No menu items!

CSK vs RCB – ஜெயிக்கப் போவது யாரு?

CSK vs RCB – ஜெயிக்கப் போவது யாரு?

ஐபிஎல் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய எதிரி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு. ஒரு பக்கம் தோனி, மறுபக்கம் விராட் கோலி என்று இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் இரு வீர்ர்களும் ஆளுக்கொரு பக்கமாய் நிற்பதால் இந்த அணிகள் மோதும் போட்டிகளில் அனல் பறப்பது வழக்கம். அதனாலேயே ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே இந்த இரு அணிகளையும் மோத விட்டிருக்கிறார்கள்.

வரலாறு நம் பக்கம்:

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை நடக்கும் போட்டியில் சிஎஸ்கேவுடன் உரசப் போகிறது ஆர்சிபி. இந்த இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 31 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் சிஎஸ்கே 20 போட்டிகளில் ஜெயிக்க, ஆர்சிபி 10 போட்டிகளில் ஜெயித்துள்ளது. ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால வரலாற்றை வைத்து பார்த்தால் சிஎஸ்கே அணியின் கைதான் ஓங்கி இருக்கிறது. அதே நிலை இந்த தொடரிலும் நீடிக்க வேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் ஆசை.

சிஎஸ்கேவின் பலமும் பலவீனமும்:

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை அதன் மிகப்பெரிய பலம் பேட்டிங். தொடக்க ஆட்டக்காரர் முதல் கடைசியில் 11-வது இடத்தில் களம் இறங்கும் பந்துவீச்சாளர் வரை எல்லோரும் சிக்சர் அடிக்கும் ஆற்றல் கொண்டவர்களாய் இருப்பது சிஎஸ்கேவுக்கு கிடைத்த வரம். கடந்த ஐபிஎல்லில் சிறப்பான தொடக்கத்தைத் தந்த டெவன் கான்வே இந்த தொடரில் காயத்தால் ஆடாவிட்டாலும் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, டெரில் மிட்செல், தோனி என அடுத்தடுத்து அதிரடி காட்ட பேட்ஸ்மேன்கள் காத்திருக்கிறார்கள்.

ஆனால் பேட்டிங்கில் வலிமையாக இருக்கும் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது. கடந்த தொடரில் ஓரளவு ஆக்ரோஷமாக பந்து வீசிய பதிரணா காயமடைய, புதிதாக வாங்கிய முஸ்தபிசுரும் காயத்தால் ஆடுவது சந்தேகமாக இருக்கிறது. அதனால் மிதவேகப் பந்துவீச்சாளர்களான ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர் ஆகியோரைக் கொண்டு சமாளிக்க வேண்டியிருக்கிறது. அதேபோல் பெரும்பாலும் வயதான வீர்ர்களைக் கொண்டிருப்பதால், சிஎஸ்கேவின் பீல்டிங்கும் கொஞ்சம் சொதப்பல்தான்.

விராட் கோலிக்கு சவால்:

இந்த ஐபிஎல் தொடர் ஆர்சிபி அணிக்கு சவாலாக இருக்குமோ இல்லையோ, விராட் கோலிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஓராண்டாக டி20 போட்டிகளில் விராட் கோலி சொல்லிக்கொள்ளும் வகையில் பெரிதாக சாதிக்கவில்லை. டி20 போட்டிகளுக்கு ஸ்டிரைக் ரேட் பெரிதாக தேவைப்படும். ஆனால் சமீப காலமாக விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட்டும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

அதனால் டி20 உலகக் கோப்பை தொடரில் கோலிக்கு பதில் இளம் வீர்ர்களையே தேர்ந்தெடுக்க இந்திய அணியின் தேர்வாளர்கள் விரும்புகிறார்கள். சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, ஸ்ரேயஸ் ஐயர், ரிங்கு சிங் என பல வீர்ர்கள் அணிவகுத்து நிற்கும் நிலையில், அவர்களை கடந்து இந்திய அணிக்குள் இடம்பிடிக்க வேண்டுமென்றால் விராட் கோலி இந்த ஐபிஎல்லில் பெரிதாக சாதிக்கவேண்டி இருக்கிறது.

விராட் கோலி இந்த சவாலில் வென்று ஆர்சிபி அணியை ஜெயிக்க வைப்பாரா? ஆர்சிபியின் சவாலை சென்னை சிங்கங்கள் எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்விக்கு நாளை விடை கிடைக்கும்.

போலி டிக்கெட் பிரச்சினை:

சில மாதங்களுக்கு முன் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் கச்சேரியில் போலி டிக்கெட்களால் ரசிகர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது அதே பிரச்சினை ஐபிஎல் தொடருக்கும் வந்துள்ளது. சென்னையில் நாளை நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிக்கான போலி டிக்கெட்களை சிலர் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர். ஒரு பக்கம் 1,700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் பிளாக்கில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட, மறுபக்கம் லிஸ்டிலேயே இல்லாத 1,650 ரூபாய் டிக்கெட்கள் போலியாக இணையத்தில் விற்கப்பட்டுள்ளன. ஆசையாய் இதை வாங்கியவர்கள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்டாண்டைப் பார்த்த்தும் அதிர்ச்சியாகி உள்ளனர். டிக்கெட்டில் குறிப்பிடப்பட்ட ஏ+ ஸ்டாண்டே மைதானத்தில் இல்லை என்பதுதான் அவர்களின் அதிர்ச்சிக்கு காரணம். போலியான சில வலைதளங்களில் இந்த டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளன. இது தொடர்பானவர்களை தண்டிக்க வேண்டும் என்பதே சென்னை கிரிக்கெட் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...