No menu items!

திரைப்படக் கல்லூரி துரத்தியது பிரான்ஸில் விருது கிடைத்தது – யார் இந்த பாயல் கபாடியா?

திரைப்படக் கல்லூரி துரத்தியது பிரான்ஸில் விருது கிடைத்தது – யார் இந்த பாயல் கபாடியா?

உலகளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் ஆஸ்கருக்கு அடுத்ததாக மதிக்கப்படுவது, கேன்ஸ் விருது. ஆஸ்கரை விட கேன்ஸை பெரிதாக மதிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆஸ்கர் – திரைப்பட ரசிகர்கள் கொண்டாடும் விருது என்றால், கேன்ஸ் – திரைக்கலைஞர்களே கொண்டாடும் விருது. இத்தகைய விருதை இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில், இந்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் ‘ஆல் வீ இமேஜின் ஆஸ் லைட்’ படம் பெற்றுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில், வேறெந்த இந்திய திரைப்படமும் கேன்ஸ் விழாவின் முக்கியப் பிரிவில் திரையிடப்பட்டு விருதை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த பாயல் கபாடியா?

பாயல் கபாடியா மும்பையில் பிறந்தவர். கலைஞர் நளினி மலானியின் மகள். ஆந்திராவில் உள்ள ரிஷி வேலி பள்ளியில் பயின்றார். பின்னர் மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பொருளாதார பட்டம் பெற்றார். சோபியா கல்லூரியில் ஓராண்டு முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். தொடர்ந்து திரைப்பட இயக்கத்தில் இருந்த ஆர்வம் காரணமாக புனேவில் உள்ள திரைப்படக் கல்லூரிக்கு (FTTI) சென்றார்.

கடந்த 2022இல் வெளியான ‘எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்’ பாயல் கபாடியாவின் முதல் ஆவணப்படம். புனே திரைப்படக் கல்லூரியின் மாணவர்களின் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டதுதான். 2015இல் நடந்த இந்தப் போராட்டங்களின் போது, திரைப்பட கல்லூரியின் மாணவராக இருந்தார் பாயல் கபாடியா. அப்போது கல்லூரி நிர்வாகம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. நான்கு மாதங்களாக நடந்த இந்தப் போராட்டங்களில் பாயல் கபாடியா ஒரு முக்கிய பங்கேற்பாளராகவும் இருந்தார். இதனால் அவருக்கான உதவித் தொகையை தர கல்லூரி நிர்வாகம் மறுத்தது.

அப்போது இந்தப் போராட்டங்கள் குறித்துப் பேசிய பாயல் கபாடியா, “போராட்டங்களுக்கு மாணவர்கள் பொறுப்பேற்க முடியாது. ஏனென்றால் இதை வேடிக்கைக்காக அவர்கள் செய்யவில்லை. அதற்கு கடின உழைப்பும் மன உறுதியும் தேவை,” என்று கூறியிருந்தார்.

‘எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்’ ஆவணப்படம் 2021இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘கோல்டன் ஐ’ விருதை வென்றது.

இதுதவிர ‘ஆஃப்டர்னூன் க்ளவுட்ஸ்’, ‘தி லாஸ்ட் மேங்கோ பிஃபோர் தி மான்சூன்’, ‘வாட் இஸ் தி சம்மர் சேயிங்’ போன்ற படங்களையும் பாயல் கபாடியா உருவாக்கியுள்ளார்.

அதன்பின்னர் இயக்கியதுதான் ‘ஆல் வீ இமேஜின் ஆஸ் லைட்’. கேரளாவில் இருந்து வந்து மும்பையில் வசிக்கும் செவிலியர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது இந்த திரைப்படம்.

இந்த படம் பற்றி பாயல் கபாடியா கூறுகையில், “இந்தப் படம் மூன்று வித்தியாசமான பெண்களுடைய நட்பின் கதை. மேலும் பெரும்பாலும் பெண்கள் ஒருவருக்கொருவர் எதிராக இருப்பதைத்தான் பார்க்கிறோம். நமது சமூகம் இப்படி வடிவமைக்கப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால், என்னைப் பொறுத்தவரை நட்பு என்பது மிக முக்கியமான உறவு. நட்பு மூலம் ஒருவருக்கொருவர் வலுவான ஒற்றுமை, சம உரிமை மற்றும் பச்சாதாபத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.

ஒரு படம் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான பணி. இந்தப் படத்தைத் தயாரிக்க எனக்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டது’ என்றார்.

இந்நிலையில், ‘ஆல் வீ இமேஜின் ஆஸ் லைட்‘ கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது. “கேன்ஸ் திரைப்பட விழா வரை இந்தப் படம் செல்லும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தச் செய்தி குறித்துத் தெரிந்ததும், மிகவும் உற்சாகமாகவும் பதற்றமாகவும் உணர்ந்தேன்” என்றார் அப்போது பாயல்.

அவரை மேலும் உற்சாகமாக்கும் விதமாக, கேன்ஸ் திரைப்பட விழாவில் பாயல் கபாடியாவின் படம் முடிந்ததும், பார்வையாளர்கள் 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டினர். அப்போதே இந்த விருது அறிவிப்பு உறுதியாகிவிட்டது.

‘ஆல் வீ இமேஜின் ஆஸ் லைட்’ கேன்ஸின் இரண்டாவது பெரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றுள்ளது. விருது வழங்கும் விழாவின்போது பாயல் கபாடியா படத்தின் நடிகைகளை மேடைக்கு அழைத்து, “இவர்கள் இல்லாமல் இந்தப் படம் உருவாகியிருக்குமா என்று தெரியவில்லை, இந்த மூன்று பெண்களும் எனக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறார்கள். ஒரு குடும்பம் போல இருந்து, இந்தப் படத்தை தங்கள் விருப்பப்படி உருவாக்கினார்கள்” என்றார்.

இந்த விருதின் மூலம், 38 வயதான பாயல் கபாடியா, பிரான்சிஸ் ஃபோர்ட் கபேலெ, யோர்கோஸ் லாந்திமோஸ், அலி அப்பாஸ், ஜேக்ஸ் ஆடியார்ட் மற்றும் ஜியா சாங்கே போன்ற இயக்குநர்களின் வரிசையில் இணைந்துள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் விருதைப் பெற்ற பிறகு, பாயல் புன்னகையுடன், “இதை என்னால் நம்ப முடியவில்லை, என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இங்கு இருப்பதை மிகவும் பெருமையாக உணர்கிறேன். இந்த விழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் கனவு நனவானது போல் இருந்தது. இந்த விருது எனது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து ஓர் இந்தியப் படம் விருது வெல்வதற்காக மீண்டும் 30 ஆண்டுகள் நாம் காத்திருக்கக் கூடாது” என்றார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பாயலுக்கு கிடைத்த வெற்றியை பாலிவுட்டும் கொண்டாடுகிறது. அவருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை ரிச்சா சத்தா, “வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது. இந்தச் செய்தியைக் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. பாயல் கபாடியா, ரன்பீர் தாஸ், கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, ஹிருது ஹாரூன், சாயா கதம் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் எனது வாழ்த்துகள்,” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...