கட்டாயப்படுத்தி கொடுத்த மோரைக் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட்தாக நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். இதனால் பிரச்சாரத்தின்போது அவருக்கு விஷம் கொடுத்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்காக கடந்த சில நாட்களாக அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று அவர் குடியாத்தம் பகுதியில் வாகனம் மூலம் தெருத் தெருவாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு அடுத்தகட்ட சிகிச்சைக்காக அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு மன்சூர் அலிகான் உடல்நலம் தேறி வருகிறார்.
இது தொடர்பாக தனது செய்தித் தொடர்பாளர் மூலம் நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க… குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன்… மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி வந்துச்சு. பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, அங்க சிகிச்சை குடுத்தும் வலி நிக்கல.
உடனடியா சென்னைக்கு கே.எம். நர்ஸிங் ஹோமுக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, அட்மிட் பண்ணினாங்க. இப்ப வலி கொஞ்சம் கம்மியா இருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக டிரிப்ஸ் குடுத்தாங்க. இன்னைக்கு மதியம் சாதாரண வார்டுக்கு மாத்தறதா சொல்லி இருக்காங்க.