No menu items!

இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியாவுக்கு உள்ள சவால்கள்

இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியாவுக்கு உள்ள சவால்கள்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிகள் பட்டியலில் தற்போது 3-வது இடத்தில் உள்ள இந்தியாவுக்கு இது முக்கிய போட்டியாக கருதப்படுகிறது. இப்போட்டியில் வெல்லும் பட்சத்தில் முதல் 2 இடங்களுக்குள் இந்திய அணி இடம் பிடிக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஆடுவது சந்தேகம். நாளைக்குள் அவர் குணமடையாவிட்டால் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா சந்திக்கும் – சவால்களைப் பார்ப்போம்:

அனுபவம் இல்லாத கேப்டன்:

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடுவது சந்தேகமாக உள்ளது. அவருக்கு பதில் பும்ரா கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடந்தால், அது இந்திய அணிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். பந்துவீச்சில் பும்ரா கெட்டிக்காரர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் அவரால் ஒரு திறமையான கேப்டனாக செயல்பட முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி.

ஐபிஎல் போட்டியில்கூட கேப்டனாக செயல்படாத பும்ரா, முற்றிலும் அனுபவமற்று இருக்கும் நிலையில் இந்த டெஸ்ட் போட்டியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அவரால் அணியை கரைசேர்க்க முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது.

ரோஹித் சர்மாவால் ஆடமுடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக விராட் கோலி அல்லது ரிஷப் பந்த் ஆகிய இருவரை கேப்டனாக நியமித்திருக்கலாம். ஆனால் அணி நிர்வாகம் அப்படி செய்யாதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பும்ராவை கேப்டனாக்குவதன் மூலம் கடந்த 8 மாதங்களில் 7 கேப்டன்களை மாற்றிய அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைக்கும். இந்தியா இப்போட்டியில் தோற்றால் அதற்கு இதுவும் முக்கிய காரணமாக இருக்கும்.

தடுமாறும் தொடக்க ஜோடி:

கடந்த 2 ஆண்டுகளாகவே இந்திய டெஸ்ட் அணிக்கு நிலையான தொடக்க ஜோடி இல்லை. ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், சுப்மான் கில், கே.எல்.ராகுல், பிருத்வி ஷா என பல தொடக்க ஆட்டக்காரர்களை இந்தியா பயன்படுத்தி உள்ளது. இதில் ஓரளவு வெற்றிகரமான தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவும், கில்லும் இருந்துள்ளனர்.

இதில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் காயம் அடைந்துள்ளதால் எட்ஜ்பாஸ்டனில் கில்லுடன் தொடக்க ஆட்டக்காரராக யார் களம் இறங்குவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன் ரிசர்வ் வீரராக மயங்க் அகர்வால் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் அவர் கில்லுடன் களம் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தைப் பொறுத்தவரை குறைந்தது 10 நாட்களாவது அந்நாட்டில் இருந்தால்தான் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு பழக முடியும். ஆனால் அங்கு சென்ற 3 நாட்களிலேயே தொடக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வாலால் சமாளிக்க முடியுமா என்பது சந்தேகமே. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது இது அதிக சுமையை ஏற்படுத்தும்.

கோலி, புஜாராவின் மோசமான ஃபார்ம்:

கடந்த 3 ஆண்டுகளாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ரன் குவிக்க விராட் கோலி தடுமாறி வருகிறார். கோலி சதம் அடித்து 3 ஆண்டுகள் ஆகின்றன.

அதேபோல் புஜாராவும் கடந்த 2 ஆண்டுகளாக ரன்களைக் குவிக்க முடியாமல் தடுமாறுகிறார்.

ஏற்கெனவே தொடக்க ஜோடி சரியாக இல்லாத நிலையில் கோலி, புஜாராவும் ஃபார்ம் இழந்து நிற்பது இந்திய அணியின் பேட்டிங்கை பலவீனமாக காட்டுகிறது.

டெஸ்ட் போட்டிகளில் இடைவெளி:

இந்திய வீரர்களைப் பொறுத்தவரை கடந்த பல மாதங்களாக டி20 போட்டிகளில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் ஆடி பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இங்கிலாந்து வீரர்கள் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறார்கள்.

கடந்த வாரம்கூட நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடி அந்த அணி வெற்றிபெற்றது. எனவே டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நாட்களாக ஆடாமல் இருப்பது இந்திய அணியை பாதிக்கலாம்.

இந்த சிக்கல்களை எல்லாம் கடந்து இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயம் அதன் பந்துவீச்சு. பும்ரா, முகமது ஷமி. முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்வின், ஜடேஜா என வலுவான பந்துவீச்சு வரிசையை இந்தியா கொண்டுள்ளது. இந்த பந்துவீச்சு வரிசை இந்தியாவைக் கரைசேர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...