No menu items!

பாஜகவினரின் ஆபாச ஆடியோ சமாளிப்புகள் – மிஸ் ரகசியா!

பாஜகவினரின் ஆபாச ஆடியோ சமாளிப்புகள் – மிஸ் ரகசியா!

இரவெல்லாம் உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் பார்த்ததால் கண்களில் தூக்கத்துடன் ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா. சூடான தேநீரைக் கொடுத்தோம்.

“லேட் நைட் வேர்ல்ட் கப் பார்க்கிற போல கண்ணெல்லாம் களைப்பா தெரியுது”

“நானாவது வேர்ல்ட் கப் பாத்து களைப்பாகிறேன். ஆனால் பாஜக அண்ணாமலைக்கு கட்சி பஞ்சாயத்தை தீர்த்து வைத்தே களைப்பாகிறது. பாவம் சூர்யா சிவா மேட்டர்ல ரொம்பவே அப்செட்னு கமலாயத்துல சொல்றாங்க”

“என்னாச்சு? அத்தனை ஆபாசமா பேசிட்டு அக்கா, தம்பினு சொல்லிட்டாங்க. வடிவேலுவோட பேக்கரி டீலிங்கை விட மோசமா இருக்கே”

“சூர்யா ஆடியோ பிரச்சினை டெல்லி வரை போயிருச்சு. ஆபாசமா பேசுன சூர்யா மேல நடவடிக்கை எடுக்கல ஆனா அத தப்பு சொன்ன காயத்ரி ரகுராம் மேல நடவடிக்கை எடுத்திருக்கிங்கனு டெல்லிலருந்து கேட்டிருக்காங்க. அந்த கடுப்புலதான் செய்தியாளர் சந்திப்புல பஸ் பயணம் போறவங்க இறங்கினாதான் மத்தவங்க புதுசா ஏற முடியும்னு சொல்லி பாஜக மாநிலத் தலைவர் பதவியும் அப்படிதான். எப்ப வேணா மாறலாம்னு பேசுனாருனு கட்சிக்காரங்க சொல்லுறாங்க”

“அண்ணாமலையை மாத்திடுவாங்களா, என்ன?”

“இல்லை. இப்போது இல்லை. ஆனா அவர் மேல பல புகார்கள் போயிருக்கு. முக்கியமா பழைய ஆட்களை ஒதுக்கிவிட்டு தனக்கு ஜால்ரா அடிக்கிறவங்களை வச்சு கட்சி நடத்துறார்னு. குறிப்பா பிரமாணர்களை ஒதுக்குறார்ன்ற குற்றச்சாட்டை சொல்றாங்க. நாங்கதான் கட்சினு இனிம யாரும் சொல்ல முடியாது, இது எல்லாருகுமான கட்சினு பிரஸ் மீட்ல அண்ணாமலை சொன்னதுக்கு இதுதான் காரணம்”

”சூர்யாவை கட்சியைவிட்டு ஆறு மாசம் நீக்கியிருக்காங்களே?”

“அப்படினு பாஜககாரங்க சொல்றாங்க. ஆனா அண்ணாமலை அறிக்கைல அவர் கட்சியிலிருந்து நீக்குனதா இல்லை. கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் ஆறு மாதத்துக்கு நீக்கப்படுகிறார். கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். அவர் நடவடிக்கைகளில் எனக்கு நம்பிக்கை வந்தால் அவருக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படும்னு சொல்லியிருக்கு. பொறுப்புகளிலிருந்துதான் நீக்கப்பட்டிருக்கிறார். கட்சியிலிருந்து அல்ல. ஆனா அண்ணாமாலையின் ராஜந்திரம், அண்ணாமலையின் அதிரடி என்று அண்ணாமலை எடுத்த முடிவைப் பாராட்டி சமூக ஊடகங்களில் பதிவுகள் போட வேண்டும் என்று பாஜகவினருக்கு ஐடி செல் உத்தரவிட்டிருக்கிறது. அதனால் அறிக்கை வெளியானவுடன் எல்லோரும் ஒரே மாதிரி அண்ணாமலை அபாரம் என்று புகழ்ந்து ட்விட் போட்டிருந்தார்கள். இங்க இருக்கிறது பாஜகவுக்கான ஐடி விங்கா அல்லது அண்ணாமலைக்கான ஐடி விங்கானு கேட்டும் புகார்கள் மேலிடத்துக்கு போயிருக்கு”

“இந்தப் பிரச்சினை அவ்வளவுதானா? முடிந்துவிட்டதா?”

“இல்லை. காயத்ரி ரகுராம் இதை விடுவதாக இல்லை. அண்ணாமலை அணியை அகற்றிவிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். இதற்காக டெல்லிக்கு பேசிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் இங்கு அண்ணாமலைக்கு எதிராக இருக்கும் பாஜகவினரையும் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கிறார். இப்போது அமைதியாக தெரிந்தாலும் சூர்யா சிவா ஆடியோ பாஜகவுக்கு சிக்கல்களைதான் கொடுக்கப் போகிறது என்கிறது கமலாலய வட்டாரம்”

“கேசவ விநாயகம் பற்றியும் நிறைய செய்திகள் வருகிறதே..”

“ஆமாம்….எல்லாம் ஆபாசக் களஞ்சியமா இருக்கிறது. ஆனாலும் அவரை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்கிறார்கள். அசைக்க முடியாத இடத்தில் அவர் இருக்கிறாராம். அவரும் இப்போது அண்ணாமலைக்கு எதிராகதான் இருக்கிறார். சூர்யா சிவாவின் ஆடியோவில் கேசவவிநாயகத்தை அவதூறாக பேசியிருக்கிறார். அது குறித்து அண்ணாமலை கண்டிக்கவில்லை என்ற வருத்தம் கேசவ விநாயகத்துக்கு இருக்கிறது”

“இந்த ஆடியோ விஷயத்தைப் பற்றி முரசொலியில் ஒரு பக்கத்துக்கு எழுதியிருக்கிறார்களே?”

“பாஜக வளர்ந்து வருவதாக பொருமிக் கொண்டிருந்த திமுகவினருக்கு இந்த விஷயம் அல்வா சாப்பிட்டதுபோல் ஆகிவிட்டது. அண்ணாமலை நடவடிக்கையால் களங்கப்பட்டு கிடக்கும் கமலாலயம் என்று முழு பக்க கட்டுரை முரசொலியில் வெளியிட்டு சந்தோஷப்பட்டிருக்கு. ஆனால் முன்னணி தலைவர்கள் யாரும் இதைப் பத்தி பேச வேண்டாம்னு உத்தரவு போயிருக்காம். இந்த ஆடியோவினால் திருச்சி சிவாவுக்கு ரொம்பவும் வருத்தம். தனது மகன் சூர்யா சிவா, டெய்சி உரையாடலில் டெய்சி தனது மனைவியை களங்கப்படுத்தி பேசியிருப்பதில் அவர் ரொம்பவும் அப்செட் ஆகி இருக்கிறாராம்.”

“பாவம், சரி, காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட ரூபி மனோகரன் அதே வேகத்தில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டிருக்கிறாரே?”

“தலைவரை மாற்ற வேண்டும் என்று சொல்லி டெல்லிக்கு சென்று கேட்ட தலைவர்களிடம், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இப்போதைக்கு மாற்றம் இருக்காது என்று டெல்லி தலைமை சொல்லி இருந்தது. அப்போதே யார் மீதும் இப்போது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று ஒழுங்கு நடவடிக்கை குழு ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம் என்று அறிவித்தது இது டெல்லி தலைமையை எரிச்சல்படுத்தி இருக்கிறது. இந்த நீக்கத்தை தமிழக பொறுப்பாளர் குண்டு ராவ் ஏற்றுக் கொள்ளவில்லை இந்த நடவடிக்கை சரியானது இல்லை என்று கூறி அதை நிறுத்தி வைத்திருக்கிறார். இப்போதைக்கு அழகிரி தரப்புக்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த சிக்கல்களைப் பயன்படுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியைப் பெற திட்டங்களை தீட்டி வருகிறாராம் ஜோதிமணி. அவருக்கு ஆதரவாக செல்வப்பெருந்தகை இருப்பதாக சத்யமூர்த்திபவன் சோர்ஸ் சொல்லுகிறது”

“ஆளுநர் – எடப்பாடி சந்திப்பு பற்றிய தகவல்கள் ஏதும் இருக்கிறதா?”

“எடப்பாடி யாரையாவது சந்திக்கச் செல்லும்போது கூட அவரைக் கூப்பிடவில்லை இவரை அழைத்துச் செல்லவில்லை என்ற பஞ்சாயத்து வருவது வழக்கம். இந்த முறை அதுபோன்ற பஞ்சாயத்து வரக்கூடாது என்பதற்காக கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார் என்று எல்லோருக்கும் போன் போட்டு அழைத்துச் சென்றுள்ளார். ஆளுநரிடம் புகார் மனு தந்துவிட்டு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று புகார் கூறியிருக்கிறார். மற்றபடி அரசியல் பேசியதாக ஏதும் செய்திகள் இல்லை. ஆனால் ஆளுநர் – எடப்பாடி சந்திப்பால் திமுகவினர் கொஞ்சம் கோபமாக இருக்கிறார்கள்”

“திமுகவினருக்கு என்ன கோபம்?”

“ஆன்லைன் விளையாட்டு தடை சட்ட மசோதா பற்றி ஆளுநரிடம் பேச முயன்றிருக்கிறார் சட்ட அமைச்சர் ரகுபதி. ஆனால் அவருக்கு நேரம் தரப்படவில்லை. ரகுபதிக்கு நேரம் ஒதுக்காத ஆளுநர் எடப்பாடிக்கு மட்டும் நேரம் ஒதுக்கியது ஏன் என்பதுதான் திமுகவினரின் கேள்வி.”

”திமுக அரசுடனான ஆளுநரின் மோதல் எப்படியிருக்கிறது?”

“தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் ஆளுநரை சந்தித்திருக்கிறார். ஆளுநர் தொல்லை கொடுக்காவிட்டால் ஆட்சியாளர்களும் தொல்லை கொடுக்கமாட்டார்கள் என்று ஆளுநரிடம் சொன்னாராம்”

“அதுக்கு ஆளுநர் என்ன சொன்னாராம்?”

“பார்க்கலாம், எனக்கும் சுமுகமாக இருக்கவே விருப்பம் என்று சொன்னாராம்”

”அப்ப இனிம ஆளுநர் – அரசு மோதல் இருக்காதா?”

”அதெப்படி..ஆட்டுவிப்பவர்கள் இந்த ஒப்பந்தத்துக்கு வரணும்ல’ என்று சிரித்தாள் ரகசியா.

“நியாயமான கேள்விதான். திமுகவில் கனிமொழியிடம் இருந்து மகளிரணி பொறுப்பை எடுத்துவிட்டார்களே?”

“கனிமொழியை துணைப் பொதுச் செயலாளர் பதவியில் நியமித்ததுமே அவர் மகளிரணி தலைவி பதவியில் தொடர மாட்டார் என்று கூறப்பட்டது. கட்சியில் இரண்டு பதவிகள் எனக்கு வேண்டாம் என்று கனிமொழியே கூறியிருக்கிறார். அதை ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டாராம். புதிய மகளிர் அணி தலைவியாகவும் நிர்வாகிகளாகவும் யாரையெல்லாம் நியமிக்கலாம் என்ற பட்டியல் கனிமொழியிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அவர் தந்த பட்டியலை அப்படியே தலைமை அறிவித்தது இதில் கனிமொழி ரொம்ப ஹாப்பி” என்று சொல்லி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...