமைத்து தரும் என்றார்.

அப்படி நடந்தால் – சிறப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...