No menu items!

விஜயகாந்தை நல்லா கவனிங்க – முதல்வர் உத்தரவு – மிஸ் ரகசியா

விஜயகாந்தை நல்லா கவனிங்க – முதல்வர் உத்தரவு – மிஸ் ரகசியா

மழையில் நனைந்த நிலையில் ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“ரெயின் கோட் போட்டு வந்திருக்க கூடாதா. இப்படி நனைஞ்சுட்டியே.” என்று செல்லமாய் கண்டித்துவிட்டு துடைத்துக் கொள்ள டவலை நீட்டினோம்.

“இந்த மழையை நம்பவே முடியலை. வீட்ல இருந்து கிளம்பும்போது வெயில் அடிச்சுட்டு இருந்தது. அதனால ரெயின் கோட் போடாம பேக்ல வச்சிருந்தேன். வந்துக்கிட்டு இருக்கும்போது சட்டுனு பெய்ஞ்சிருச்சு. வண்டியை நிறுத்தி ரெய்ன் கோட் கூட போட முடில” என்றவாறு தலையை துவட்டினாள்.

”எல்லாமே சட்டு சட்டுனுதான் நடக்குது…கவர்னர் ரவியை உச்ச நீதிமன்றம் நல்லா கேட்டிருக்கு பாத்தியா?

எவ்வளவு பவர்ஃபுல்லா தன்னைக் காட்டிக்கிட்டார். இப்ப பாரு பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு சட்டுனு போய்ட்டார்”

“ஆமா, அதுல முக்கியமான விஷயம் முதல்வரும் ஆளுநரும் சந்திச்சு பேசி பிரச்சினைகளுக்கு முடிவு கட்டணும்னு உச்ச நீதிமன்றம் சொல்லிருக்கு”

“சந்திச்சு பேசுவாங்களா?”

“இதே கேள்வியைதான் அறிவாலயத்து மக்கள்கிட்ட கேட்டேன். முதல்வர் என்ன மனநிலைல இருக்கிறார்னு. முதல்வர் இன்னும் இது குறித்து முடிவு எடுக்கலையாம். எல்லா மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் கொடுத்தா சந்திச்சு ஒரு பூங்கொத்து கொடுக்கலாம்னு ஒரு மூத்த அமைச்சர் பத்திரிகையாளர் ஒருவர் கிட்ட சொல்லியிருக்கிறார்”

“அப்போ இப்போதைக்கு முதல்வர்- கவர்னர் சந்திப்பு நடக்காதுங்கிற?”

“ஆமாம். அப்படிதான் தெரியுது? ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலைமை மாறலாம்”

”எப்படி?”

“பாஜக அதிக மாநிலங்களில் ஜெயித்தால் திமுக அரசின் அதிகமான கவர்னர் எதிர்ப்பு குறையும் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள்”

“விஜயகாந்த் உடல்நிலை பத்தி உனக்கு ஏதும் தெரியுமா? நல்ல மனுஷன்”

“அவரோட உடல்நிலையைப் பத்தி முதல்வரும் ரொம்ப கவலையா இருக்கார். அவரோட உடல்நிலை பற்றி தினமும் விசாரிக்கிறார். எல்லா உதவிகளையும் அவருக்கு செய்யணும்னு அமைச்சர் மா.சுப்பிரமணியன்கிட்ட உத்தரவு கொடுத்திருக்கிறார். முதல்வருக்கு விஜயகாந்த் மேல தனிப்பட்ட பாசம் இருக்கு”

“இப்ப எப்படி இருக்கிறார், விஜயகாந்த்?”

“எந்த முன்னேற்றமும் இல்லைனு மருத்துவமனை வட்டாரங்கள் சொல்லுது. இன்னும் செயற்கை சுவாசத்துலதான் இருக்கிறாராம். ஒரு வாரம் ஆகும்னு மருத்துவர்கள் சொல்லியிருக்காங்க”

”பிரேமலதாகிட்ட முதல்வர் பேசினார்னு ஒரு தகவல் வந்ததே உண்மையா?”

”ஆமாம் உண்மைதான். ‘திறமையான அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவர்களுடைய ஆலோசனையையும் நீங்கள் பயன்படுத்திக்கலாம். தேவை என்றால் அவர்கள் மருத்துவமனைக்குகூட வருவார்கள்’ன்னு சொல்லி இருக்கார்.”

“விஜயகாந்த் மேல முதல்வர் இவ்வளவு பாசமா இருப்பார்னு நினைக்கல.அமைச்சர் பொன்முடிகிட்ட அமலாக்கத் துறை திரும்பவும் விசாரணை நடத்தி இருக்கே. அதைப் பத்தி நீ ஏதும் விசாரிச்சியா?”

“இந்த விசாரணை 5 மணிநேரம் நடந்திருக்கு. அமலாக்கத் துறை அதிகாரிகள் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் சொன்ன அமைச்சர் பொன்முடி சிரிச்சுட்டே, ‘இந்தக் கேள்விகளை யார் கேட்கச் சொன்னாங்கன்னு எனக்குத் தெரியும். 2024 தேர்தலுக்குப் பிறகு இதே போன்ற விசாரணையை நீங்கள் வேறு கட்சித் தலைவரிடம் நடத்த வேண்டி இருக்கும்’ன்னு சொல்லி இருக்கார். இந்த முறை வெளியே விசாரணை முடிஞ்சு சிரிச்ச முகத்தோடதான் பொன்முடி வெளிய வந்திருக்கார். அதே சமயம் தேவையற்ற சர்ச்சைகள் வேண்டாம்னு பத்திரிக்கையாளர்களை சந்திக்கறதை தவிர்த்துட்டார்.”

“திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன நடிகர் விஜய், சக நடிகரான உதயநிதிக்கு வாழ்த்து சொல்லலயே?”

“விஜய் வாழ்த்து சொல்றதாத்தான் இருந்தாராம். ஆனா அவரைச் சுத்தி இருந்தவங்கதான் வேணாம்னு தடுத்திருக்காங்க. ‘நீங்க எதிர்காலத்தில் அரசியலுக்கு வர விரும்புறீங்க. அப்படி இருக்கும்போது இப்ப உதயநிதிக்கு வாழ்த்து சொல்றது தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும்’னு சொல்லி இருக்காங்க. அதுக்கு பிறகு, ‘நான் வாழ்த்து சொன்னாலும் சர்ச்சையாகும் வாழ்த்து சொல்லாவிட்டியும் பிரச்சினையாகிடும். அதனால நான் வாழ்த்து சொல்லாமலேயே இருந்திடறேன்’ன்னு சொல்லிட்டாராம்.”

”டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா நினைவு தினம் வருதே..எத்தனை கோஷ்டி ஜெயலலிதா சமாதிக்கு போறாங்க”

“உங்களுக்கு கிண்டலா இருக்கு. ஜெயலலிதா நினைவு தின நிகழ்ச்சிக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து பெருந்திரளா தொண்டர்களை வரச் செய்து தனது செல்வாக்கை காட்டற மூட்ல எடப்பாடி இருக்கார். இதற்கான உத்தரவுகளையும் கட்சிக்காரங்களுக்கு போட்டிருக்கிறார். அதேசமயம் தேவர் நினைவிடத்தில் தனக்கு எதிர்ப்பு தெரிவித்து செருப்பு தூக்கி அடிச்ச மாதிரி சென்னையிலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கலாட்டா செய்யலாம்னு அவர் நினைக்கிறார். இதனால போலீஸ்ல பாதுகாப்பு கேட்டு இருக்காராம்”

“ஜெயலலிதா நினைவு நாளுக்கு ஓபிஎஸ்சும் பேரணி நடத்துவாரே. இந்த முறை அவர் அதிமுக கொடியை பயன்படுத்துவாரா?”

” நீதிமன்றத்தில் இருந்து மறு உத்தரவு வர்றவரைக்கும் கட்சிக் கொடியையும், கட்சி சின்னத்தையும் பயன்படுத்த மாட்டேன்னு ஒப்புதல் தந்திருக்காராம் ஓபிஎஸ். அதனால டிசம்பர் 5-ம் ஆம் தேதி ஜெயலலிதா நினைவு தினத்தன்னைக்கு எந்த கட்சி அடையாளமும் இல்லாமல் ஓபிஎஸ் வருவாராம். அவர் நிலை இப்படி ஆயிடுச்சேன்னு கட்சிக்காரங்க வருத்தப்படறாங்க.”

”மழைல சென்னைல சரியா வடிகால் பணிகள் செய்யலனு புகார்கள் வந்திருக்கே’

“ஆமாம். இந்த வருஷம் புதன்கிழமை கிட்டத்தட்ட 3 மணிநேரத்துக்கு பெஞ்ச பலத்த மழையால பல இடங்கள்ல தண்ணி தேங்கிடுச்சு. முக்கிய சாலைகள்ல பலமணி நேரம் பெஞ்ச மழையால பெரிய அளவுல டிராபிக் ஜாம். மழைநீர் கால்வாய்கள் சரியா வேலை செய்யலைங்கிறது ஒரு வருத்தம்னா, அதுக்காக பல இடங்கள்ல தோண்டிப் போட்டதுல சாலைகள் குண்டும் குழியுமா இருக்கு. இந்த செய்தியெல்லாம் முதல்வர் பார்த்திருக்கிறார். சரியா செய்யலனு அதிகாரிகளை கூப்பிட்டு டோஸ் விட்டாராம்”

“மேயர், மத்த அதிகாரிகள்லாம் பம்பரமா சுழல்றதா போட்டோலாம் போட்டுக்கிட்டு இருக்காங்களே?”

”அதுதான் பிரச்சினையே. மேயர் ஒரு பக்கம் அதிகாரி ஒரு பக்கம் துணை மேயர் ஒரு பக்கம்னு தங்களோட அதிகாரத்தைக் காட்டுறாங்களாம். அது மட்டுமில்லாம மாநகராட்சியை தன் கட்டுக்குள்ள வச்சிருக்கிற அமைச்சர் வேற உள்ள வந்து ஆர்டர் போடுகிறாராம். இப்படி ஆளாளுக்கு நாட்டமை செஞ்சதுல வடிகால் பணிகள் எல்லாம் அப்படியே நிக்குது”

“வெள்ள நீரை மையப்படுத்தி பாஜக சார்புல பாட்டெல்லாம் வெளியிட்டிருக்காங்களே?”

“ஐடி விங் சார்பா இப்படி பண்ணினாலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தார்கள்னு அவங்களை பாராட்டி இருக்கார். அது ஏன்னு தெரியாம பாஜக தொண்டர்கள் குழம்பிக் கிடக்கறாங்க. தமிழ்நாடுனாலே பாஜகவுக்கு குழப்பம்தானே” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...