No menu items!

அரசியலில் இன்று: 2ஜின்னா திமுக… 5ஜின்னா பாஜக – கன்னியாகுமரியில் மோடி அதிரடி

அரசியலில் இன்று: 2ஜின்னா திமுக… 5ஜின்னா பாஜக – கன்னியாகுமரியில் மோடி அதிரடி

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்படும் நிலையில் கன்னியாகுமரியில் இன்று நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

நாட்டை துண்டாட வேண்டும் என நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள். தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி எடுபடாது. திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம். இண்டியா கூட்டணி 2ஜி உள்ளிட்ட ஊழல்கள் நிறைந்த கூட்டணி. இண்டியா கூட்டணி ஊழல் செய்வதற்கு தான் போராடுகிறது. பாஜக கன்னியாகுமரியை நேசிக்கிறது, ஆனால் இந்தியா கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது.

5ஜி போன்ற திட்டங்களை பாஜக மக்களுக்கு கொடுக்கிறது. பாஜகவின் பெயரில் டிஜிட்டல் இந்தியா என்ற திட்டம் இருக்கிறது. ஆனால் இண்டியா கூட்டணியில் லட்சக்கணக்கான கோடிகளில் நடைபெற்ற ஊழல்தான் இருக்கின்றன. 2ஜி ஊழலில் பெரும் பங்கு வகித்தது திமுக தான். பாஜக ஏராளமான விமான நிலையங்களை கட்டியது, ஆனால் இண்டியா கூட்டணியில் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடும் ஹெலிகாப்டர் ஊழல் தான் நடந்தது.

திமுக தமிழகத்தின், தமிழ் பண்பாட்டின் எதிரி. நமது கடந்த கால பெருமைகளையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கின்ற எதிரி. உச்ச நீதிமன்றமே தமிழகத்தை கண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, நமது கலாச்சாரத்தின் மீதும், பண்பாட்டின் மீதும், பாரம்பரியத்தின் மீதும் எப்பொழுதும் திமுக வெறுப்பினைக் கக்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பெருமையை, அடையாளத்தை பாதுகாக்க பாஜக என்றும் முன்னணியில் இருக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு

தைலாபுரத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி விவாதிக்க தைலாபுரத்தில் இன்று பாமக மாவட்ட செயலாளர்கள் கூடி ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு யாருடன் கூட்டணி என்பதை பாமக தலைமை அறிவிக்கும்  என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று காலையில் இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பாமகவைப் பொறுத்தவரையில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸும், பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும் விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் அன்புமணியோ பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறார். இந்த விஷயத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படாததால் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதால் அக்கட்சி யாருடன் கூட்டணி என்பது தொடர்ந்து சஸ்பென்ஸாக இருக்கிறது.

தேர்தல் நிதியை மிரட்டி வாங்கியது பாஜக – செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 தேர்தல் பத்திர மெகா ஊழலை விஞ்ஞான முறையில் பா.ஜனதாவினர் செய்துள்ளனர். கறுப்பு பணத்தை மீட்போம். பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் கறுப்பு பணத்தை பாஜகதான் உருவாக்கி கொண்டிருக்கிறது. பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து பல கோடி  ரூபாய் வாங்கப்பட்டுள்ளது. 

தேர்தல் நிதியை பாஜக மிரட்டி வாங்கி உள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதுபற்றி பேசினால் வருமானவரித் துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இந்த மோசடியில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது.

இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...