No menu items!

கர்நாடகா – Modi Magic தோற்றது ஏன்?

கர்நாடகா – Modi Magic தோற்றது ஏன்?

கர்நாடக மாநில தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றியை வசமாக்கி இருக்கிறது காங்கிரஸ் கட்சி. தென் மாநிலங்களில் தங்கள் வசம் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகத்தை இழந்திருக்கிறது பாஜக.

கர்நாடகாவில் பாஜகவின் தோல்விக்கு காரணமான 5 விஷயங்களைப் பார்ப்போம்…

லிங்காயத் சமூக வாக்குகள்:

கர்நாடக மாநில தேர்தல்களில் கட்சிகளின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் மிகப்பெரிய சமூகமாக லிங்காயத் சமூகம் இருக்கிறது. கர்நாடக மாநில மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் 100 தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி மிக்கவர்களாக லிங்காயத் சமூகத்தினர் கருதப்படுகிறார்கள்.

கடந்த 2018-ல் நடந்த தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பா முன்னிறுத்தப்பட்டதால் அக்கட்சிக்கு லிங்காயத் சமூகத்தின் முழு ஆதரவு கிடைத்தது. ஆனால் இப்போது அக்கட்சியில் எடியூரப்பாவுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை. இது லிங்காயத் சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது அதே நேரத்தில் லிங்காயத் சமூகத்தினரிடையே எடியூரப்பாவுக்கு அடுத்து அதிக செல்வாக்கு பெற்றவரான ஜெகதீஷ் ஷட்டர், கடைசி நேரத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது பாஜகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தியது.

லிங்காயத் சமூகத்தின் பல மடங்கள் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்ததும் பாஜகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கியது.

அமுல் vs நந்தினி:

தமிழ்நாட்டில் ஆவின் எப்படியோ, அப்படித்தான் கர்நாடக மாநிலத்தில் நந்தினி பால். அம்மாநில மக்களின் வாழ்க்கையோடு கலந்துவிட்ட அரசின் பால் நிறுவனத்தின் (கர்நாடகா மில்க் கார்ப்பரேஷன்) பிராண்ட் இது. கர்நாடகாவில் லிங்காயத்களுக்கு அடுத்ததாக அதிக வாக்குகளைக் கொண்ட ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கர்நாடகா மில்க் கார்ப்பரேஷனுக்கு தங்கள் பாலை விற்று வந்தனர். மைசூரைச் சுற்றியுள்ள விவசாயிகளின் மிக முக்கியமான வாழ்வாதாரமாக இது இருந்தது.

இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன் நந்தினி பாலுக்கு பதிலாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனத்தின் பாலை கர்நாடகா மில்க் கார்ப்பரேஷன் சப்ளை செய்யப் போவதாக செய்திகள் கசிந்தன. இது கர்நாடக மாநில பால் உற்பத்தியாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சியும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும் பெரிய அளவில் பிரச்சாரம் செய்தன.

இதற்கு பாஜக அரசும் சரியான பதிலைச் சொல்லாததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்று கருதிய ஒக்கலிக சமூக மக்கள் பாஜகவுக்கு எதிராக திரும்பினர்.

ஊழல் குற்றச்சாட்டுகள்:

பாஜகவின் ஆட்சிக்காலத்தில் ஊழல் மலிந்துள்ளதாக மிகப்பெரிய அளவில் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. ’40 சதவீத ஊழல் அரசு’ (“40% government), ‘பே சிஎம்’ (PayCM) ஆகிய பெயர்களில் எதிர்க்கட்சிகள் நடத்திய பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எடுபட, பாஜக அரசு ஊழல் அரசு என்ற பிம்பம் மக்களிடையே ஏற்பட்டது.

இதனால் பாஜக ஊழலுக்கு எதிரான கட்சி என்ற பிம்பம் மக்களிடையே உடைந்தது. அக்கட்சிக்கு இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இட ஒதுக்கீடு:

லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமூகத்தினரை சமாதானப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 4 சதவீதத்தைக் கூட்டியது பாஜக. ஏற்கெனவே இஸ்லாமியர்களுக்கு இருந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டில் கை வைத்துதான் இந்த இட ஒதுக்கீட்டை செய்தது. கர்நாடகாவில் உள்ள 12 சதவீத இஸ்லாமிய ஓட்டுகள் இதனால் காங்கிரஸ் பக்கம் கரை ஒதுங்கியது.

அதேநேரத்தில் தேர்தலுக்காக கடைசி நேரத்தில் பாஜக அறிவித்த இட ஒதுக்கீட்டை லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும் நம்பவில்லை. இது அக்கட்சிக்கு பலத்த அடியைக் கொடுத்தது.

தேர்தல் அறிக்கை:

கர்நாடகத்தில் பாஜகவின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகப்பெரிய அளவில் காரணமாக இருந்தது. 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித் தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, மாதம் 10 கிலோ இலவச அரிசி ஆகியவற்றை வழங்குவதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருந்தது பல வாக்காளர்களைக் கவர்ந்தது.

பாஜகவும் இதேபோன்ற வாக்குறுதிகளைக் கொடுத்தாலும், ‘இதுவரைக்கும் தராதவங்க இனிமேலே கொடுக்கப் போறாங்க’ என்று மக்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...