No menu items!

துணை முதல்வராகும் துரைமுருகன் – மிஸ் ரகசியா

துணை முதல்வராகும் துரைமுருகன் – மிஸ் ரகசியா

முக்கியமான சில குறிப்புகளை எழுதிவைத்திருந்த நோட்பேட் காணாமல் போனதால், பீரோவைத் திறந்து வைத்து தேடிக்கொண்டிருந்தோம்.

“சொந்த ஆபீஸ்லயே ரெய்டா?” என்று நக்கலாக கேட்டபடி உள்ளே வந்தாள் ரகசியா.

“ரெய்ட் நடத்த இது என்ன செந்தில்பாலாஜி வீடா? சாதாரண ஆபீஸ்தானே…. முதல்வர் வெளிநாடு போயிருக்கும் நேரமாப் பார்த்து செந்தில் பாலாஜி வீட்ல ரெய்ட் போயிருக்காங்களே?”

“திமுககாரங்களுக்கே ஷாக்தான். இப்போதைக்கு எந்த ரெய்டும் இருக்காதுனுதான் நினைச்சிருக்காங்க. ஏன்னா இப்பதான் ஒரு மாசம் முன்னாடி ஜி ஸ்கொயர், திமுக எம்.எல்.ஏ. மோகன் இடங்கள்ல சோதனை நடந்தது. அதோட ரிப்போர்ட்டே வரல. அதனால இப்போதைக்கு ரெய்ட் வராதுனுதான் நினைச்சிருக்காங்க”

“ரெய்ட்னாதான் ஏதாவது சோர்ஸ்ல தெரிஞ்சுருமே”

“ஆமாம். டெல்லில அதுக்கான ஆளுங்க இருக்காங்க. ஆனா இந்த முடிவ டெல்லில எடுத்தாலும், உத்தரவு வந்தது சென்னைலருந்து”

“என்ன சொல்ற? புரியலையே”

“ரெய்ட்ன்றது முன்னாடியே டெல்லில முடிவாகிருச்சு. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேத்து சென்னைக்கு வந்திருந்தாங்க. அப்பதான் நாளைக்கு ரெய்ட்னு சென்னை அலுவலகத்துக்கு உத்தரவு போட்டாங்கனு அதிகாரிகள் லெவல்ல பேச்சு இருக்கு. செந்தில் பாலாஜி பத்தின ஃபுல் ரெகார்டை ஐடி டிபார்ட்மெண்ட் எடுத்து வச்சிருக்கு”

“இனி செந்தில் பாலாஜிக்கு சிக்கலா?”

“ஆமாம். டாஸ்மாக்ல ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய், இருபது ரூபாய் ஜாஸ்தியா வாங்குறாங்கன்றது இப்ப பிரச்சினையாச்சுல. இது எப்பவும் நடக்கிற விஷயம்தான். அதிமுக ஆட்சியிலேயும் அதிக காசு வாங்கிறது இருந்துச்சு. ஆனா இவ்வளவு அதிகமா காசு வாங்க மாட்டாங்க. இப்படி அதிகமா கலெக்ட் பண்ற பணம் எங்க போறதுங்கிறதை கண்டுபிடிக்கணும்னுதான் வந்திருக்காங்க. இதில ஏதாவது விஷயம் கிடைச்சா அடுத்து அமலாக்கத் துறை வரும். அமலாக்கத் துறைக்கு வழக்கு மாறுனா செந்தில் பாலாஜிக்கும் திமுகவுக்கும் கஷ்டம்னு அறிவாலயத்துல பேச்சு”

“ஓ அதான் ஆர்.எஸ்.பாரதி உடனே செய்தியாளர்களை சந்திச்சு மறுப்பு கொடுத்தாரா?”

”ஆமாம். திமுக கொஞ்சம் பதற்றத்துலதான் இருக்கு”

”ரெய்டுக்கு வந்த அதிகாரிகளை தாக்கியிருக்காங்களே?”

“அது அடுத்த பிரச்சினை. வீட்டுக் கதவைத் திறக்கிறதுக்குள்ள கேட் ஏறி உள்ள குதிக்க பாத்தாங்க. அதனால அங்கிருந்தவங்க எதிர்த்தாங்கனு செந்தில் பாலாஜி சொல்றார். ஊர் மக்கள்தான் எதிர்த்தாங்கனு திமுக தரப்புல சொல்றாங்க. ஆனா அதிகாரிகளைத் தாக்கின விஷயத்துல மாட்டுனவங்க மேல கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்னு சொல்றாங்க”

”செந்தில் பாலாஜி என்ன சொல்றார்?”

”அவருடைய ஆதரவாளர்கள் அதிகாரிகள் காரையெல்லாம் அடிச்சு உடைச்சது அவருக்குப் பிடிக்கல. ‘இருக்கற டென்ஷன் போதாதுன்னு நீங்க வேற குடைச்சல் கொடுக்கறீங்களே’ன்னு ஆதரவாளர்களை போன்ல கூப்ட்டு சத்தம் போட்டிருக்கார். ஆனா இன்னொரு விஷயத்துல அவர் சந்தோஷமா இருக்கார்.”

“வீட்ல ரெய்ட் நடந்ததுக்கு அவர் ஏன் சந்தோஷப்படணும்?”

“முதல்வர் வெளிநாடு போகும்போது விமான நிலையத்துல செந்தில்பாலாஜி கிட்ட முகம் கொடுத்து பேசலையாம். அதனால கூடிய சீக்கிரம் அவரோட பதவி பறிக்கப்படலாம்னு திமுக மூத்த அமைச்சர்கள் மத்தியில பேச்சு இருந்துச்சு. ஆனா இப்ப தன்னோட வீட்ல நடந்த ரெய்டால முதல்வர் மனசுல தனக்கு அனுதாபம் ஏற்பட்டிருக்கும். அது தன்னோட பதவியைக் காப்பாத்தும்னு செந்தில் பாலாஜி நம்பறார் போல தன்னோட நெருக்கமானவர்கள்கிட்ட சொல்லியிருக்கிறார்”

“முதல்வர் வெளிநாட்ல இருந்து வந்த பிறகு திமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவார்கள்னு ஒரு பேச்சு இருக்கே?”

”சில மாவட்ட செயலாளர்கள் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் வேணும்னு கேட்டிருக்காங்க. இதைப்பத்தி துரைமுருகன் சொன்னதும் முதல்வர் கொதிச்சுப் போயிட்டாராம். “உறுப்பினர் சேர்க்கையில் இப்போதைக்கு அதிமுகதான் சுறுசுறுப்பா செயல்பட்டு வருது. இத்தனைக்கும் அவங்க எதிர்க்கட்சி. நாம ஆளும்கட்சியா இருக்கோம். இந்த ஆட்சியால மாவட்ட செயலாளர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்குதுன்னு எனக்கு தெரியும். நீங்கதானே பொதுச் செயலாளர். அதனால இந்த விஷயத்துல நீங்களே முடிவு செய்யுங்க. இப்படியே போனா நான் மாவட்ட செயலாளர்களை மாத்தி ஒரு புதிய பட்டியல் தருவேன் அப்ப நீங்க சிபாரிசுக்கு என்கிட்ட வரக்கூடாது’ன்னு சொல்லி இருக்கார். இதைக் கேட்டதும் துரைமுருகனுக்கு நாம ஏன் இதுபத்தி முதல்வர்கிட்ட கேட்டோம்னு ஆகிடுச்சாம். முதல்வர் சொன்னதை அப்படியே வாய்தா கேட்ட மாவட்ட செயலாளர்கள்கிட்ட அவர் சொல்லி இருக்காரு.. முதல்வர் சொன்ன நேரத்துக்குள்ள எப்படி உறுப்பினர்களை சேர்க்கறதுன்னு அவங்க குழம்பிட்டு இருக்காங்க.”

“துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவும் வாய்ப்பு இருக்கறதா பேசிக்கறாங்களே?”

“உதயநிதியை துணை முதல்வர் ஆக்கறதுதான் முக்கிய திட்டம். ஆனா அவரை மட்டும் துணை முதல்வர் ஆக்கினா மக்கள் தப்பா பேசுவாங்களோன்னு துரைமுருகனையும் துணை முதல்வராக்க முதல்வர் குடும்பம் திட்டமிட்டு இருக்கறதா சொல்றாங்க. ஆனா இன்னொரு தரப்பினர் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகுதான் இந்த மாற்றங்கள் இருக்கும்னு சொல்றாங்க.”

“அரசியலுக்கு வர்றதைப் பத்தி நடிகர் விஜய் தீவிரமா யோசிச்சிட்டு இருக்கறதா செய்தி வருதே?”

“அரசியலுக்கு வர திட்டமிட்டாலும், இந்த விஷயத்துல கமல்ஹாசன் ரஜினிகாந்த்க்கு ஏற்பட்ட சறுக்கல்களைப் பத்தியும் விஜய் யோசிச்சு இருக்காரு. அதனால படிப்படியா அரசியலுக்கு வர அவர் திட்டமிட்டு இருக்காரு. முதல் கட்டமா உலக பட்டினி தினமான மே 28-ம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்புல 234 தொகுதிகள்லயும் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்க ஆலோசனை சொல்லியிருக்கார். கூடவே அதுக்காக செலவுக்கு யார்கிட்டயும் வசூல் பண்ணக் கூடாதுன்னும் சொல்லி இருக்கார். அவரே முழு செலவையும் ஏத்துக்கறார். தமிழ்நாடு மட்டுமில்லாம தென்னிந்திய மாநிலங்கள் எல்லாத்துலயும் இதை நடைமுறைப்படுத்த சொல்லி இருக்கார். அதோட தமிழகத்துல பிளஸ் 2 மற்றும் பத்தாவது வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் வாங்குன 1,500 மாணவர்களை அழைச்சு கவுரவிச்சு மேற்கொண்டு படிக்க நிதியுதவி செய்யவும் ஏற்பாடு செஞ்சுட்டு வர்றார். எல்லா திட்டமும் சரியா போனா நாடாளுமன்றத் தேர்தல்ல 5 தொகுதிகள்ல விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்கிறார்கள்”

“பாஜக நியூஸ் ஏதாவது வச்சிருப்பியே? நேத்து வேற திடீர்னு நிர்மலா சீதாராமன் சென்னைல செய்தியாளர் சந்திப்பு நடத்துனாங்க. ஆர்.என்.ரவி.. தமிழிசை, இல.கணேசன்ன்னு மூணு கவர்னரோடு. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேற இருந்தார்.. என்ன திடீர்னு”

“நாடாளுமன்ற செங்கோல் விவகாரம்தான்”

“என்னாச்சு? அதான் உம்மிடி பங்காரு நகைக் கடைலருந்து சூப்பரா போகுதே?”

“அதான் பிரச்சினை. இப்ப அந்த செங்கோல் பத்தி நிறைய கேள்விகள் கேக்குறாங்க. அதையெல்லாம் சமாளிக்கிறதுக்காக அவசர அவசரமா பிரஸ்மீட் நடத்துனாங்க. திடீர் பிரஸ் மீட். செங்கோல், நாடாளுமன்றத் திறப்புக்கு குடியரசுத் தலைவரை கூப்பிடாதது பத்திலாம் பேசுனாங்க”

“சேகர் பாபுவும் கலந்துக்கிட்டாரே..இந்த பிரஸ் மீட்ல எப்படி அவரு?”

“தமிழ்நாட்டு செங்கோல் பத்தின விஷயம், ஆதீனம் கொடுத்திருக்காங்க அதனால அமைச்சர்கள் வரணும்னு ராஜ்பவன்லருந்து அழைப்பு வந்திருக்கு. சிஎம் ஊர்ல இல்லாத நேரத்தில இதுல கலந்துக்கலாமா வேண்டாமானு குழப்பம். சிங்கப்பூர்லருந்த சிஎம்கிட்ட கேட்டுருக்காங்க. கூப்பிடுறாங்க..போய்ட்டு வாங்கனு சொல்லியிருக்கிறார்”

“நிர்மலா சீதாராமன்கிட்ட சேகர் பாபு பேசினாரா?”

“நிர்மலா சீதாராமன்தான் சேகர்பாபுகிட்ட பேசுனாங்க. திடீர்னு கூப்பிட்ட போதும் வந்திட்டிங்க. ரொம்ப தேங்க்ஸ் அதே மாதிரி நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு வந்திருங்கனு சொன்னாங்க”

”அண்ணாமலை இந்த சந்திப்புல இல்லையே.. என்ன காரணம்?”

“அவர் வந்தா ஏதாவது ஏடாகூடாம பேசி பிரச்சினையாக்கிடுவார்னு அவரைக் கூப்பிடலனு சொல்றாங்க.

அண்ணாமலைக்கு எதிரா கமலாலயத்துல தொடர்ந்து காய்கள் நகர்த்தப்படுது. ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிகள்லயும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை மண்டல பொறுப்பாளராவும், தொகுதி பொறுப்பாளராவும் கேசவ விநாயகம் நியமிச்சு வச்சிருந்தார்”

“எப்பவுமே ஆர்எஸ்எஸ்காரங்கதானே இந்தப் பொறுப்புல இருப்பாங்க?”

“முன்பு அப்படி இருந்தது. இப்ப எல்லோரையும் அப்படி பொறுப்பாளாரா நியமிச்சாங்க. ஆனா திரும்பவும் ஆர்.எஸ்.எஸ் ஆளுங்ககிட்டேயே பொறுப்பைக் கொடுத்திருக்காங்க. இவங்க அந்தத் தொகுதியோட சாதக பாதகங்களை கட்சித் தலைமைகிட்ட சொல்வாங்களாம். கட்சிக்காரங்ககிட்ட பொறுப்பு கொடுத்தா அவங்க நியாயமா பண்றதில்லையாம். இப்ப அவங்க ஒரு அறிக்கை கொடுத்திருக்காங்க”

“என்ன அறிக்கை?”

“சாதக பாதக அறிக்கைதான். அதுல தமிழ்நாட்டுல பாஜகவின் செல்வாக்கு அதிகரிச்சுருக்குனு சொல்லியிருக்காங்களாம் கூடவே அண்ணாமலை செல்வாக்கு சரிஞ்சிருக்குன்னும் சொல்லியிருப்பதாக கமலாலயத் தகவல். இதை கேசவவிநாயகம் டெல்லி தலைமைக்கு அனுப்பியிருப்பதாகவும் சொல்றாங்க”

”அப்ப அண்ணாமலைக்கு சிக்கல்னு சொல்ற”

“அண்ணாமலைக்கு இந்த சிக்கல் எல்லாம் சிப்ஸ் சாப்பிடற மாதிரி” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...