தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதில் CBI, ED, IT ஆகிய மத்திய அமைப்புகளின் சோதனைக்குள்ளான நிறுவனங்கள் அதன்பின்னர் மத்தியில் ஆளும் பாஜக கட்சி நன்கொடை அளித்துள்ள விவரங்கள் வெளியாகியுள்ளன.
யாருக்கு யார் எவ்வளவு கொடுத்தார்கள்?
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை என்ற பெயரில் முறைகேடுகள், ஊழல் நடைபெறுகிறது எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் நடைமுறையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை யார், யார் வாங்கியது, எந்த அரசியல் கட்சிக்கும் எவ்வளவு நிதி நன்கொடை செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்களை எல்லாம் வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. ஆரம்பத்தில் சாக்கு சொன்ன எஸ்பிஐ வங்கி பின்னர் நீதிமன்றத்தின் உறுதியான நடவடிக்கையால் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை (12-03-24) சமர்ப்பித்தது. தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி புதன்கிழமை தாக்கல் செய்தது. அதில், ‘கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15-ம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் இணைய தளத்தில் மார்ச் 15-ம் தேதிக்குள் மக்கள் பார்வைக்காக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, எஸ்பிஐ சமர்ப்பித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் தற்போது தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இந்தியா முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் இரண்டு பட்டியல்கள் உள்ளன. முதலாவதாக, தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தொகை மதிப்பு மற்றும் தேதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. மற்றொன்றில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் பத்திரங்களின் மதிப்புகள் மற்றும் அவை பணமாக்கப்பட்ட தேதிகள் உள்ளன. எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்ற விவரங்கள் சேர்த்து இடம்பெறவில்லை. ஆனாலும், தேர்தல் பத்திரம் வாங்கிய தேவை, அது கட்சிக்கு கொடுக்கப்பட்ட தேதி இரண்டையும் ஒப்பிட்டு, யார் யார் கொடுத்த நன்கொடைகள் எந்தந்த கட்சிக்கு சென்றுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் பத்திரங்களை தனி நபர்கள், நிறுவனங்கள் வாங்கிய தேதி வாரியாக இடம்பெற்றுள்ள பட்டியலில் பாரதி ஏர்டெல், வேதாந்தா, முத்தூட், பஜாஜ், உத்தராகண்ட் சுரங்க பணிகளை மேற்கொண்ட நவ யுகா, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், மேகா இன்ஜினியரிங், பிரமல் எண்டர்பிரைசஸ், டோரண்ட் பவர், டிஎல்எஃப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ், அப்பல்லோ டயர்ஸ், லக்ஷ்மி மிட்டல், எடெல்வீஸ், பிவிஆர், கெவென்டர், சுலா ஒயின், வெல்ஸ்பன், நவயுகா, ஐ.டி.சி, பிரமல் எண்டர்பிரைசைஸ், டி.எல்.எஃப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ், பி.வி.ஆர் சினிமாஸ், நாட்கோ பார்மா மற்றும் சன் பார்மா ஆகிய எண்ணற்ற நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனை நிறுவனங்கள் இருக்கும் நிலையில் அம்பானி, அதானி நிறுவனங்கள் இடம்பெறவில்லை என்பது பேசுபொருளாகியுள்ளது.
தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து ரொக்கமாக பெற்று கட்சிகளின் பட்டியலில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், அதிமுக, திமுக, பாரத் ராஷ்ட்ரிய சமிதி, ஜனசேனா, சிவசேனா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, ஆம் ஆத்மி, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அம்பானி, அதானியை முந்திய கோவை நிறுவனம்!
எதிர்பார்க்கப்பட்டது போலவே தேர்தல் பத்திரங்கள் மூலமாக அதிகபட்சமான நன்கொடையைப் பெற்றுள்ள கட்சியாக பாஜக இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் காங்கிரஸ் கட்சியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. திமுக, அதிமுக, சிவசேனா, ஜனதா தளம் போன்ற கட்சிகளும் தேர்தல் பத்திரங்களில் நன்கொடை பெற்றிருக்கின்றன.
அதிக நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கும் 20 பேர் மட்டுமே ரூ.6,000 கோடி அளவுக்கான நன்கொடையை வழங்கியிருக்கின்றன. இதில் அதிகபட்சமாக ரூ.1,368 கோடி நன்கொடையை வழங்கி முதல் இடத்தில் இருக்கும் நிறுவனம் ஃபுயூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் என்ற கோவையில் உள்ள லாட்டரி நிறுவனமாகும். இது ஒட்டுமொத்த தேர்தல் பத்திர நன்கொடையில் 11% ஆகும். இந்த நிறுவனம் லாட்டரி அதிபர் மார்டினுக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய நன்கொடை தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டாவது இடத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ.966 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.
மூன்றாவதாக, குவிக் சப்ளை செயின் என்ற நிறுவனம் ரூ.410 கோடி நன்கொடை வழங்கியிருக்கிறது.
நான்காவதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனமான வேதாந்தா ரூ.401 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.
அதற்கடுத்த இடங்களில் ஹல்டியா எனர்ஜி ரூ.377 கோடியும், எஸ்ஸெல் மைனிங் ரூ.225 கோடியும், பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.198 கோடியும் வழங்கியிருக்கின்றன.
CBI, ED, IT மூலம் மிரட்டி நன்கொடை
அமலாக்கத் துறை (ED), வருமானவரித் துறை (IT), மத்திய புலனாய்வு துறை (CBI) போன்ற மத்திய அமைப்புகளின் மூலம் சோதனை செய்து அழுத்தம் கொடுத்து கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இருந்து 335 கோடி ரூபாய் பாஜக நன்கொடை பெற்றிருப்பதாக ‘நியூஸ் மினிட் & நியூஸ் லாண்டரி’ ஆய்வு செய்து ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தேர்தல் பத்திரம் குறித்த விவரங்களிலும் மத்திய அமைப்புகளின் சோதனைக்கு பின்னர் நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ள விவரங்கள் வெளியாகியுள்ளன.
உதாரணமாக, மார்டினுக்கு சொந்தமான கோவை டஃபியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல்ஸ் நிறுவனம் 1368 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் வாங்கி பாஜகவுக்கு நன்கொடை கொடுத்திருக்கிறது. அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால் தான் அந்த நிறுவனம் அமலாக்க துறையால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அதன் சொத்துகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘நிறுவனங்களிடமிருந்து தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தியுள்ளது’ என்று காங்கிரஸ் கட்சியும் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைக்குப் பிறகு 45 நிறுவனங்கள் தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ. 400 கோடி நன்கொடை கொடுத்திருப்பதன் மூலம் இது உறுதியாகியுள்ளது’ என்றும் குறிப்பிட்டுள்ளது.