விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா பேசுவதாக வீடியோ ஒன்று வைரலாகி ஈழத் தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இது.1
வீடியோவில் தோன்றுவது உண்மையில் பிரபாகரன் மகள் துவாரகா தான் எனவும், துவாரகா இல்லை எனவும் ஏற்றும் மறுத்தும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ இது என்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இலங்கையில் நீண்ட காலமாக எங்கள் பிரச்சினை தீராமல் இருக்கிறது. தொடர்ந்து எங்கள் நிலங்கள் பறிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் குடியிருக்கும் நிலங்களுக்குள்ளேயே புத்தர் கோவிலை கட்டுவது அல்லது வனத்துறைக்கு சார்ந்தது எனச் சொல்லி அரசாங்கம் எடுப்பது நடக்கிறது. 13ஆவது சட்டத் திருத்தம் அரசியலைப்பில் இருந்தும் நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது. நாங்கள் ஒரு பகுதியினர் இலங்கையிலும் இன்னொரு பகுதியினர் புலம்பெயர்ந்த நாடுகளிலுமாக பிரிந்து வாழ்கிறோம்.
இந்த பின்னணியில் இலங்கைத் தமிழர்களை வெற்றிகொள்வதற்கான முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. அதில் ஓரளவு அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளார்கள். ஆனாலும், சீனா மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ராஜபக்சே குடும்பத்தோடு அல்லது தீவிர சிங்கள பெளத்தவாதிகளுடன் தான் அவர்கள் நிற்பார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம்.
இப்போது இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு பின்னர் உலகளவில் சினாவின் இடம் பலப்பட்டு வருகிறது. எனவே, இப்போழுது காலம் தாழ்த்தாமல் எங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். காலம் தாழ்த்தினால், எங்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கான வாய்ப்புகள் குறையும்; இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இலங்கையில் செல்வாக்கு இல்லாத நிலை உருவாகும் ஆபத்து இருக்கிறது.
எனவே, இந்தியாவும் மேற்கு நாடுகளும் சில முன்னெடுப்புகளை எடுத்துள்ளன. கடந்த காலங்களில் நிகழ்ந்த விரும்பத்தகாத நிகழ்வுகளை பொருட்படுத்தாமல் இந்தியாவுடன் நிற்க வேண்டிய நிலை இப்போது எங்களுக்கும் உள்ளது. அது தொடர்பாக எங்கள் தலைவர்கள் இந்தியாவுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த உலக அரசியல் சூழலை எதிர்கொள்ள புதுப்புது அரசியல் உத்திகள் தேவைப்படுகிறது. அதில் ஒன்றாகத்தான் துவாராக வீடியோ வெளியாகியுள்ளதாக நான் கருதுகிறேன்.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சில மாதங்கள் முன்பு பழ. நெடுமாறன் சொல்லியிருந்தார். இப்போது பிரபாகரன் வருவார் என்பதற்கான அறிகுறியாக துவாரகா வீடியோவை குறிப்பிடுகிறார். இது தொடர்பாக அவர் மீதும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறதே?
நெடுமாறன் இல்லாவிட்டால் பிரபாகரன் இல்லை என்று சொல்லும் அளவுக்கு எங்கள் போராட்டத்தில் கலந்தவர் நெடுமாறன். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக தன் வாழ்க்கையையும் சொத்துக்களையும் இழந்தவர். தமிழ்நாட்டில் எங்கள் முதல் ஆதரவாளராகவும் பிதாமகனாகவும் வன்னியில் நெடுமாறன் தான் கருதப்பட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்களுக்காக எதுவும் செய்யாதவர்கள் எங்களை முன்னிட்டு அவரை விமர்சிப்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நெடுமாறனை நாங்கள் நம்புகிறோம்.
நீங்கள் குறிப்பிடுவது போல் இது ஒரு உத்தியா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்க, தனிப்பட்ட முறையில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள், துவாரகா உயிருடன் இருக்கிறாரா இல்லையா?
பிரபாகரன் மரணமோ துவாரகா மரணமோ இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை. அவர்கள் இருக்கிறார்கள் என்பது எப்படி ஊகமோ அதுபோல் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதும் ஊகம்தான். இலங்கை வெளிவிவகாரத் துறை அமைச்சரிடம் துவாரகா வீடியோ பற்றி கேட்டபோது, உறுதியாக பதில் எதுவும் அவர் சொல்லவில்லை. “நான் கேட்டுவிட்டுதான் சொல்லவேண்டும்” என்று அவர் சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரனோ துவாரகாவோ இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நெடுமாறன் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால் உடனே முடிவெடுக்காமல் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். எங்கள் நலன்களுக்கு எதிராக நெடுமாறன் செயல்பட மாட்டார் என்று உறுதியான எண்ணம் எங்களுக்கு உள்ளது.