இப்போது தமிழ் சினிமாவின் Talk குட்நைட் திரைப்படம்தான். அதில் வரும் குறட்டை பிரச்சினை ஒவ்வொரு வீட்டிலும் இருப்பது. காமெடியாக சொன்னாலும் குறட்டை காமெடியான சங்கதி இல்லை. அதிக குறட்டை வந்தால் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உலக அளவில் ஆண்களில் சுமார் 40 சதவீதம் பேரும், பெண்களில் 30 சதவீதம் பேரும் தூங்கும்போது குறட்டை விடுகிறார்கள்.
குறட்டையை இந்தியர்கள் நல்ல விஷயமாக பார்க்கிறார்கள். நன்றாக தூங்குபவர்கள்தாம் குறட்டை விடுகிறார்கள் என்ற கருத்து இந்தியர்களுக்கு இருக்கிறது. இது ரெஸ்மெட் (ResMed) என்ற நிறுவனம் எடுத்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறட்டையின்போது அதிகமாக 50 முதல் 100 டெசிபல் வரை சத்தம் வர வாய்ப்புகள் இருக்கிறது.
உலகிலேயே அதிக ஒலிகொண்ட குறட்டை, 111.68 டெசிபலாக பதிவாகி உள்ளது. இது கிட்டத்தட்ட விமானம் பறக்கும் சத்தத்துக்கு நிகரானது. இங்கிலாந்தின் ஜென்னி சாப்மேன் என்பவர்தான் இந்த விமான குறட்டையைவிட்டவர்.
ஒருவர் குறட்டை விட்டு தூங்குவதால், அவருக்கு பக்கத்தில் தூங்குபவர் தினசரி சுமார் 1 மணிநேர தூக்கத்தை இழக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
குறட்டை விட்டு தூங்குபவர்களுக்கு டைப் 2 டயாபடிஸ், பக்கவாதம், ஒபிசிட்டி ஆகியவை வர வாய்ப்புகள் அதிகம்.
மல்லாந்து படுப்பதைவிட பக்கவாட்டில் திரும்பிப் படுத்தால் குறட்டை விடுவது குறையும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மெனோபாஸ் காலத்துக்கு பிறகு சில பெண்களுக்கு குறட்டை விடும் பழக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
மருத்துவ சிகிச்சை மூலம் குறட்டையை கட்டுப்படுத்தலாம் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.